Monday, 14 September 2026

மண்ட பத்திரம்!

மழை வேண்டி

மண்டையில் தேங்காய் உடைக்கும்

மர மண்டைகளே!


தேங்காய் உடைத்தால்

மேகம் உடையுமா?


எலுமிச்சை உருட்டினால்

வானம் உருகுமா?


ஆடு வெட்டினால்

ஆகாயம் அழுமா?


முடி இறக்கினால்

மழை இறங்குமா?


மழை வர வேண்டி

உங்கள் மண்டையை உடைத்தால்

மழை வருமென்றால்—

அந்த மழையின் பயனை நுகர

உங்களுக்கு மண்டை வேண்டுமே!


மண்டை உடைந்து

மழையாக ரத்தம் வழிந்தால்

மறக்காமல் வந்திடுங்கள்

மருத்துவமனைக்கு…

மறுக்காமல் பார்த்திடுவோம்

மருத்துவம்!


ஆனால்—

மழை வர வேண்டி

மண்டையை உடைக்கும் முன்

அந்த மண்டையில் கொஞ்சம்

சிந்தித்திடுங்கள்!


காடுகளை வெட்டியது யார்?

ஏரிகளைத் தூர்த்தது யார்?

குளங்களை ஆக்கிரமித்தது யார்?

ஆறுகளின் பாதையை

அடைத்தது யார்?


பதில் தெரிந்தும்

பரிகாரம் தேடும்

மாங்காய் மடையர்களே!


மழை என்பது

மந்திரத்தின் விளைவு அல்ல;

நீராவி, மேகம், காற்று,

வெப்பநிலை—

இவைகளின் அறிவியல் கூட்டு!


வானத்தைப் பார்த்து

வரம் கேட்பதைவிட

வானிலை அறிவியலைப் படியுங்கள்!


தேங்காய் உடைத்து உங்கள்

தெய்வத்தை வழிபடும் முன்

தேசத்தின் அரசியலைக்

கொஞ்சம் படியுங்கள்!


உங்களின் மூடநம்பிக்கைகளை

நீங்களாக மட்டும் வளர்த்துக் கொள்ளவில்லை!

அது காலந் தோறும் வளர்த்தெடுக்கப்படுகிற 

வர்க்க அரசியலின் ஒரு பகுதி


அறிவு வளராத காலத்தில்

ஆயிரம் நம்பிக்கைகள் இருந்தன.


இதற்கு இப்படிச் செய்தால்

இன்னது நடக்கும் என்றும்

இதற்கு இதுதான் காரணமென்றும்

இட்டுக்கட்டிச் சொன்னதெல்லம் 

அன்றைக்கு நம்பியது

அவர்களின் தவறல்ல!


அறிவியல் வளர்ந்த இக்காலத்திலும்

ஆயிரம் தவறான நம்பிக்கைகளை 

மண்டையில் சுமந்து திரிவது தான் தவறு!!


ஆதியிலிருந்து தொடரும்

பயணமும் படிப்பும்

பாதி மனிதனை மட்டுமே 

மாற்றி இருக்கிறது!


மீதி மனிதனையும் - சமூக

நீதி மனிதனாக மாற்ற

மக்கள் அறிவியலைக்

கையிலெடுப்போம்!

பொதுமை அரசியலை

முன்னெடுப்போம்!!


ஆதாரமற்ற  

பயத்தில் தலைகுனியும்

தலைமுறையல்ல—

காரணம் கேட்கும் 

புதிய தலைமுறையை 

உருவாக்குவோம்!


மூடநம்பிக்கை

“நம்பு” என்கிறது;

அறிவியல்

“ஆதாரம் காட்டு!” என்கிறது.


மூடநம்பிக்கை

“கேள்வி கேட்காதே” என்கிறது;

அறிவியல்

“கேள்விதான் அறிவின் முதல் படி!” என்கிறது.


மழைக்காகவும் மதத்துக்காகவும்

மண்டையை உடைக்காதீர்கள்;

அன்பிற்கும் அரவணைப்பிற்கும்

மண்டையைப் பயன்படுத்துங்கள்!


இயற்கையைப் புரிந்துகொள்ளுங்கள்…

அறிவியலைப் பழகுங்கள்…

பகுத்தறிவோடு வாழுங்கள்…


அன்பும் அறிவியலும்

இரு கண்களாகட்டும்

ஒவ்வொருவருக்கும் இருப்பது

ஒரு மண்டை தான்!

போனால் வராது…


மண்ட பத்திரம்!


-மாணிக்க முனிராஜ்

திட்டி விடுங்கள்

நல்லாசிரியர் விருது பெறும்

நல்லோர் பலரையும்

வரிசையில் நிற்க வைத்துப் பார்த்தால்...

விருது பெரும் விருப்பமே

விறுவிறு என்று ஓடி விடுகிறது...


சாதியவாதியும் சனாதனவாதியும்

"வேதியர் குலமே ஆசிரியராவது" 

என முத்துகள் உதிர்த்த 

கருத்தியல் கள்வனின் பெயரால்

வாங்கப்படும் விருதெமக்கு

வேண்டவே வேண்டாம்!


உள்ளொன்று வைத்துப் 

புறமொன்று காட்டி

மாணவர்களைப் பாகுபடுத்தியும்


நூறு விழுக்காடு முடிவிற்காக

மாணாக்கர் சிலரை 

பள்ளி செல்லாக் குழந்தையாக்கியும்


நாளொரு மேனியும்

பொழுதொரு வண்ணமுமாகப்

புகைப்படம் எடுத்தும்


பதிவேடு உருவாக்கிப் 

பகல் வேடம் போட்டு

பணம் பல தந்து

பணிவென்பது குணிவாகி


வெளிவேடமே பேச்சாக

விளம்பரமே மூச்சாக

விண்ணப்பித்து வாங்கும்

விருதெமக்கு

வேண்டவே வேண்டாம்!


வரிகளால் வருத்தப்படுபவர்கள்

தயவு கூர்ந்து என்னை

மன்னிக்க வேண்டாம்!


"திட்டி விடுங்கள்!!"

தித்திப்பாய் இருக்கும் எனக்கு...


நல்லாசிரியர் விருது வாங்காத,


விண்ணப்பித்து 

விலை கொடுத்து வாங்க 

விருப்பமில்லாத,


மாணாக்கர் மனதில் 

காலங்கடந்தும் 

நீங்காமல் நிலைநிற்கும்

நல்லாசிரியர்கள் அனைவருக்கும்


ஆசிரியர் தின வாழ்த்துகள்!

Tuesday, 1 September 2026

ஏ நிலா

 ஏ! நிலா!


நீ என்ன இப்படி 

காலங்காலையில்

மேக வீதியில்

நீலச் சேலை கட்டி

ஒய்யாரமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிறாய்!


அவசர அவசரமாக

என் மகள் பள்ளி கிளம்பும்

வேளையில்...

நேரங் காலமில்லாமல்

உனக்கென்ன இங்கு

வேலை?

இப்போது கிளம்பிப் போ!

சாயுங் காலத்தில்

சிவப்புச் சேலையில்

சாவகாசமாக வா!!


-மாணிக்க முனிராஜ்

Saturday, 23 August 2025

அறுபடாத தொடர் சங்கிலி


மாற்றத்தின் மணற்கேணியில்

தொட்டனைத்து ஊறிப் பரவிய

உலகின் பல படைப்புகளை

உளமாற நுகர்வது 

வாசிப்பு


வாசிப்பின் பகிர்மாணத்தில்

உழைப்பின் துளிகளில் 

வலிகளின் உதிரத்தில்

விதிர்க்கும் முத்துக்கள்

சிந்தனை


சிந்தனையின் ஆற்றலில்

செந்தண்மை ஊற்றில்

புனைவின் மிடுக்கில்

பிறக்கும் ஆக்கங்கள்

படைப்பு


படைப்பின் சாரத்தில்

கற்றலின் ஒருங்கிணைப்பில்

சமூகப் புரட்சிக்கான

செயலூக்கத்தின் சாதனைகள்

மாற்றம்


மாற்றம்  - வாசிப்பு 

வாசிப்பு - சிந்தனை 

சிந்தனை - படைப்பு 

படைப்பு - மாற்றம் 

என்பதே சமூக ஒழுங்கின்

அறுபடாத தொடர் சங்கிலி

அடிமை எதுவரை

 அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்

அடிமைப்பட்டுக் கிடக்கும் வரை

அடிமைப்படுத்துபவர்

அடிமைப்படுத்துவர்

Sunday, 20 April 2025

பண் பாடு

பயணங்கள் தான் மனிதனைப்
பக்குவப்படுத்துகிறது. 
பக்குவங்கள் தான் மனிதனைப்
பண்படுத்துகின்றன. 
பண்பாடு தான் மனிதனைப் 
பண் பாடவும் வைக்கிறது.

Friday, 11 April 2025

உயிர்

எண்ணும் எழுத்தும்
கண்ணென மட்டுமே தகும்
அன்பும் அறிவியலும்
உயிரெனத் தகும்
🌹🌹🌹

Monday, 7 April 2025

உள்ளதை நேசி

அல்லதையே யோசிக்காதே
உள்ளதை நேசி

தங்க மணம்

தங்க வில்லை கொண்டவர்க்கு
தங்க மணம் தங்கவில்லை!
தங்க மணம் கொண்டவர்க்கு
தங்க வில்லை தங்கவில்லை!!

Wednesday, 26 March 2025

நீதியிலாச் சொல்

தங்களுக்கு வாய் இருப்பதாலும், அதிகாரம் இருப்பதாலும் நீங்கள் உத்தரவிட்டே ஆக வேண்டும்..
எனக்குக் காதுகள் இருப்பதாலும், தங்களின் சார்நிலைப் பணியாளராக இருப்பதாலும் நீங்கள் சொல்வதை நான் கேட்டே ஆக வேண்டும்..

ஆனாலும்

எனக்கு மூளையும் இருப்பதாலும், அதில் சொந்த சிந்தனையும் இருப்பதாலும், என்னை வழிநடத்த எனக்கென்று கொள்கையும் இருப்பதாலும், 
அக் கொள்கையே என்னை வழி நடத்தும்...

சொல்லற்க, சொல்லில் நீதியிலாச் சொல்

Monday, 24 March 2025

தமிழ்ச் சோகை

தமிழைப் படிக்க எழுத பேச தெரிந்திருந்தும்
தமிழ்ப் பாடப் புத்தகத்தைத் தாண்டி
தமிழில் அறிவியலையும் வரலாறையும் சமூகத்தையும் 
படித்தறியும் வாகற்ற ஒரு தலைமுறை உருவாகி கண்முன்னே நிற்கிறது.

காலந்தோறும் வரும் கருவிகள் தோறும் ஏறியதால் 
வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மொழிக்கு ஏற்பட்டிருக்கும் 
ஆகப் பெரும் சோகம் எதுவெனில்
இளைய உதிரத்தில் ஏற்பட்டுள்ள 
தமிழ்ச் சோகை

Friday, 7 March 2025

சமத்துவ வாய்ப்பாடு

உலக மகளிர் தினத்தை வெறுமனே மகளிர் தினமாகக் கொண்டாடாமல் உலக உழைக்கும் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம்.

உழைக்காமல் குடும்பத்தையே சுரண்டி, குடித்துக் கூத்தடித்து, குடும்பத்தை அண்டி வாழும் ஆண்கள் வேண்டுமானால் உண்டு. உழைக்காத பெண் ஒருவர் உலகில் இல்லை.

வேலைக்குப் போகும் பெண்கள் அனைவரும் பணியிடங்களில் தங்கள் உழைப்பைச் செலுத்துவது மட்டும் அல்லாமல் பணி முடித்து வீட்டுக்கு வந்த பின்பு வீட்டில் இருக்கும் பணிகளையும் கவனித்து *இரட்டை உழைப்பை* ஒவ்வொரு நாளும் செலுத்தி வருகின்றனர்.

குடும்பங்களைப் பராமரித்து வரும் பல பெண்களை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டால் "நான் எந்த வேலைக்கும் செல்வதில்லை. வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்" என்று சாதாரணமாகக் கூறுவார்கள்.

உழைக்கும் மகளிர் என்பதில் உள்ள 'உழைக்கும்' என்ற சொல்லை, 'பொருளாதார ரீதியாக பணம் ஈட்டும்' என்று மட்டுமே பொருள் கொள்ளக்கூடாது.

ஏனென்றால் குடும்பத்தில் உள்ள அனைவரின் உற்பத்தித் திறனுக்கும் உந்து விசை அளிக்கும் பெண்ணின் உழைப்புக்கு ஊதியம் கணக்கிட்டால்தான், வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பின் மதிப்பு எவ்வளவு என்று தெரியும்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சமீபத்திய அறிக்கையில், "வீட்டு வேலைகளைச் செய்யும் அனைத்து பெண்களுக்கும் அவர்களின் வேலைக்கான ஊதியம் வழங்கப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் மொத்தத் தொகை இந்தியாவின் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 விழுக்காட்டுக்கு நிகராக இருக்கும்" என்கிறது.

"15 முதல் 60 வயது வரை உள்ள இந்தியப் பெண்கள் தங்கள் தினசரி நேரத்தில் சுமார் 7.2 மணி நேரத்தை வீட்டு வேலையில் செலவிடுகிறார்கள் என்பதால் பெண்களுக்கு ஓய்வெடுக்கக் கூட நேரம் கிடைக்காத “நேர வறுமை” இருக்கிறது" என்று ஐஐஎம்ஏ பேராசிரியர் நம்ரதா சிந்தார்கர் கூறுகிறார்.

பெண்களுக்கான இந்த நேர வறுமையைப் போக்க வீட்டு வேலைகள் பலவும் சமூக வேலைகளாக மடை மாற்றம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக சோஷியல் கிட்சன் என்று சொல்லப்படும் ஆரோக்கியமான சத்தான சமூக உணவு தயாரிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அது சாத்தியமாக முதலில் வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தும் வீட்டில் உள்ள ஆண், பெண் நபர்கள் அனைவருக்கும், அவரவர்களின் வயது மற்றும் சக்திக்கேற்ப சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக குழந்தை வளர்ப்பில் பாலினப் பாகுபாட்டை அறவே ஒழிக்கும் வகையில், வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, சுத்தமாகப் பராமரிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற அன்றாட அடிப்படைப் பணிகளை ஆண், பெண் குழந்தைகளுக்கு மாற்றி மாற்றி அளித்து பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் பெண்களின் வேலைகள் என்கிற பிற்போக்குச் சிந்தனையை ஆண் குழந்தைகளின் மூளைகளில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.

பெண்ணை ஆணுக்கு அடிமை என்று சொல்லி பேதப்படுத்தும் புராண, இதிகாசக் கசடுகள் குழந்தைகளிடம் சேராமல் தடுக்கப்பட வேண்டும். சமத்துவமின்மை எனும் பிற்போக்குத்தனத்தைப் பயிற்றுவிக்கும், நியாயப்படுத்தும் எதுவும் சமூக முன்னேற்றத்திற்கான தடைக்கற்களே என்பதை நமது அடுத்த தலைமுறைக்குப் புரிய வைப்போம். தடைகளை உண்டாக்கும் தாடைகள் பெண்களின் கைகளால் நாளை உடைபடும்.

அரசியல் சமத்துவத்துக்கான வாய்ப்பாடு சமூக சமத்துவத்தில் அடங்கியிருக்கிறது. சமூக சமத்துவத்துக்கான வாய்ப்பாடு பாலின சமத்துவத்தில் அடங்கியிருக்கிறது. பாலின சமத்துவத்துக்கான வாய்ப்பாடு வீட்டில் உள்ள குழந்தைகளை சமத்துவமாக வளர்ப்பதில் அடங்கியிருக்கிறது. ஆகவெ நாம் அனைவரும் "ஆணும் பெண்ணும் ஒன்னு - அதை மறுப்பவர் தலையில மண்ணு" எனும் சமத்துவ வாய்ப்பாட்டைப் பயில்வோம். அனைவரும் மகிழ்வோம்.

உழைக்காத மகளிர் உலகில் இல்லை!

மகளிர் உழைக்காமல் உலகே இல்லை!!

உழைப்பே உருவான மகளிர் அனைவருக்கும்
உலக உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

-மாணிக்க முனிராஜ்

Tuesday, 17 September 2024

ஆய்வுச் சூடி

அறிவியல் மனம் கொள்
ஆராய்ந்து தினம் வெல்
இருத்தல் ஒன்றே மெய்
ஈசன்நீ யல்லால் பொய்

உருட்டு இதுவென உணர்
ஊர்தோறும் பொய்களைத் தகர்
எதையும் வினவத் துணி
ஏனெனக் கேட்பதே அணி

ஐயம் அறுத்து சொல்க
ஒன்றே மனிதம் வெல்க
ஓங்கி முழங்கி வருக
ஒளவில் பொதுமை தருக

- மாணிக்க முனிராஜ்

Friday, 1 September 2023

வேற்றுமையா? பாகுபாடா?

வேற்றுமையா? பாகுபாடா?

மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்களை ஒட்டி தயாரிக்கப்பட்டுள்ள ஒரு துண்டு பிரசுரத்தில் ”வேற்றுமையை ஒழிப்போம்” என்று சொல்லாடல் கையாளப்பட்டிருந்தது. இது முற்றிலும் தவறான சொல்லாடல்.

வேற்றுமை என்பது இயற்கையில் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பது. ஆண் - பெண், பள்ளம் - மேடு, நீர் - நெருப்பு, செடி - மரம் என்றவாறு பலவகையாக வேற்றுமைகள் உண்டு. இவையனைத்தும் இயற்கையானவை இயல்பானவை.

பாகுபாடு என்பது செயற்கையில் ஒன்றை உருவாக்கி, தான் வாழ பிறரைச் சுரண்டுவது. மேல் கீழான எண்ணத்துடன் பிறரை மதிப்பது, நடத்துவது, பின்பற்றுவது.

நீங்கள் வெள்ளை நான் கருப்பு என்பது வேற்றுமை,
வெள்ளை அழகு, கருப்பு அசிங்கம் என்பது பாகுபாடு.

நீங்கள் உயரம் நான் குட்டை என்பது வேற்றுமை,
உயரம் பெருமை, குட்டை சிறுமை என்பது பாகுபாடு.

நீங்கள் கிராமம் நான் நகரம் என்பது வேற்றுமை,
கிராமத்தான் நாகரிகம் குறைவானவனாகவும், நகரத்தான் மேட்டிமை மிக்கவனாகவும் கருதுவது பாகுபாடு.

இன்னும் ஆம்பள-பொட்டச்சி என்பதும், மேல்சாதி- கீழ்சாதி என்பதும், பலசாலி-நோஞ்சான் என்பதும் பாகுபாடு.

மாற்றுத்திறனாளிகளை நொண்டி, குருடு, செவிடு, ஊமை என்பதும், மாற்றுப்பாலினத்தவரை ஒம்பது, அலி, அது என்பதும் பாகுபாட்டுச் சொற்கள்.

இவ்வாறான பாகுபாட்டுச் சொற்களை எந்தவித சமூக அக்கறையும் இன்றி பயன்படுத்துவதும், அவ்வாறான பாகுபாட்டு மனநிலையில் உழல்வதும், பிறரைப் பாகுபடுத்திப் பேசுவதை, பழகுவதை தன்னுடைய அன்றாட நடத்தையில் வைத்துக் கொண்டு வாழ்வதும் முற்றிலும் தவறானது. அறநெறிக்கு மாறானது.

ஆகவே நாம் ஒழிக்க வேண்டியது பாகுபாட்டை மட்டுமே. வேற்றுமையை அல்ல. மாறாக வேற்றுமைகளைப் போற்ற வேண்டும். ஒழிக்கக் கூடாது.

"வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்" ("Unity in Diversity") எனும் சொற்றொடரை நினைவில் கொண்டுவர வேண்டிய அதே வேளையில், ”பாகுபாடு ஒரு பாவச் செயல்” (”Discrimination is a Sin") என்ற பதத்தையும் நம் மனதில் ஆழப் பதிவு செய்வோம்.

பாகுபாட்டை ஒழிப்போம்.
பாகுபாட்டை வேரறுப்போம்.
பாகுபாடற்ற சமூகம் படைப்போம்.

- மாணிக்க முனிராஜ்

Saturday, 22 July 2023

பிறந்தநாள் வாழ்த்து

 

என் அன்பு மக்கா...

பிறந்தநாள் வாழ்த்து

🌹🌹🌹❤️🌹🌹🌹


உறவுகளோடு 

உன்னை இணைத்துக்கொள்


உண்மைகளோடு

உன்னைப்

பிணைத்துக்கொள்


புத்தகங்களோடு

உன்னைப்

புதைத்துக்கொள்


மகிழ்ச்சியான வாழ்வில்

உன்னை

விதைத்துக்கொள்


அதற்கு முதலில்

மூடநம்பிக்கைகளை உன்னிலிருந்து 

சிதைத்துக் கொல்.


எதையும் கேள்வி கேள்

எதற்கும் பதில் தேடு


கல்வியைக் காதலி

காதலைக் கற்றுக்கொள்.


வெள்ளையாக இருப்பதும்

வசதியாக இருப்பதும்

அல்ல 

அழகு


உண்மையாக இருப்பதும்

உழைத்துப் பிழைப்பதும் தான்

அழகு.


பிறரிடம் நீ ஏற்றுக்கொள்வதையே

பிறருக்காக நீயும் செய்


எல்லாரோடும் மகிழ்ந்து சிரி

உண்மை 

இல்லாரோடு இகழ்ந்து பிரி


உன்னால் தெளிவாக விளக்க முடியாததை -

நீ இன்னும் புரிந்து

கற்றுக் கொள்ளவில்லை


உன்னால் திடமாக சாதிக்க முடியாததை -

நீ இன்னும் முறையாகப் 

பயிலவில்லை.


எல்லாவற்றையும் -

ஐயத்தில் தொடங்கு

அறிவில் பயணி

விவாதித்துப் பழகு

உத்தேசமாகச் சிந்தி

ஆலோசித்து முடிவெடு

அன்பில் முடித்திடு.


அறிவியலோடு ஒட்டாத எதையும் ஏற்றுக்கொள்ள 

மறு


அது அன்பின்பாற்பட்டதாக இருந்தால் மட்டும் கொஞ்சம்

பொறு


அன்பையும் அறிவியலையும் 

இரு கண்களாகக் கொண்டு

இரு.


❤️❤️❤️🌹❤️❤️❤️


என்றென்றைக்குமான எனது 

அடுத்த தலைமுறைக்கான 

பிறந்தநாள் வாழ்த்து செய்தி இது

Friday, 2 September 2022

பந்தாடப்படும் பயிற்றுநர்கள் - தீவிழி

 பந்தாடப்படும் பயிற்றுநர்கள் - தீவிழி


யார் இந்த ஆசிரியர் பயிற்றுநர்கள்?

ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான களப்பணியாளர்களாக 2001-02-ஆம் கல்வியாண்டு முதல் நிர்ணயிக்கப்பட்ட திட்டக் குறிக்கோள்களுக்காகப்  பணியாற்றி வருபவர்கள்தான் இந்த ஆசிரியர் பயிற்றுநர்கள்.


6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் இடைவிலகலைத் தடுத்து, பள்ளிச் சேர்க்கையில் ஆண் பெண் பாலினப் பாகுபாட்டைத் தவிர்த்து, எட்டாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் கட்டாயமாக இலவசமாக தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்யவந்த இந்தத் திட்டமானது ஒரு கிலோ மீட்டருக்குள் ஒரு தொடக்கப்பள்ளி, 3 கிலோ மீட்டருக்குள் ஒரு உயர் தொடக்கப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கிலோ மீட்டருக்குள் ஒரு மேல்நிலைப்பள்ளியை மிகக் குறிப்பாக உறுதி செய்துள்ளது.


"வீதிதோறும் இரண்டொரு பள்ளி" எனும் பாரதியின் வரிகளுக்கு ஒப்ப, ஊர்தோறும் ஒரு பள்ளி தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டிய திட்டத்தின் முதுகெலும்பாய் இருப்பவர்கள்தான் இந்த ஆசிரியர் பயிற்றுநர்கள். இத்திட்டமானது தற்போது ஒருங்கிணைந்த கல்வியாக (சமக்ர சிக்ஷா) நடைமுறையில் உள்ளது. 


பந்தாடப்படும் ஆசிரியர் பயிற்றுநர்கள்: 

மாநிலத்தில் வேறெந்த பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடந்திராத ஒரு விநோதமான பொதுமாறுதல் நடைமுறை ஆசிரியர் பயிற்றுநர்களின் மீது மட்டும் வலுக்கட்டாயமாகத்  திணிக்கப்படுகிறது. 18.8.2021 அன்று பள்ளிக்கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்ட அரசாணை எண் 134-ஆனது ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது இத்தகைய தாக்குதலைத் தொடுத்துள்ளது.  


பொதுமாறுதல் என்பதற்கு ஜீரோ கவுன்சிலிங் என்று புதிதாகப் பொருள்கொள்ளும் விதமாகத் தொடர்ச்சியாக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் செயல்முறைகள் வெளியிடப்படுகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு மாவட்ட அளவில் இதுபோன்றதொரு ஜீரோ கவுன்சிலிங் ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென வலுக்கட்டாயமாகத்  திணிக்கப்பட்டது.  


அப்போதிருந்த நிர்வாகத்திற்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை. முற்றிலும் புதிய நடைமுறையாக இதைத் திணித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் அவரவர் சொந்த இடங்களில் பணிபுரிய முடியாத வண்ணம் நிர்வாகத்தால் பந்தாடப்பட்டனர். இந்தப் பணிநிரவல் காரணமாக சுமார் 400 ஆசிரியர் பயிற்றுநர்கள் தென் மாவட்டங்களிலிருந்து பிய்த்தெறியப்பட்டு தொலைதூரத்தில் உள்ள வடமாவட்டங்களில் பணிபுரியும் சூழல் ஏற்பட்டது.




பறிபோகும் பணியிடங்கள்:

ஏற்கனவே 887 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் முந்தைய ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், எல்லோரும் மலைபோல நம்பும் இந்த அரசும் கடந்த 15.9.2021- இல் பள்ளிக்குப் பணி மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களின் 500 பணியிடங்கள் போக  மீதமுள்ள 3193 பணியிடங்களுக்கு மட்டும் கடந்த 18.9.2021 அன்று சீனியாரிட்டி லிஸ்ட் விட்டிருப்பதன் மூலம் இந்த 500 பணியிடங்களும் பறிக்க முற்படுவது உறுதியாகின்றது. 


மாநிலம் முழுவதும் 2010-இல் ஏறத்தாழ 6000-ஆக இருந்த ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள், பத்து வருடங்கள் கழித்து இன்று பாதியாகச் சுறுக்கப்பட்டுள்ளன. ஆகவே இயல்பிலேயே பணிச்சுமை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆரம்பத்தில் ஒரு ஆசிரியர் பயிற்றுநருக்கு  பார்வையிடவும், தகவல் பெறவுமாக பத்து பள்ளிகள் இருந்தன.


இந்தப் பத்து வருடங்களில் (2010-2020) அரசுப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது என்பது மட்டும் அல்லாமல் தற்போது தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் சேர்த்து  ஒவ்வொரு ஆசிரியர் பயிற்றுநருக்கும் ஏறத்தாழ 20 முதல் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 

குறைக்கப்பட்ட பணியிடத்தின் காரணமாக  அதிகரித்துள்ள பணிப் பளு:

எமிஸ் எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறையின் கீழ் தகவல்களை தினந்தோறும் இணையவழியில் உள்ளீடு செய்வது,  திருத்தியமைப்பது, கண்காணிப்பது, ஏராளமான புள்ளிவிவரங்களை ஓரு சில மணி நேரங்களில் தொகுத்து அளிப்பது, பள்ளிக்குப் பார்வை செல்வது, பயிற்சி அளிப்பது, பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் கொண்டுபோய் சேர்ப்பிப்பது என்று எத்தனையோ வேலைகள் இருப்பினும் அவற்றை 10 பள்ளிகளுக்கு செய்த போது பணி மனநிறைவுடன் இருந்தது. 


ஆனால் குறைக்கப்பட்ட பணியிடத்தின் காரணமாக  அதிகரித்துள்ள பணிப் பளுவினால் தினசரி பம்பரமாய்ச் சுழன்றுக் கொண்டு கடமை முடித்தாலும், மனநிறைவடையாமல் இருப்பதுடன் ஒட்டுமொத்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மன அழுத்தம் கூடியுள்ளது.


கானல்நீராகும் அரசு வேலை:

ஒவ்வொரு கலந்தாய்வின்போதும்  பணியிடங்கள் படிப்படியாக சூறையாடப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு நடத்தப்படுவது போன்ற ஒரு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்குப் பதிலாக ஜீரோ கவுன்சிலிங் என்ற புதிய கலந்தாய்வு முறை ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது திணிக்கப்படுகிறது. பணி நிரவல் செய்வதற்காகவே கண்டறியப்பட்ட கலந்தாய்வு முறையாக இது உள்ளது.


ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் சூறையாடப்படுவது என்பது மறுதலையாக அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண் அள்ளிப் போடுவதே அல்லாமல் வேறில்லை. அரசு வேலை என்பது எதிர்காலத்தில் கானல்நீராகும் என்பதன் அறிகுறியாகவே இதை கவனிக்க வேண்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட்-2017-இல் 2.8% - ஆக இருந்த தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை வீதம் ஆகஸ்ட்-2021- இல் 6.8% -ஆக அதிகரித்திருக்கிறது என்று சிஎம்ஐஈ ஆய்வறிக்கை சொல்கிறது. நிரந்தர வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது.


பயிற்றுநர்கள் பரோட்டா சூரிகளா?

2014-ஆம் ஆண்டு எங்கள் மீது திணித்த பணி நிரவல் பாதிப்பிலிருந்து சற்றும் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பணி நிரவலைக் கொண்டுவந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் பாதிக்கும் வண்ணம் மாநில அளவில் ஒரு ஜீரோ கவுன்சிலிங் நடத்த முற்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. 


பணியேற்று 10 முதல் 15 வருடங்கள் கடந்த பணியாளர்களுக்கு மீண்டும் முதலிலிருந்து புதிய பணிநியமனம் தருவது போல உள்ளது. எல்லாக் கோட்டையும் அழித்துவிட்டு முதலிலிருந்து பரோட்டா சாப்பிட்ட சூரி கதையாகிப் போனது இந்தப் பயிற்றுநர்களின் நிலை. 


ஜீரோ ஜீரோதான்:

மாநில ஜீரோ கவுன்சிலிங்குக்கு பதிலாக மாவட்ட அளவில் ஜீரோ கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என்று சில சங்கங்கள் கோரிக்கை வைப்பதாக அறிகிறோம். அதுவும் பணி நிரவலே அல்லாமல் வேறில்லை. எந்த முறையிலும் எந்த அளவிலும் பணி நிரவலை இந்த அரசு செய்யக்கூடாது என்றும், பணியிடங்கள் முழுமையாகக் காட்டப்பட வேண்டும், காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தான் சங்கங்கள் செயல்பட வேண்டும். மாறாக சங்க நிர்வாகிகளுக்கு பலனளிப்பது எது என்று பார்த்தும், பணியிடங்கள் பறிபோவதை உறுதி செய்யும் 134 அரசாணை குறித்த எந்த சிரத்தையும் இல்லாமலும் செயல்படுவது வேதனைக்குரியது.  ஜீரோவை எப்படிப் பார்த்தாலும் அது ஜீரோதான். 


மாதிரிக் கள ஆய்வும் ஆசிரியர் பயிற்றுநர் மனநிலையும்:

தற்போது உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் பெரும்பான்மையாக ஜீரோ கவுன்சிலிங் வேண்டும் என்று கேட்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் உண்மை அறிய ஆசிரியர் பயிற்றுநர்களுக்குள் ஒரு மாதிரிக் கள ஆய்வு (சாம்பிள் சர்வே) நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 330 ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை உள்ளீடு செய்துள்ளனர்.


இந்த ஆய்வின்படி, 69.1% பேர்  வருடந்தோறும் ஆசிரியர்களுக்கு  நடத்துவது போன்ற பொது மாறுதல் கலந்தாய்வே ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் நடத்தப்பட வேண்டும் என்றும், 81.6% பேர் மாநில அளவில் ஜீரோ கவுன்சிலிங் நடத்தப்பட்டால் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என்றும்  கூறியுள்ளனர். இந்த சர்வேயில் 2006 முதல் 2010 வரை உள்ள ஆண்டுகளில் பணி நியமனம் பெற்ற அனைத்து வருட மற்றும் அனைத்துப் பாடங்களைச் சேர்ந்த பல்வேறு    ஆசிரியர் பயிற்றுநர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் 82.4% பேர் முன்னுரிமை எதுவும் இன்றி உள்ளனர். 




ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறுகண்ணில் சுண்ணாம்பும் வைப்பதா?

மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ ஜீரோ கவுன்சிலிங் நடத்தினால் குறிப்பாக 2009-2010-களில் பணிநியமனம் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் தொலைதூர மாவட்டங்களுக்குப் பந்தாடப்பட்டு  மீண்டும் பாதிக்கப்படுவார்கள். 2014-இல் பணிநிரவலால் பாதிக்கப்பட்ட 362 பயிற்றுநர்களுக்கு நிவாரணம் அளிக்க நினைக்கும் அரசின் எண்ணம் உள்ளபடியே மிகுந்த பாராட்டிற்குரியது. வரவேற்கத் தக்கது. ஆனால்  இவர்களுக்கு மருந்திடும் அதே அன்புக் கைகள், அதைவிட  இரட்டிப்பான  எண்ணிக்கையில் புதிதாகப் பல ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு  இன்னல்களை உருவாக்கிட விழைவது ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைப்பது போல்தான் உள்ளது. 


சாதாரணமாக ஒரு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் அதில் அதற்கு முன்பு பணி நிரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிற ஒரு நடைமுறை. ஆனால் மாநிலம் முழுக்க உள்ள ஆசிரியர் பயிற்றுநர்களை ஜீரோ கவுன்சிலிங் என்ற பெயரால் பாட வாரியான ரேங்க் அடிப்படையில் புதிதாகப் பணி நியமனம் செய்வதைப்போன்ற ஒரு கலந்தாய்வில் 362 பேருக்கு முன்னுரிமை என்பதை, அந்த 362 பேரைத் தவிர பலரும் ஏற்க மறுக்கின்றனர். குறிப்பாக இதனால் பாதிக்கப்படப்போகும் இதர 2010 நியமன ஆசிரியர் பயிற்றுநர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.



நிறைவேற்றத்தக்க எளிய கோரிக்கைகள்:

ஆசிரியர் பயிற்றுநர்களின்  கோரிக்கைகள் எளிமையாக நிறைவேற்றத் தக்கது. யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லாதது. பாதிக்கப்பட்டிருப்போருக்கு நிவாரணம் தருவது. அடிப்படையில் தொழிலாளர் நலனை விரும்பும் இந்த மாநில அரசுக்கு ஆதரவானது.


1.குறைந்தபட்சம் முந்தைய 887 பணியிடங்களுடன் சேர்த்து 1387 காலிப் பணியிடங்களை முழுமையாகக் காண்பிக்க வேண்டும்.


2.வருடம்தோறும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்வு போன்றே இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் அவரவர் விருப்பப்படி மாறுதல் கோரும்படியான  பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.


3.வருடந்தோறும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்ப வேண்டும்.


4.அதனால் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களை பள்ளிகளிலிருந்து மாறுதல் கோரும்  பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டும் புதிய நியமனங்களைக் கொண்டும் நிரப்பிட வேண்டும். பணியிடங்களைக் குறைக்காமல் வருடந்தோறும் இத்தகைய பணி மாறுதல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.


5.அவ்வாறான பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்குப் பின்பற்றப்படும் அதே நெறிமுறைகள் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும்.


- தீவிழி

theevizhi@gmail.com

Friday, 15 October 2021

மு.நீலகண்டனின் "டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்" - நூல் அறிமுகம்

மு.நீலகண்டனின் "டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்" - நூல் அறிமுகம் - மாணிக்க முனிராஜ்


டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளை மலையாகக் கற்பனை செய்துகொண்டால் அந்த மலையின் முகடுகள் ஒவ்வொன்றின் நீள அகல உயரங்களை ஒரு பருந்துப் பார்வையில் எளிமையாகப் பார்க்க வைத்து புரட்சியாளரை உள்வாங்க வைக்கும் நல்லதொரு முயற்சிதான் 'டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்' என்கிற நூல்.


புரட்சியாளர் அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஆங்கிலத்தில் 30க்கு மேற்பட்ட தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தமிழில் 37 தொகுதிகளாக இணையதளத்தில் கையடக்க ஆவணமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் சில நூறு பக்கங்கள் முதல் பல நூறு பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக உள்ளன. அவற்றையெல்லாம் வாசிக்க விரும்பும் ஆசை பலருக்கு இருந்தாலும், அவை முழுமையும் படிப்பதற்கான பக்குவமும், பொறுமையும், வாய்ப்பும் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை.


அவ்வாறானவர்களுக்கு அம்பேத்கரின் படைப்புகளை, அவரின் தேர்ந்த படைப்புகளின் சாரத்தை ஒரு தேநீர் அருந்தும் அனுபவத்தைப் போல நேர்த்தியாக அறிமுகப் படுத்தியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் மு.நீலகண்டன்.


அரசியல், பொருளியல், சட்டவியல், சமூகவியல், சமயம் என்று 5 பகுதிகளாகப் பிரித்து அம்பேத்கரின் வெவ்வேறு கால கட்டப் படைப்புகளை அவற்றின் கரு சிதையாமல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.


அரசியல்:


சௌத்பரோ குழுவிடம் அம்பேத்கர் அளித்த சாட்சியத்தில் தீண்டாதாருக்கான சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை வலியுறுத்தும்போது, "...முகமது நபியின் மதத்தை சுல்தான் மாற்ற முடியும் என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டார். போப், கிறிஸ்துவ மதத்தைக் கவிழ்த்துவிட முடியும் என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டார். அதேபோல் முக்கியமாக உயர் சாதி இந்துக்களையே கொண்ட சட்டசபை தீண்டாமையை ஒழிப்பதற்கோ, கலப்பு மணங்களை அனுமதிப்பதற்கோ, தீண்டாதார் பொது வீதிகளையும், பொதுக் கோவில்களையும், பொதுப் பள்ளிக் கூடங்களையும் பயன்படுத்த கூடாது என்ற தடையை நீக்குவதற்கோ, சுருக்கமாகச் சொன்னால் தீண்டாதார் மீது சுமத்தப்பட்டுள்ள மாசுகளை நீக்கி சுத்தப்படுத்துவதற்கு வழி செய்யும் சட்டம் எதையும் இயற்றாது." என்று குறிப்பிட்டுள்ளார். 


மேலும் "...சுயாட்சி மேல் சாதியினரின் பிறப்புரிமையாகக் கருதப்படுவதைப்போலவே, தீண்டத்தகாதாரின் பிறப்புரிமையாகவும் இருக்கிறது" என்பதை வலியுறுத்தியுள்ளார். அம்பேத்கர் தனது ஆணித்தரமான வாதத்தின் மூலம், "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் நோக்கம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்பு கொடுப்பது தான்" என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வறிக்கையின் ஒரு இடத்தில், ''இவர்கள் மற்றவர்களை போல பிறருடைய அதிகாரத்தைத் தாங்கள் கைப்பற்றிக் கொள்ள விரும்பவில்லை மாறாக சமூகத்தில் தங்களுக்குரிய இயல்பான இடம் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்." என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

அன்றைக்கு கிராமங்களில் ₹10 நிலவரி செலத்தியவர்களும், நகர்ப்புறங்களில் ₹2000க்கு வருமான வரி கட்டியவர்களும் அல்லது ₹36 வீட்டுவாடகை செலுத்தியவர்ளும், பல்கலைக் கழகங்களில் இளங்கலைப் பட்டம் பெற்று 7 ஆண்டுகளும் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டுகளும் ஆனவர்களும்தான் வாக்கு செலுத்தினர் என்ற உண்மையை, இன்றைய வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்கிற அடிப்படையுடன் ஒப்புநோக்கும்போதுதான் வாக்குரிமையின் வரலாறு எவ்வளவு வலிமிகுந்தது என்பது புரியும். 


'பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை' என்கிற ஆய்வின் வழியாக தீர்மானகரமாக 'பிரிவினை' ஒன்று தான் தீர்வு என்பதை எவ்விதமான உணர்ச்சிப் பற்றுமின்றி தெளிவுபடக் கூறியுள்ளார். 'இரானடே, காந்தி, ஜின்னா' என்கிற உரையில், "காந்தி, ஜின்னா இருவரும் வழிபாட்டு உருவங்களாகவும், மாமனிதர்களாகவும் திகழ்கிறார்கள்... தனி முதன்மை மட்டுமின்றி இருவரும் தாங்கள் தவறே இழைக்கமாட்டாதவர்கள் என்று உரிமை கொண்டாடுகின்றனர்... இவ்விருவரால் இந்திய அரசியலே உறைந்து கிடக்கிறது எனலாம்" என்று சாடுகிறார் அம்பேத்கர்.


பொருளியல்:


கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதிக்கோட்பாடும் என்கிற கட்டுரை வழியாக 'கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இந்தியாவின் பொதுக்கடன் முழுவதும் போரினால் ஏற்பட்டது" என்பதை ஆய்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சாடுகிறார். 


"முதல் என்பது நுகர்வு போக உபரியாகத் திரட்டி வைக்கப்பட்ட முந்தைய உழைப்புச் செல்வம்" என்றும் "நமது சமுதாயம் ஒரு முதல் பற்றாக்குறையான சமுதாயமாக உள்ளது" என்றும் கூறுகிறார். 


"ஒரு உழவனுக்கு தனது நிலம் தன் கையில் உள்ள பிற காரணிகளின் அளவைப் பொறுத்தே பொருளாதார உகப்பு நிலையில் பயிரிட ஏற்றதற்குச் சிறியதாகவோ பெரியதாகவோ அமையமுடியும். வெறும் நிலவுடமையின் அளவு எந்தத் தனிப் பொருளாதார அர்த்தமும் உடையது அல்ல" என்கிறார். "எனவே சிறு நிலவுடைமை பொருளாதார உகப்பு நிலை விளைச்சலுக்கு ஏற்றதல்ல என்பதும், பெருநிலவுடமை தான் பொருளாதார உகப்புநிலைக்கு ஏற்றது என்பதும் பொருளியலின் மொழியல்ல; வெற்றுச் சொற்களே" என்று மிகத் துல்லியமாக சிறு நிலவுடைமைக்கான தீர்வை வழங்கியிருக்கிறார். 


நிலத்தை பெரும்பண்ணை ஆக்குவதும் நிலச் சிதறல்களை ஒன்றாக்குவதும் ஒருங்கிணைந்த நிலவுடமையைச் சிதறாமல் தொடர்ந்து பாதுகாப்பு செய்வதற்கும் சரியான தீர்வு 'நிலத்தை தொழில் மயமாக்குவதே' ஆகும் என்பது அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை ஆகும்.


"வேளாண்மை பிரச்சனைகளின் அடிப்படைத் தீர்வின் திறவுகோல் இந்தியாவைத் தொழில்மய நாடாக்குவதிலேயே அடங்கும்" என்று 1918ஆம் ஆண்டிலேயே இந்திய வேளாண்மை குறித்த தன்னுடைய கருத்தாக்கத்தை டாக்டர் அம்பேத்கர் வெளியிட்டார் என்றும், வேளாண்மை அரசுத் தொழிலாக இருக்க வேண்டும் என பின்னாளில் அம்பேத்கர் விரும்பியதாகவும் ஆசிரியர் மு.நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார்.


"ரூபாயின் பிரச்சினை அதன் தோற்றமும் அதற்கான தீர்வும்" என்கிற ஆய்வுக்கட்டுரை பின்னாளில் "இந்திய செலாவணி மற்றும் வங்கித் தொழிலின் வரலாறு" என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 'இந்திய ரிசர்வ் வங்கி' உதயத்திலும் இந்தக் கட்டுரையின் பங்கு உள்ளது நினைவுகூரத்தக்கது. 


மிகக் கடுமையான உழைப்பின் பயனாக உருவாகிய இந்த ஆய்வுக் கட்டுரையில் "இந்தியச் செலாவணி நிர்வாகத்தில் அரசியல் ஈடுபாட்டைக் தடுக்கும் ஒரே வழி ரூபாய் நாணயங்கள் வெளியிடுவதைத் தடுப்பது அல்லது நிறுத்துவதே ஆகும். இதுதான் நமக்கு வேண்டியது. இது விந்தையாக காட்சியளிக்கலாம். பாதுகாப்பு என்பது குறிப்பிட்ட அளவுடன் நிரந்தரமாக மாற்ற முடியாத ரூபாய் வெளியிடுவதில் இருக்கிறது." என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.


சட்டவியல்:


இந்திய ஒன்றியம் என்று சொல்வதை அர்த்தமற்ற வகையில் எதிர்த்து வருபவர்கள் கவனிக்க வேண்டியது, 'இந்தியா' என்றோ 'பாரதம்' என்றோ இல்லாமல் இந்திய அரசியலமைப்பை "இந்திய ஐக்கிய மாநிலங்களின் அரசியலமைப்பு" என்ற பெயரால் குறிப்பிட டாக்டர் அம்பேத்கரும் வலியுறுத்தியுள்ளார் என்பதுதான்.


சமூகவியல்:


'இந்தியாவில் சாதிகள் அவற்றின் இயக்கமும் தோற்றமும் வளர்ச்சியும்' என்கிற ஆய்வுக் கட்டுரையில், "சாதியின் பல்வேறு இயல்புகளை ஆய்வு செய்யும்போது அகமணம் அல்லது தன் இனத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்ளும் பழக்கமே சாதியின் அடிப்படையான ஒரே இயல்பு. அதாவது கலப்புமணம் இன்மையோ அல்லது கலப்பு மனத்தடையோதான் சாதியின் சாராம்சம் ஆகும்" என்கிறார். "சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே" என்பதைத் தெளிவாக்குகிறார். 


அகமண வழக்கம் அல்லது கதவடைத்த அமைப்பு -தனித்து இயங்குவது இந்துச் சமுதாயத்தின் ஒரு போக்காக இருந்தது. அகமண வழக்கமும் பிராமணர்களிடமிருந்து பிறந்து மற்ற வர்ணத்தாருக்குப் பரவியது. பின்னர் பிராமணரல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழு விருப்பத்தோடு பின்பற்றத் தொடங்கினர். 


பிறரைப் பார்த்து அவர்களைப் போல வாழும் தொற்றுநோய்ப் பழக்கம் அனைத்துப் பிரிவினரையும் பிடித்துக் கொண்டதால், ஒருவருக்குள் ஒருவர் கலந்து பழகி வாழ்ந்து வந்தவர்கள், தங்களுக்குள் பாகுபாடுகளை வளர்த்துக் கொண்டு பிரிந்து தனித்தனி சாதிகளாயினர். என்பதே ஆய்வின் முடிவாகும்.


இந்தியாவில் சாதி முறை தோன்றி வளர்ந்ததற்குக் காரணம் மேல் நிலையில் இருந்த வகுப்பாரைப் பார்த்து கீழ் நிலையிலிருந்தோர், 'போலச் செய்ததன் விளைவு' என்று விளக்கமளிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.


"சாதிய உருவாக்கம் இயந்திரகதியில் நடந்த முறை" என்கிறார். சாதி என்பது எண்ணிக்கையில் ஒன்றே ஒன்றாக இருத்தல் என்பது எப்போதும் இருந்திருக்க முடியாது. சாதிகள் எண்ணிக்கையில் பன்மையிலேயே நிலவி வருகின்றன. சாதிச் சட்டங்களை மீறியதால் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களை எவரும் ஏற்காத நிலை ஏற்படுவதால், தாங்களே ஒரு புதிய சாதியாக உருவாக்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய குழுக்கள் தானே இயங்குகின்ற ஒரு இயந்திர விதியால் புதிய சாதிகளாக மாற்றப்பட்டு பன்மடங்காகப் பெருகின" என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.


'சாதி ஒழிப்பு' என்கிற மிகச்சிறந்த படைப்பின் உருவாக்கம் சுவாரசியமான பின்னணியைக் கொண்டது. ஜாத்-பட்-தோடக் மண்டல் என்பது சாதி இந்துக்களால் லாகூரில் செயல்பட்டு வந்த ஒரு சமூக சீர்திருத்த சங்கம் ஆகும். அதன் வருடாந்திர மாநாட்டில் தலைமை உரையாற்ற அம்பேத்கரை அழைத்தனர். உரையைத் தயாரித்து அனுப்பி வைத்தார். அச்சங்கத்தினர், உரையில் சில மாற்றங்களைச் செய்யும்படியும் சிலவற்றை நீக்கும்படியும் வேண்டினர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் "என் உரையில் ஒரு கால் புள்ளியைக் கூட நான் மாற்ற மாட்டேன்; என் உரையைத் தணிக்கை செய்வதை அனுமதிக்க மாட்டேன்; என் உரையில் உள்ள கருத்துகளுக்கு நானே முழுப்பொறுப்பு ஏற்கிறேன்" என்று அதன் அமைப்பாளருக்குத் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்ததால் மாநாடு ரத்து செய்யப்பட்டது. பின்னாளில் இந்த உரையைச் 'சாதி ஒழிப்பு' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார் அம்பேத்கர்.


இந்தியச் சமூக அமைப்பைத் திருத்தி அமைக்க வேண்டுமானால் அரசியல் சீர்திருத்தத்திற்கு முன் சமூகச் சீர்திருத்தம் ஏற்பட்டாக வேண்டும். உலகம் முழுவதும் அரசியல் புரட்சிகளுக்கு முன்பே சமூக மதப் புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை பல்வேறு உதாரணங்களின் மூலம் இந்த நூலில் விளக்கி இருக்கிறார். பொருளாதாரப் புரட்சிக்கும் சமுதாய மாற்றமே அடிப்படை என்கிறார்.


இந்து சமூகம் என்பது ஒரு கற்பனையே. இந்திய நாட்டு மக்களிடம் இருந்து தங்களைத் தனித்துக் காட்டுவதற்கு முகமதியர்கள் வைத்த பெயர்தான் 'இந்து'. முகமதியர்களுக்கு முன்பு இந்தப் பெயர் இருந்தது இல்லை. இந்து என்ற சொல் ஒரு அன்னியப் பெயர்தான். இந்து என்ற உணர்வே எவரிடமும் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் இருப்பது 'சாதி' என்ற உணர்வுதான். குழுஉணர்வு இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும். 


முகமதியர்களும் கிறித்துவர்களும் தங்களின் மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியை இந்துக்கள் எடுக்கவில்லை. ஏனெனில், மதமாற்றத்திற்கு சாதி ஒத்துவராது. மதம் மாறி வந்தவர்களுக்கு எந்தச் சாதியில் இடமளிப்பது என்பது தான் பிரச்சினை. சாதி சட்டங்களைப் பொறுத்தவரையில் அதில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உறுப்பினராகும் தகுதி உள்ளது. ஆகவே சாதி இருக்கும் வரை இந்து மதத்தை விரிவாக்க முடியாது.


இந்தியாவில் மௌரியப் பேரரசின் காலத்தில் தான் சதுர்வர்ணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சூத்திரர்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக இருந்தார்கள். மற்ற காலங்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து சூத்திரர்களை எவ்வித உரிமையும் அற்றவர்களாக ஒடுக்கினர். கல்வி, செல்வம், ஆயுதம் எதற்கும் சூத்திரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே இங்கு சமுதாயப் புரட்சி ஏற்படாமல் போனது. 


கிளைச் சாதிகளை ஒழிப்பதன் மூலமாகவோ, சமபந்தி விருந்துகளின் மூலமாகவோ சாதி ஒழிப்பு நடைபெறாது. "சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி 'கலப்புத் திருமணம்'தான். இரத்தக் கலப்பின் மூலம் தான் உற்றார் உறவினர் என்கிற உணர்வு ஏற்படும். இந்துக்களிடையே கலப்புமணம் சமூக வாழ்வில் அதிக ஆற்றல்வாய்ந்த அம்சமாக இருக்கும்." என்று அறுதியிட்டுக் கூறுகிறார் டாக்டர் அம்பேத்கர்.


மேலும் சாதி என்பது ஒரு மனநிலை தான். அதை மாற்ற முடியும். "சாதிக் கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் வேதங்களையும், சாஸ்திரங்களையும் வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை அழிக்க வேண்டும். வேறு எதுவும் பயன்தராது." என்று தீர்க்கமாகக் கூறினார் டாக்டர் அம்பேத்கர்.


இந்து மதத்துக்கு ஒரே ஒரு பிரமாணமான புத்தகம் அனைத்து இந்துக்களும் ஏற்று ஒப்புக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். இந்துக்களிடையே புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும். இந்து என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் அரசு நிர்ணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று புரோகிதராகப் பணிபுரிவதற்கு இடம் அளிக்க வேண்டும். புரோகித பணியாளரும் அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் இந்த சாதி ஒழிப்பு நூலில் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் இந்தக் கனவு நனவாகும் என நம்புவோம்.


"அழுகிய புண் மீது அடர்த்தியான திராவகத்தை ஊற்றியது போல் சாதி இந்துத் தலைவர்களின் உள்ளங்களை சாதி ஒழிப்பு என்ற இந்தக் கட்டுரை பற்றி எரியச் செய்தது" என்று டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள தனஞ்செய்கீர் கூறியுள்ளது இதன் வலிமையை மேலும் பறைசாற்றுகிறது.


சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்தோ-ஆரிய சமுதாயத்தின் நான்காவது வருணமாக எப்படி ஆனார்கள்? என்கிற ஆய்வின் வழியாக சூத்திரர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஆரிய இனங்களில் ஒரு பகுதியினர். முதலில் 3 வருணம் மட்டுமே இருந்தது. அப்போது சூத்திரர்கள் சத்திரிய வருணத்தின் ஒரு பகுதியினராக ஆள்பவர்களாகவும் இருந்து வந்தனர். 


சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் ஓயாத சண்டைச் சச்சரவு இருந்து வந்தது. இதனால் இவர்கள் மீது வெறுப்பும் பகையும் கொண்ட பிராமணர்கள் சத்திரியர்களுக்கு பூணூல் சடங்கு செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால் சமூக ரீதியில் இழி நிலைக்குத் தள்ளப்பட்டனர். வைசியர்களின் படிநிலைக்கும் கீழே இறக்கப்பட்டு நான்காவது வருணத்தினராக சூத்திரர்களாயினர். இதற்கு முன் 4-ஆவது வர்ணம் இருந்ததில்லை. இதுவே டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு முடிவாகும்.


தீண்டப்படாதவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்? என்கிற ஆய்வு நூலில், தீண்டாமைக்கு இன அடிப்படை வேறுபாடோ அல்லது தொழில் ரீதியான வேறுபாடோ காரணம் அல்ல என்கிறார். தீண்டப்படாதவர்கள் தூய்மையற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். கி.பி.400-இல் தோன்றியவர்கள். இனக் குழுக்களிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீது பிராமணர்கள், பெளத்தர்களிடம் காட்டியது போன்ற வெறுப்பையும், பகையையும் காட்டியதும், மாட்டிறைச்சி உண்பதைக் கைவிடாததும் இவர்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்பட்டதற்கான முக்கிய காரணிளாக அம்பேத்கர் எண்ணினார்.


சமயம்:


'இந்து பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்' என்ற தலைப்பில் இந்து சமயத்திலும் பௌத்த சமயத்திலும் பெண்களின் நிலைமை குறித்து விரிவாக ஆய்வு செய்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளது. புத்தரின் மடத்திலேயே தங்கி இருந்த விசாகம் அம்மையார், புத்தரால் பெரிதும் பாராட்டப்பட்ட அம்ராபாலி, 500 பெண்களை புத்த மடத்தில் சேர்ப்பித்த மகாபிரஜாபதி கௌதமி போன்ற பலரும் புகழ் பெற்று இருந்ததும், பௌத்த மதத்தில் பெண்கள் மிகுந்த சுதந்திரத்துடன் இருந்ததும், இதனால் இந்துப் பெண்களிடையே எழுச்சி ஏற்பட்டதும் இப்பகுதியில் விளக்கப்படுகிறது.


"ஒரு பெண் குழந்தை பிறப்பதானது துயரம் அடைவதற்கான சந்தர்ப்பம் அல்ல. மகிழ்ச்சி அடைவதற்கான ஒரு சந்தர்ப்பம்" என்றும், "ஆண்களோடு பெண்களும் சட்டத்தகுதி, சுதந்திரம், உயர்வு, சமத்துவத்தையும் பெற முடியும்" என்றும் புத்தர் கூறியுள்ளதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார் அப்பேத்கர். பௌத்த மதத்தில் ஆண் பெண்ணிற்கு இடையே கல்வி, நீதி, தொழில் அனைத்திலும் சமத்துவம் பேணப்பட்டது. 


கணவன் இறப்பிற்கு பின்பு அல்லது முன்பு பெண்ணின் விருப்பப்படி மறுமணம் செய்து கொள்ள உரிமை இருந்தது. "ஆண்களைப் போலவே சன்னியாசி வாழ்க்கையை அடைவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு உள்ளது" என்று முதன்முதலில் பிரகடனம் செய்தவர் புத்தர் தான்.


ஆனால் மநு சாஸ்திரத்திலோ, "ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. தாய் மகள் சகோதரி எவருடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது; புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை; அறிவாளிகளையும் வெற்றி கொள்ளும்... படுக்கை மோகம், பதவித்தாகம், ஆபரண ஆசை, கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீய நடத்தை ஆகியவையே பெண்களின் குணங்கள். 

பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதி அற்றவள். 


வேதங்களைப் படிப்பதற்கு பெண்களுக்கு உரிமை இல்லை. சொத்துரிமை இல்லை. கணவன் இறந்தால் விதவை மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. தீயில் விழுந்து உயிர் விட வேண்டும். கணவன் விரும்பினால் மனைவியை விற்கலாம். ஒரு பெண்ணைக் கொல்வது பெரியதவறு ஒன்றும் இல்லை. அது ஒரு அற்பமான குற்றமே ஆகும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் அதன்படியே இந்துப் பெண்களின் பெரும்பான்மையானோரின் வாழ்க்கை இருந்ததையும் சுட்டிக் காட்டி பௌத்த-இந்து மதங்கள் பெண்களை எவ்வாறு கையாண்டனர் என்பதையும், "இந்தியாவில் பெண்களின் வீழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் காரணம் மனு தர்மமே" என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் டாக்டர் அம்பேத்கர்.


இந்து மதத்தின் அதிகாரப்பூர்வமான கோட்பாடு சதுர்வர்ணம் என்ற அசமத்துவமே ஆகும். ஆனால் மறுபுறத்தில் புத்தர் சமத்துவத்திற்காக நின்றார். சதுர்வர்ணத்தின் மிகப் பெரும் எதிரியாக இருந்தார். அதற்கு எதிராக போதனையும் செய்தார் போராடவும் செய்தார். புத்த மதம் அடிப்படையில் பகுத்தறிவையும் அனுபவத்தையும் போதனை செய்தது. காலத்தால் பொருந்தாதவை என்று கண்டறியப்பட்டால் அவற்றை மாற்றிக் கொள்வதற்கு புத்த மதத்தில் இடம் உண்டு. ஒழுக்க முறைமையே புத்தமதம். அது இல்லையென்றால் புத்தசமயம் ஒன்றும் இல்லாததாகும். புத்த சமயத்தில் கடவுள் இல்லை என்பது உண்மையே. கடவுளுக்குப் பதிலாக அந்த இடத்தில் ஒழுக்க முறைமை இருக்கிறது. 


"ரோம சாம்ராஜ்யத்தில் பாகனிசத்தைத் தூக்கி எறிந்து கிருஸ்துவ மதத்தை தழுவியது போல, இந்தியாவிலும் ஏற்படுவது நிச்சயம். இந்து மக்கள் திறல், அறிவு ஞானம் பெறும் போது புத்த சமயத்தின் பால் நிச்சயம் திரும்புவார்கள்" என்கிறார் டாக்டர் அம்பேத்கர். மேலும் இரண்டாயிரம் ஆண்டு இடைவெளியில் பிறந்த புத்தரையும் மார்க்ஸையும் அவரவர்களுடைய கோட்பாட்டு ரீதியாக மிகச்சிறப்பாக ஒப்பிட்டுள்ளார். 


"துக்கம் என்பதற்கு பதிலாக சுரண்டல் என்று வாசித்தால் புத்தர் மார்க்ஸிடமிருந்து விலகி இருக்கவில்லை என்பதை அறியலாம்." என்கிறார் அம்பேத்கர். புத்தரை ஒரு ஜனநாயகவாதியாகவும் பொதுவுடைமைவாதியாகவும் மிகச் சிறப்பாக நிறுவுகிறார். 


சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் இந்த முழக்கத்தினால் பிரெஞ்சு புரட்சிக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் அது சமத்துவத்தை உருவாக்க தவறி விட்டது அதன்பின் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சி சமத்துவத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் நிறைவு செய்யவில்லை. புத்தரின் வழியைப் பின்பற்றினால்தான் இந்த மூன்றும் சேர்ந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது என்று கூறுகிறார். 


இன்றைய முதலாளித்துவ சமுதாயம் மாறி சோசலிசமும், அதைத்தொடர்ந்து பொதுவுடைமையும் விஞ்ஞான ரீதியாக கட்டாயமாக வரலாற்றில் நிகழும் என்று மார்க்ஸ் கூறியதைப் போன்றதே மக்களிடையே அறிவு வளர வளர மக்களால் புத்த மதமும் கட்டாயமாகப் பின்பற்றப்படும் என்று அம்பேத்கர் கூறியதும். மேலும் ஆய்வின் இறுதியில், "உலகில் பெளத்த தத்துவம் பயனளிக்கத் தவறுமானால், ஒட்டுமொத்த உலகமும் மார்க்ஸியத்திற்கே செல்ல வேண்டிவரும்." என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.


மார்க்ஸையும், அம்பேத்கரையும், பெரியாரையும் இப்படிச் சுருக்கமான வடிவில் எளிமையாக வெளியிடுவதும் அறிமுகப்படுத்துவதும் இன்றைய நவீன தலைமுறைக்கு மிகமிகத் தேவையான ஒன்று. குறிப்பாகக் குழந்தை வாசகர்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியாகக் கதைகளாகவும், காமிக்ஸ்களாகவும், சீரியல்களாகவும், சிறிய சிறிய காணொளிகளாகவும் எளிய வடிவில் புரட்சிப் படைப்புகளைப் படைப்பதும், அவற்றைப் பரவலாக்குவதும் காலத்தின் கட்டாயம்.


புத்தகத்தின் பெயர்: டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்

ஆசிரியர்: மு.நீலகண்டன்

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஏழாம் பதிப்பு: ஆகஸ்டு, 2012


பக்கங்கள்: 294

விலை: ₹185


- மாணிக்க முனிராஜ்,

(manickamuniraj@gmail.com)

Sunday, 6 June 2021

பாரம்பரிய மருத்துவத்தின் சோதனைக் காலம் - கட்டுரை

 


பாரம்பரிய மருத்துவத்தின் சோதனைக் காலம் - மாணிக்க முனிராஜ்
***********************************
கொரோனாவைக் குணப்படுத்த, கொரோனா வராமல் பாதுகாக்க என்று வாட்ஸப்பில் குவிந்துவரும் பெருந்தகவல் இன்று மக்களை மிகுந்த குழப்பத்திற்கும், உயிர் பயத்தில் எது சரி? எது தவறு? என்று பிரித்தறிய முடியாத ஒரு பதற்ற நிலைக்கும் தள்ளியுள்ளன.

ஒருபுறம் மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதும், சாணத்தில் குளிப்பதும் கொரோனாவை அண்டவிடாது என்பதும்; காயத்திரி மந்திரம் சொல்லி யோகாசனம் செய்தால் கொரோனா விரைவாகக் குணமாகிறதா என இந்திய அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் வழியாக ஆய்வு செய்வதும்; 'கோ கொரோனா கோ' என்று தட்டில் ஒலியெழுப்பி விளக்கு பிடிப்பதுமாக கொரோனாவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளன.

மறுபுறம் இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், இலவங்கம், பட்டை, தனியா, ஓமம், எலுமிச்சை, துளசி, மல்லி, வெற்றிலை போன்றவற்றில் சிலவற்றையோ எல்லாவற்றையுமோ காய்ச்சிக் குடிப்பதாலும்; ஆவி பிடிப்பதாலும்;  பிரணாயாமா போன்ற யோகாசனம் செய்வதாலும் கொரோனா தொற்றாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லது கொரோனா வந்தவர்கள் இதைச் செய்தால் கொரோனா கிருமி செத்துவிடும் என்பதைப் போன்ற தகவல்கள் பரப்பப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றன.

'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற சொலவடைக்கு ஒப்ப எதையாவது செய்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் காத்துக் கொள்ளலாம் என்று கருதி எதையெதையோ செய்து வருகின்றனர்.
பொய்ச்செய்திப் பரவல் கொரோனா வைரஸை விட வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனரே கூறுகிறார்.

இவற்றில் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி தேநீர் அருந்துவது பொதுவாக இருமல், சளி இருப்பவர்களுக்கும், கொரோனா காரணமாக இருமல், சளி ஏற்பட்டவர்களுக்கும்
ஒரு தற்காலிக ஆறுதலைத் தரும் என்பதிலும், இது போன்ற உணவுப் பழக்கங்கள் இயல்பான நம்முடைய நோய் எதிர்ப்புத்திறனை வலுவாக வைக்க உதவும் என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இவை தொற்று ஏற்பட்டவர்களின் கொரோனா கிருமிகளை அழித்துவிடும் என்பதோ அல்லது இயல்பாக இவ்வாறு நம் உணவும் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் கொரோனா தொற்றே நமக்கு தொற்றாது என்பதோ முற்றிலும் தவறான, அறிவியலுக்குப் புறம்பான, போலி அறிவியல் தகவல் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எப்படிப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட, உடல் வலுவான நபராக இருந்தாலும், தொற்று ஏற்படக்கூடிய சூழலில் இருந்தால் அவருக்கும் கட்டாயமாக தொற்று ஏற்படத்தான் செய்யும். தொற்றின் பாதிப்பு வேண்டுமானால் அவருடைய இயல்பான  நோய் எதிர்ப்பாற்றலால் குறைவாக இருக்கலாம். அதே போல தொற்று ஏற்பட்டவர் இவற்றையெல்லாம் சாப்பிட்டால் கொரோனா கிருமியை அழிந்து விட முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆய்வோ நிரூபனமோ இதுவரை இல்லை.

அதற்காக மூலிகைகள் பயனற்றது என்பது நமது வாதமல்ல. கொரோனா கிருமிகளை அழிப்பதில் அல்லது கட்டுப்படுத்துவதில்  மூலிகையின் பயன் நிரூபிக்கப்படவில்லை  அவ்வளவுதான். நவீன மருத்துவத்துக்கான மாத்திரை மருந்துகள் ஆய்வகங்களில் செயற்கையாக மட்டும் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக இயற்கையான மூலிகைகளைக் கொண்டும்தான் தயாரிக்கப்படுகின்றன. அடிப்படையில் எல்லாம் கரிம, கனிம வேதிப்பொருட்கள்தானே.

இங்கு அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால் பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தளிப்பதிலும், குணப்படுத்துவதிலும், குறிப்பாக ஆய்விலும் அறிவியல் அனுகுமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது தான்.

ஆய்விற்கு இன்று வழியில்லாமல் இல்லை. முன்பாவது ஆய்வுகளில் அரசு ஒத்துழைப்பு  குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அதற்கென்றே ஆயுஷ் போன்ற அரச அமைப்புகளும் உள்ளன. ஆனால் இவையெல்லாம் எந்த அளவிற்கு நோயியலை ஆய்வுப்பூர்வமாக அனுக ஏற்பாடுகள் செய்துள்ளன என்பதெல்லாம் பெரிய கேள்வி.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்ற கிராமத்தில் ஆனந்தையா என்பவர்  கொரோனாவுக்காக நாட்டு மருந்து அளித்து பதினைந்தே நிமிடத்தில் குணப்படுத்துகிறார். தினமும் 500 பேருக்கு அவர் இலவசமாக வழங்கி வருகிறார் என்று செய்தி. இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு 3 நாட்களுக்குத் தடை விதித்ததுடன் ஆயுஷ் அமைச்சகத்திற்கு சோதனைக்காக சேம்பிளை அனுப்பியுள்ளனர்.

ஆய்வு முடிவில் அந்த மருந்து கொரோனாவைக் குணப்படுத்துமா குணப்படுத்தாதா என்பது குறித்த விளக்கம் எதுவும் இல்லை. ஆனால் அந்த மருந்து சாப்பிடுவதால் ஆபத்து எதுவும் வராது என்று கூறியுள்ளதாம். ஆகவே திரும்பவும் மருந்து வழங்க அனுமதி அளித்ததுடன் போலீஸ் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்.

பின்னர் பத்து பதினைந்தாயிரம் பேர் வரை ஒரே இடத்தில் கூடியதால் மீண்டும் தடை விதித்ததையடுத்து, ஆந்திர மாநில எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆனந்தையாவை சந்தித்தபோது, ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு கண்ணில் ஆயுர்வேத சொட்டு மருந்து விட்டு ஐந்தே நிமிடத்தில் எழுந்து நின்று நன்றாக சுவாசிப்பதை டெமொ செய்து காட்டுகின்றனர்.

உடனே அங்கிருந்த சோமிரெட்டி என்கிற எம்எல்ஏ "ஆயுஷ் அமைச்சகம் அங்கீகரித்துள்ள இந்த நாட்டு மருந்தை உடனடியாக எல்லாருக்கும் இலவசமாக வழங்க ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேட்டியளிக்கிறார். உண்மையில் ஆயுஷ் அமைச்சகம் இதுவரை அது போன்ற அங்கீகாரம் எதையும் வழங்கவில்லை. மாறாக ஆணையர் ராமுலு, "இதனை ஆயுர்வேத மருந்து என அழைக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். ஆய்வு முடிவு எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் எதற்காக இத்தகைய அவசரம் காட்டப்படுகிறது?

பாரம்பரியமாக வைத்தியங்களைப் பார்த்து வரும் வைத்தியர்களில் பலர் போலியாக பணம் பறிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் அடிப்படை சித்த, ஹோமியோ, ஆயுர்வேத மருத்துவப் படிப்பைப் படிக்கவில்லை என்பது மட்டுமல்ல. (சொல்லப்போனால் அப்படியெல்லாம் படிக்காதவர்களால்தான் காலங்காலமாக சித்த, ஆயுர்வேத மருத்துவ முறை வளர்ந்து வந்தது.) காலத்துக்குத் தகுந்த எந்தவிதமான முன்னேற்றத்தையும் அவர்கள் கைக்கொள்ளாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றனர் என்பது தான் இங்கு சிக்கலாக உள்ளது.

மேற்கத்திய மருத்துவம் புதிய புதிய நோய்களுக்கு புதிய புதிய மருந்துகளைத்தான் கண்டறிந்து வருகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் உட்பட எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எல்லா நோய்களுக்கும் சேர்த்து ஒரே அருமருந்தாக அகஸ்திய ரசாயனம் உள்ளது என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுவடிகளில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும் அனைத்து நோய்களுக்கும் பாரம்பரிய முறையில் தீர்வளிக்க முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுவடிகளில் எழுதப்பட்டிருக்கிறது, கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் தீவிரமாக நம்புபவர்களில் எத்தனைப் பேர் எல்லாவற்றுக்கும் பாரம்பரிய மருத்துவத்தை நாடுகின்றனர் என்பதை உற்றுக் கவனிக்க வேண்டும்.

எப்படி எவ்வளவு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையாளராக இருந்தாலும், நோய் வந்தால் சாமியை மட்டும் கும்பிட்டு சரிசெய்துகொள்ள முடியாது என்று பகுத்தறிவுடன் சிந்தித்து மாத்திரை, மருந்துகளை எடுத்துத் தன்னைக் குணப்படுத்திக்கொள்கின்றரோ,

எப்படி சாமிக்கு அருகில் நின்று பூசை செய்பவராக இருந்தாலும், பள்ளிவாசல், தேவாலயங்களில் வழிபடுவோராக  இருந்தாலும் வைரசுக்குப் பயந்து முகக் கவசம் அணிகின்றனரோ,

அப்படியேதான் ஒரு விபத்து நேரிட்டால் அல்லது தீவிரமான உடல் உள்ளுறுப்புக்கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் பாரம்பரிய மருத்துவத்தின் தீவிர பற்றாளர்கள் எவரும் நவீன மருத்துவத்தை நாடாமல் இருப்பது இல்லை.

'போலி அறிவியல், மாற்று மருத்துவம் மற்றும் மூடநம்பிக்கை - ஒரு விஞ்ஞான உரையாடல்' நூலின் ஆசிரியரும் மயக்கவியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் சட்வா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணையவழிக் கூட்டத்தில் பேசும்போது,

"எல்லா நோய்களையும் மாற்று மருத்துவத்தால் குணப்படுத்திவிட முடியும் என்று கூறுபவர்கள், காசநோய், மலேரியா, தொழுநோய், யானைக்கால் நோய் போன்றவற்றை என்றைக்காவது குணப்படுத்தியிருக்கிறார்களா? என்றால் இல்லை.

மாறாக, மருந்து கண்டறியப்படாத சில நோய்களை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்று மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சிலர் மக்களை நம்பவைக்க முயல்கின்றனர். ஆனால் ஒரு வியாதிக்கு மருந்து கண்டறியப்படாமல் இருந்தால், அதற்கு 'மருந்து இல்லை' என்று வெளிப்படையாகச் சொல்வது விஞ்ஞான மருத்துவம்தான்" என்கிறார்.

மேலும் அவர், "உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொன்று குவித்த பெரியம்மை போன்ற நோய்களை விஞ்ஞான மருத்துவத்தின் கொடையான தடுப்பூசியின் உதவியால்தான் வென்றிருக்கிறோம். நோய்களைத் தீர்க்கும் ஆயுதம் விஞ்ஞான மருத்துவம் தான். பண்டைய ஓலை சுவடிகளில் உள்ளது; நமது வீட்டு சமையலறையில் உள்ளது போன்ற முன் முடிவுகளின்படி கொரோனாவை அணுகக் கூடாது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும்" என்றும் எச்சரிக்கிறார். 

இதன் பொருள் பாரம்பரிய மருத்துவமே முற்றுமுதலாகத் தவறானது என்றோ, நவீன மருத்துவம் மட்டுமே மனிதகுலத்தைக் காக்க வந்த விடிவெள்ளி என்றோ வாதிடுவதல்ல. அலோபதி மருத்துவமுறை அறிவியல் அனுகுமுறைகளை பின்பற்றினாலும்கூட இன்றும் சில மருந்துகள் எதிர்ப்பார்க்கும் பலனை எல்லாவிதமான நோயாளிகளுக்கும் அளித்துவிடுவதில்லை.

ஆனால் பெரும்பான்மையாக அவற்றின் பலன் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என்பது தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. 
ஒன்று சரி என்றால் அது மிகப் பெரும்பான்மையானவர்களுக்குச் சரியாக இருக்க வேண்டும். தவறு என்றால் அது மிகப் பெரும்பான்மையானவர்களுக்குத் தவறாக இருக்க வேண்டும். புள்ளிவிவர அடிப்படையிலான ஆய்வுதான் எது சரி, அது எந்த அளவிற்கு சரி, ஒரு மருந்தை ஏற்கலாமா? கூடாதா? என்பதையெல்லாம் தீர்மானிக்கிறது.

இன்றைக்கு கொரோனாவிற்கு  சிகிச்சையளிக்க மீத்தைல் பிரெட்னிசலோன் போன்ற ஸ்டெராய்டுகளை அதிகமாகவும் நீண்ட காலமாகவும் பயன்படுத்துவதால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தி கருப்பு பூஞ்சை எனப்படும் மியூக்கோர்மையோஸிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது என்று  மருத்துவர்கள் சொல்வதாக செய்திகள் வருகின்றன.

நாட்பட்ட சளித்தொல்லை, தும்மல், இருமல் ஒவ்வாமை, கடி எனப்படும் தோல் நோய் போன்ற பரவலாக சமூகத்தில் இருக்கும் சில நோய்கள் எந்த மருத்துவ முறையிலாவது யாருக்காவது  நிரந்தரமாகக் குணமாகியிருக்கிறதா? என்றால் பெரும்பான்மையாக இல்லை. இவை பருவகாலங்களில் வரும், போகும். நவீன அல்லது பாரம்பரிய மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது சற்று தணியும். ஆனால் நிரந்தரமாகத் தீர்ந்தது கிடையாது என்பதே பெரும்பான்மையோரின் அனுபவமாக உள்ளது.

இதுமட்டுமல்லாமல் நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்றவற்றுக்காக தொடர்ந்து எடுக்கும் மருந்துகளாலும் உடலின் இயல்பான நோய் எதிர்ப்புத் திறன் குறைவதாகவும்; எந்தவொரு நோய்க்கும் நெடுநாள் எடுக்கப்படும் மருந்தால் ஒருவித மருந்தடிமைத்தனம் ஏற்படுவதாகவும் சொல்கின்றனர்.  நோய்களைக் குணப்படுத்துவதற்கு மாறாக கட்டுக்குள் வைப்பதையே இந்த மருத்துவம் செய்கிறது. இதன்வழி நோயாளி - மருந்து - வணிகம் என்ற சங்கிலி அறுபடாமல் இருக்கவே நவீன மருத்துவம் உதவுகிறது என்கிற குற்றச்சாட்டும் இதன் மீது உள்ளது.  இதுபோன்று நவீன மருத்துவ முறையாலும் முழுமையாக சரியாகக் கையாள முடியாத போதாமைகள் இல்லாமல் இல்லை.

ஆனால், குழந்தையின்மையைத் தீர்க்க சாதாரண மருந்து மாத்திரைகள் முதல் செயற்கைக் கருத்தரிப்பு, வாடகைத்தாய் முறை வரை நவீன மருத்துவம் கண்டறிந்துள்ள படிப்படியான தீர்வுகள் ஏராளம். சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளையே மாற்றும் அறுவை சிகிச்சை முதல் டெலிமெடிசின், ரோபோட்டிக் மருத்துவ சிகிச்சை வரை நவீன மருத்துவத்துறையின் சாகசமான சாதனைகள் ஏராளம்.

இந்தியர்களின் சராசரி ஆயுள் 1921-இல் 24 ஆண்டுகள் என்றிருந்தது 1990-இல் 59.6-ஆகவும் 2019-இல் 70.8-ஆகவும் உயர்ந்துள்ளது. இது மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது குறைவுதான் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த அளவிற்கு சராசரி ஆயுள் வளர்ந்ததற்கு நவீன மருத்துவமே காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. எல்லாவற்றையும் விட குறிப்பிட்ட எந்தவொரு நோய்க்கும் ஏற்றுக்கொள்ளப்படும் மருந்து எதுவும் முறையான மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்ட பின்பே பயன்பாட்டுக்கு வருகின்றன. நிரூபிக்கப்படாத ஒன்றை ஏற்றுக்கொள்வதில்லை. இது தான் எப்போதைக்கும் அவசியமான அறிவியல் அனுகுமுறை.

இயற்கையான சரியான உணவுப்பழக்கவழக்கத்தின் மூலமே நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சரியாக நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அதில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் குறைகள் வருகின்றனவோ அவ்விடத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் வழிகாட்டுதலை நமது நோய்த்தடுப்பாற்றலை திடப்படுத்திக்கொள்ள சிறப்பாகக் கைக்கொள்ளலாம்.

ஆனால், இந்த இரண்டாம் அலை பெருந்தொற்றுக் காலத்தில் நிரூபிக்கப்படாத மருந்துகளை, நமது பாரம்பரிய பெருமைக்காக   நம்பிக்கையின் அடிப்படையிலும், வாட்ஸப் பகிர்வின் அடிப்படையிலும் சுயமாக எடுத்துக் கொள்வதும், பின்பற்றுவதும் அதை மற்றவர்களுக்கும் பரப்புவதும் தவறானது என்பது மட்டுமல்ல. அதுவே உயிரிழப்பு போன்ற தீவிர சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆவி பிடிப்பதால் கிருமியை அழித்து விடமுடியாது என்றும் பொதுவெளியில் கூட்டம்கூட்டமாக ஆவி பிடிப்பது மேலும் மேலும் தொற்றுக்கே வழிவகுக்கும் என்பதால் அதைத் தடை செய்தும் சமீபத்தில் வெளியான அறிவிப்பைப் போல, பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கையாள்வதில் மேலும் சில அறிவிப்புகளும், சரியான  வழிகாட்டுதல்களும் மக்களுக்கு உடனடித் தேவையாக உள்ளது. 

சித்த மருத்துவர் கு.சிவராமன் போன்ற சிலர் சரியான புரிதலுடன் இரண்டு மருத்துவ முறைகளையும் இணைத்து இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ளலாம் என்றும், நோயின், நோயாளியின்  அகப்புற சூழலுக்குத் தக்கபடி தேவையான மருத்துவத்தைக் கையாளலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். எந்த சூழலில், எந்த அளவில், எந்த முறையில் சிகிச்சை அளிப்பது என்பதையெல்லாம் உரிய மருத்துவ நிபுனர்களும் அரசும் பேசி சரியானதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

-மாணிக்க முனிராஜ்
(manickamuniraj@gmail.com)

மண்ட பத்திரம்!

மழை வேண்டி மண்டையில் தேங்காய் உடைக்கும் மர மண்டைகளே! தேங்காய் உடைத்தால் மேகம் உடையுமா? எலுமிச்சை உருட்டினால் வானம் உருகுமா? ஆடு வெட்டினால் ஆ...