Sunday, 6 June 2021

என் உயிரே விலை

காலைப் போதின் உன் இன்முகம் ஒன்று போதும் 

அந்நாளை நம்பிக்கையோடு நான் கடப்பதற்கு


நாற்காலி மேசை சகிதம் 

கோப்புகளில் ஒப்பமிடும் 

அரசு நிர்வாகப் பணியோ

நாலுகால் பாய்ச்சலில் 

மாத இலக்கை முடிக்க 

நாயாகவலையும் தனியார் நிறுவனப் பணியோ

வாய்க்காமல் நான் வணிகத்தை நோக்கி வந்தவனில்லை


வணிகமே என் புத்தியாகவும் 

எனை வளர்க்கும் சக்தியாகவும்

என் வாழ்வின் தொலைநோக்கு யுக்தியாகவும் 

என் நாடி நரம்புகளிலும் 

இண்டு இடுக்குகளிலும் 

உனைப் போலவே

நிலை கொண்டுள்ள

என் வாழ்வாசையின் 

ஆழ விழுதுகள்


வணிகப் பாதையில் 

புடம் போட்டு தடம் பதித்த 

ஆளுமைகளின் தழும்புகளை 

தினம்தினம் தேடிப் பார்க்கிறேன்.

உறவோடு வாங்கிய காயங்களின்

ஆறா வடுக்களை 

அவ்வப்போது தடவிப் பார்க்கிறேன்.


அன்பின் வழிப்பட்ட பாதையில்

எதிர்ப்படும் இன்னல்கள்

மரமுதிர்க்கும் இலை போன்று 

இயற்கையாய் உதிரும்.

வெறுப்பின்பாற்பட்ட பாதையில்

நகைப்புக்கான பகடியும்கூட

நன்கு திட்டமிடப்பட்ட

நயவஞ்சக சதியாகப் படும்.


நான் கற்பின் கரைகண்டவனல்ல

ஆனால்

கற்பின் கரை கடக்காதவன்.

நான் சொல்லில் சுகம் காட்டுபவனல்ல

ஆனால்

சொல்லிய சொல்லுக்காக 

என் உயிரையும் விலையாய்க் கொடுப்பவன்.


-மாணிக்க முனிராஜ்


உள் வலி மூட்டம்


அவசியமிலா தாமதங்கள்

அன்றாடம் நிகழ்ந்தாலும்

அணுவும் வினவல் கூடாது.


'காரணம் கூறுதல் ஆண்களுக்கும்

காரணம் கேட்டல் பெண்களுக்கும் அழகல்ல' என்பது ஒன்றே உன் தத்துவம்


கோவப்படுதலையும் கோவத்தில் சத்தமிடுதலையும்

சத்தத்தில் என் சங்கறுக்க சபதமிடுதலையும் முற்றுமுதலும் நான் பொறுத்தே ஆகவேண்டும்


எதிர்வினையாற்றுதல்

தேச துரோகம்

சாப்பிடக் கூப்பிடல்

சமூக விரோதம்


எத்தனை உதாசினங்கள்

எத்தனை அவமானங்கள்

எத்தனை கோபதாபங்கள்

எத்தனை தன்மானச் சீண்டல்களோடு

நான் சுணங்கிக் கிடந்தாலும் -உன்

ஒரே ஒரு தூண்டலுக்கு நான்

உடன் துலங்கிவிட வேண்டும்


துலங்காவிடில் நான் விளங்காதவள்

கணவன் இச்சைக்கு இணங்காதவள்


தேறலின் ஊட்டமும் 

பரத்தையர் நாட்டமும் வழக்கமில்லாமைதான் நீ எனக்களிக்கும் 

ஆகப் பெருங்கொடையென்றால்

உள் வலி மூட்டமும்

தற்கொலை நாட்டமும்

வழக்கமாக்கிக் கொண்டதுதான் உன் கொடைக்கு நானளிக்கும் விலை


- மாணிக்க முனிராஜ்

Friday, 28 May 2021

சமத்துவத் தண்ணீர்

யுகம் யுகமாய்த் தேக்கி வைத்த வரலாற்றை 

காலங்காலமாகக் கடத்தி வந்த வித்தை


ஆமீபா முதல் சமீபம் வரை முன்னோர்களின் அறிவும் அனுபவமும்

தொகைதொகையாய் சேகரமான 

காலப் பெருவெளியின் பெருந்தாழி


எண்ணிலா எண்ணங்கள் உட்கார்ந்துத் தேய்த்து  மொழுக்கடைந்து வழுக்கையான  திண்ணை


நல்லாரும் பொல்லாரும் 

உள்ளாரும் இல்லாரும்

வல்லாரும் எல்லாரும் - 

கல்லாராய் நில்லாராய் நகர்த்திய நிகரிலாத் தேர்


பள்ளத்தை நோக்கி மட்டுமல்ல

மேட்டை நோக்கியும் பாய்ந்து ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்தும் சமத்துவத் தண்ணீர்


சமூக ஊடகங்களில் களமாடுபவர்களின் கவனத்திற்கு...

சமூக ஊடகங்களில் களமாடுபவர்களின் கவனத்திற்கு...

- மாணிக்க முனிராஜ்

"அரசியல் ரீதியான பேச்சை விவாதத்தைத் தவிர்க்கவும்,

தேர்தல் வரை எவனுக்காகவோ நாம் சண்ட போட்டுக்கக் கூடாது" போன்ற வசனங்களைப் பேசி அரசியலிலிருந்து விலகி இருக்க வலியுறுத்தும் மேம்போக்குவாதிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக இன்றைக்கு பலர் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.


கருத்தியல் ரீதியான வாத எதிர்வாதங்கள் இன்று நேற்றல்ல, எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இனிமேலும் அது எப்போதும் இருக்கும் மற்றும் அது எப்போதும் தேவைதான். ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்க வாதிக்கும் இருபுறமும் கருத்து வளமும், சமூக அக்கறையும், சமூக பொருளாதார வரலாற்று அறிவியல் பார்வையும் அவசியம். 


இத்தகைய வளங்களில் பார்வைகளில் புரிதல்களில் குறைபாடு இருக்கும்போது, என்ன செய்வது என்ன பேசுவது என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது. அந்தத் தடுமாற்றம் ஏற்படுத்தும் ஆற்றாமை எப்படியாவது பொதுத் தளங்களில் வாதத்தில் நாம் வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியை ஏற்படுத்துகிறது. அந்த வெறியே அடுத்தகட்டமாகத் தனி மனிதத் தாக்குதலில் போய் முடிகிறது.


அதேநேரத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் பொது மனிதர்கள். அவர்கள் தனி மனிதர்கள் இல்லை என்கிற புரிதலும் இங்கு அவசியம். அவர்களைத் தோலுரித்துக் காட்டுகிற அவர்களின் அரசியலின் தன்மையை எடுத்துக்காட்டுகிற போக்கெல்லாம் தனிமனித தாக்குதலில் அடங்காது. அது வழியாகத்தான் அவர்களின் அரசியலை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நமது அரசியலின் திசை வழியைத் தேர்வு செய்ய இத்தகைய விவாதங்கள் மிகமிக அவசியமானவை ஆகின்றன.


ஆனால் அந்தப் பொது மனிதர்களுக்காகக் கொடுக்கும் முட்டு எந்த நிலையிலும் விவாதிக்கும் தனி மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே கூர் தீட்டிக் கொள்ளும் ஆப்பாக மாறிவிடக் கூடாது. இதனால் ஏற்படும் உறவுச் சிக்கலால் ஆகப் போவது என்ன? யாராவது யாரையாவது மாற்றிவிட முடிகிறதா என்ன? பெரும்பாலும் அவ்வாறு நிகழ்வதில்லை. 


மாறாக விவாதங்களும் கருத்து மோதல்களும் அவசியமாக நடக்க வேண்டும். அவை வலுவான கருத்தியல் தெளிவுடனும், ஆழமான தத்துவார்த்தப் புரிதலுடனும், அடுக்கடுக்கான சரியான தரவுகளுடனும், ஆக்கப்பூர்வமாகவும் கட்டுக்கோப்பாகவும், நிதானம் இழக்காமல் அறிவுப்பூர்வமாக நிகழ வேண்டும்.


எந்த ஆட்சியில் எந்தத் தவறு நடந்து இருந்தாலும் அந்தத் தவறு தவறுதான் என்கிற புரிதல் அனைவருக்கும் தேவையான ஒன்று. 


வெகு மக்களின் நலன்களுக்கு விரோதமாக நடக்கும் எந்தச் செயலையும் அது யார் செய்தாலும் அவர்களுக்காக முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து முட்டுக் கொடுக்கிறோமே அது எதனால் என்று சிந்தித்தாலே பாதிப் பிரச்சனை முடிந்துவிடும்.


ஆனால் அத்தகைய பொதுவான சிந்தனை இங்கு பொதுவாகவே பாதிக்கும் மேலானவர்களிடம் இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது. 


என்னுடைய கல்வியையும், சுகாதாரத்தையும், வேலைவாய்ப்பையும், என்னுடைய அமைதியான நலமான வாழ்வையும், என்னுடைய வளமான நிலத்தையும், நீரையும் எங்கோ இருந்து வருகிற ஒரு கூட்டம் பறிக்கிறது. என் மூதாதையர் காலங்காலமாக கட்டமைத்த அறிவுக் கருவூலத்தைத் தன்னுடையதுபோல கபட வேடம் போட்டு திரிக்கிறது. வடநாட்டோடு ஒப்பிடும்போது ஓரளவுக்காவது இங்குள்ள இணக்கமான உறவுகளை அது கெடுக்கிறது. அரும்பாடுபட்டு இங்கு உருவாக்கி நெறிப்படுத்திவைத்துள்ள சமூக நீதிக் கோட்பாட்டை அது தகர்க்கிறது. 


ஆனாலும் என்னுடைய மதத்திற்காகவும், என்னுடைய சாதிக்காகவும், அவற்றைக் தூக்கிப் பிடிக்கும் அல்லது அவற்றுக்கு சொம்பு தூக்கும் அரசியலுக்காகவும்தான் நான் குரல் கொடுப்பேன் என வரிந்துகட்டிக் கொண்டு நிற்கும் நபர்களிடம் முன் சொன்ன இழப்புகள் எவையும் காதில் விழுவதில்லை. அப்படியே இவை புரிந்தாலும் செலக்டிவ் அம்னீஷியா உள்ளவர்களைப்போல் இவற்றை அவர்கள் கண்டுகொள்வதில்லை. 


இந்த ஆட்டோ ஸ்டார்ட் ஆகாததற்கு பக்கத்து ஆட்டோவின் கண்ணாடி ஒழுங்காக இல்லாததுதான் என வரும் அஜித் படக் காமெடியைப் போல, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாதிய மத அமைப்புகள் வழியாக அவர்கள் கூட்டம் கூட்டமாக இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இதற்காகவே பயிற்சி எடுத்த நபர்கள் வழியாக பெரும்பாலும் மறைமுகமாகவும், சில போது நேரடியாகவும், வெறியேற்றவும், வெறியேற்றிக்கொள்ளவும் படிப்படியாகப் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.


மத ரீதியாகவோ சாதி ரீதியாகவோ பாழ் சிந்தனையால் பாதிக்கப்பட்டு இவ்வாறு பாகுபாட்டு உணர்வைப் பெறுவது சுலபம். மாறாக அவற்றை மாற்றிக்கொள்வது கடினம். சூது போலத்தான், பழகுவது சுலபம். மறப்பது கடினம். அதிலும் இத்தகைய பயிற்றுவிப்பு மிகத்தீவிரமடைந்துள்ள இன்றைய நாட்களில் அவற்றுக்கு எதிராகக் களமாடுவது எவ்வளவு சவாலானது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.


நம்முடன் பழகும், படிக்கும், வேலை செய்யும் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ தக்க சமயத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் நேரும் இத்தகைய விபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கிறோம் என்கிற கரிசன உணர்வுதான் நமக்கான முதல் தேவை. அவர்களுக்குள் புதிதாக செல்ல வாய்ப்புள்ளவர்களிடம் அறிவின்பாற்பட்ட புரிதலை அன்பாக ஏற்படுத்த முயற்சிப்பதுதான் அடுத்த முக்கிய செயல்.


நோயுற்றவர்களுக்கு மருந்து கொடுப்பது எப்படியோ அப்படித்தான் மெல்லமெல்ல மீட்க வேண்டும். இந்த நோயைப் பொறுத்தளவில் மருந்து கொடுப்பதைக் காட்டிலும் நோய் பாதிப்பு தென்படும் நபர்களுக்கு மருந்து கொடுப்பது முக்கியமாகக் கருதப்பட வேண்டும். எரிகிற புத்தகத்தில் எரியாத பக்கங்களைக் காப்பது அதிமுக்கியம் தானே.


அதேநேரத்தில் எதிர்ப்படும் எல்லாரிடமும் இவ்வாறு மோதிக்கொள்வது என்பது, மீன் மார்க்கெட்டுக்குப் போய் ஜாமீன் வாங்க முடியாமல் திரும்பியவர்களை முட்ட நினைத்து கம்பியில் முட்டிக்கொண்ட வடிவேலுவின் கதையாகவே போகும். கும்.

Wednesday, 13 January 2021

ரோஸ் - புத்தக மதிப்புரை



புத்தகத்தின் பெயர்: ரோஸ்

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

பக்கங்கள்: 64

விலை: ₹60


அவசர வாழ்க்கையின் அன்றாட நெருக்கடியில் எவ்வித அக்கறையும் இல்லாமல் ஒரு குழந்தையின் உள்ளம் எந்த அளவிற்கு அலட்சியப்படுத்தப்படுகிறது என்பதைத் தனது "ரோஸ்" என்கிற கதையின் மூலம் அழுத்தமாகப் பதிய வைக்கிறார் ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன்.


நிழல்கள் ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற சினிமா நடிகர்களின் பெயர்களை சிறுவயதில் கேள்விப்படும்போது ஒரு கிரக்கம் இருக்கும். பின்னாளில் ஜெயம் ரவி வந்தபின்பு தான் அந்தப் பெயர்களின் தேவையும் அழகும் புரிந்தது. இப்போக்கு சினிமா உலகில் அதிகம். ஆனால் எழுத்துலகில், தான் எழுதிய முதல் கதையான 'ஆயிஷா'-வின் பெயரையே தனது பெயரின் முன்னொட்டாக ஒட்டிக்கொண்ட ஆசிரியர் இரா.நடராசனைப் போல் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.


குழந்தைகளை மையப்படுத்தி எழுதும் இன்றைய எழுத்தாளுமைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான நடராசன் 2014-இல் தமது சிறுவர் இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்திய அகாடமி விருதைத் பெற்றவர்.


காலை தூங்கி எழுவதிலிருந்து அன்று இரவு தூங்காமல் அழுவது வரையிலான ஒருநாள் பொழுதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தேவா என்கிற குழந்தையின் எளிய ஆசையை நனவாக்க முடியாமல் போனது ஏன்? என்பதன் பாரத்தை வாசிப்பவர் மனதில் திருத்தமாக இறக்கி வைக்கிறது 'ரோஸ்'.


தேவாவின் வீட்டில் ஜன்னல் ஓரத்தில் ரோஜா செடி அழகாகப் பூத்திருக்கிறது. அதைக் கண்டு விட்டான் தேவா. ஆசையோடு அதைத் தொட்டுப்பார்க்க வேண்டும், பறிக்க வேண்டும் என்பது ஒன்று தான் அந்தக் குழந்தையின் அந்த நாளின் ஆசை. இந்தச் சின்ன ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவனுக்கு இடம் கொடுக்கவில்லை இந்த எந்திர உலகம்.


பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் தேவாவுக்கு அவன் வீட்டு ரோஜாவையே ஞாபகப்படுத்துகிறது. பேப்பர் கட்டிங் கலைஞர் வருகிறார். அவர் காகிதத்தில் ரோஜா எப்படி செய்வது என விளக்குகிறார். 


'லோட்டஸ்' பொயம் நடத்தும் இங்கிலீஷ் மிஸ், 

"....லவ் தான் பூக்களின் தோட்டத்துக்கு காவலாக இருந்தது. அது தாவரங்களின் கடவுளான ஃபுளோரா கிட்டவந்து ஒரு புது பூ வேணும்னு கேட்டது. ..... ரோஜா என்ன கலர்ல இருக்கும்?" என்று கேட்கிறார்.


"மிஸ்... மிஸ்... நான் சொல்றேன் மிஸ்.... எங்கள் வீட்டில் நிஜமாவே ரோஜா பூத்திருக்கு மிஸ்... நான் பாத்தேன் மிஸ்... ரெட் கலர் மிஸ்..." என்கிறான் தேவா.


"செடில ரோஸை பார்க்கிறது பெரிசில்ல.. ரோஸ்... ரோஸ்னு... எழுதிப் பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம... ஆர் ஓ எஸ் ஈ... ரோஸ் கரெக்ட்டா எழுதிப் பழகு.... புரியுதா.... உட்காரு..." என்று அந்த ரோஜாவை (தேவாவை) சூம்பிப் போகச் செய்கிறார் மிஸ்.


தமிழ் மிஸ், ரோஜாவை 'ரோசா' என அழைக்கச் சொல்கிறார். அது ஒரு வெளிநாட்டு செடி என்கிறார்.

பூக்கும், பூவா வகைத் தாவரங்களை விளக்க வரும் சயின்ஸ் மிஸ், தேவாவின் கேள்வியை அடக்க, "... அதெல்லாம் உனக்கு வேண்டாம்... புக்குல இருக்கறத படி.... போதும்...." என்கிறார்.


"ஆமா மிஸ்.... ரோஜா எதுக்கு பூக்குது..."

".... மிஸ்... மிஸ்....எங்கள் வீட்டில் நிஜமாவே ரோஜா பூத்திருக்கு மிஸ்... நான் பாத்தேன் மிஸ்..."

"கொஞ்சம் விட்டா.... ரொம்ப நான்சென்ஸா கேள்வி கேப்பீங்களே....எடு... புக்க... படி... ரோஸ் இஸ் எ பிளவரிங் பிளான்ட் ."


இதே போன்று பெரும்பாலான ஆசிரியர்களிடம் தேவா மொக்கை வாங்கினாலும் அவனது வாஞ்சையான வார்த்தைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. இறுதியாக திரும்பவும் வீடு சென்ற பின்பாக அவன் ரோஜாவைப் பார்க்கிறானா இல்லையா என்பதைக் கதையில் பார்த்துக்கொள்ளுங்கள்.


கால்களில் சக்கரம் கட்டாத குறையாக பொருளாதார காரணங்களுக்காக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர், சிலபஸ் முடிப்பதை மட்டுமே கல்வியின் ஆகச்சிறந்த பணியாக நினைத்து கடமையாற்றும் ஆசிரியர்கள், தன் வீட்டில் பூத்த ஒற்றை ரோஜாவின் அதிசயத்தை, அதன் அழகியலை ஸ்பரிசிக்கத் தவிக்கும் தேவா, அந்த ரோஜானுபவத்தை தங்களுக்குள்ளும் சாரமாக இறக்கிக் கொண்ட அவனது நண்பர்கள் என விறுவிறுவிறுவென ஓடுகிறது கதை.


குழந்தை உளவியலைப் புரிந்துகொள்ள முயலும் ஒவ்வொருவரும் உணர்ந்து படித்து, படித்து உணர வேண்டிய எளிய புத்தகம் 'ரோஸ்'.


- மாணிக்க முனிராஜ்

மார்க்கெட்டிங் மாயவலை - புத்தக மதிப்புரை

 

புத்தகத்தின் பெயர்: மார்க்கெட்டிங் மாயவலை

ஆசிரியர்: கார்த்திகேயன்

பதிப்பகம்: ரஞ்சிதா, 43, அங்குசாமி தெரு, மகாநகர், வண்டியூர், மதுரை - 20, 9036782332

பக்கங்கள்: 68

விலை: ₹120

"முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்" என்கிற இயற்பியல் நியதிக்கு ஏற்ப மார்க்கெட்டிங் மாயாஜாலங்களால் ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் கைப்பற்றும் கார்ப்பரேட் மயப்படுத்தப்பட்ட அரசியல் உலகை எதிர்கொள்ள ஒரே வழி, அதே மார்க்கெட்டிங் யுக்திகளைக் கைக்கொள்வது ஒன்றுதான் என்பதை அனைவருக்கும் குறிப்பாக இன்றைய அரசியல் பயில்வோர்க்கு தெளிவுற விளக்குகிறது இந்த நூல்.


தொடக்கத்தில் ஏதோ ஆங்கிலப்படத்தின் டப்பிங் போல ஒரு உணர்வு ஏற்பட்டாலும் கட்டுரையின் அடுத்தடுத்த கட்டங்களில் நிகழ் அரசியல் போக்கினை விவரிக்கும் யதார்த்தமான அனுகுமுறையால் மாயவலையில் வாசகர்களையும் சிக்கவைக்கிறார் நூலாசிரியர் கார்த்திகேயன்.


ஒரு நாட்டிலிருந்து பிறநாடுகளுக்குச் சென்று தங்கள் நாட்டின் பெருமைகளைப் பேசிய தூதுவர்களும், மதங்களை உருவாக்கிய மூலவர்களும் அவர்களது சீடர்களும்தான் உலகின் முதல் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள் என்கிறார்.


"மன்னர்களின் விருப்பமான மதமாக வேதிய மதம் இருந்தது. இதற்கு மூலவர்கள் இல்லை. இதை உருவாக்கிய தனி நபர் என்று எவரும் இல்லை. ஆனால் அந்த மதத்திற்கு ஒரு நோக்கம் இருந்தது. அதை உருவாக்கிய கூட்டம் மட்டுமே அனைத்து இடங்களிலும் அதிகார மையமாக செயல்பட வேண்டும் என்பது"


"அவர்கள் பரவிய அனைத்து இடங்களிலும் உள்ள சிறுதெய்வ வழிபாடு முன்னோர் வழிபாடு புகழ் வாய்ந்த அரசர்கள் என்று அனைத்தையும் உள்வாங்கி கதைகள் புனைந்து தனிநபர்களை கடவுளாகவும் வழிபாட்டு முறைகளை தங்கள் மதத்தின் ஒரு அங்கமாகவும் நிலைநாட்டினர்."


"இந்த மார்க்கெட்டிங் வெற்றிக்காக அவர்கள் உருவாக்கிய கதைகள் எத்தனை புராணங்கள் எத்தனை இதிகாசங்கள் எத்தனை .... உளவியல் உத்திகள் எத்தனை என்று அறியும்போது மிகப்பெரிய மலைப்பு ஏற்படுகிறது" என்று பிராமணியத்தின் தந்திரமான மார்க்கெட்டிங் உத்திகளை சிறப்பாக விளக்குகிறார் ஆசிரியர்.


ஷாட்கன் அப்ரோச், கொரில்லா மார்க்கெட்டிங், அஃபிலியேட் மார்க்கெட்டிங், இன்ஃபுளூயன்ஸ் மார்க்கெட்டிங் என்று எத்தனையோ வகை மார்க்கெட்டிங் இருந்தாலும் "கூட்டைவிட குருவி தான் முக்கியம்" என்று கன்டென்ட்டின் முக்கியத்துவத்தைத் தெளிவாக்குகிறார். 


"..... எப்பப்பாரு பிரச்சாரம் செய்யக் கூடாது. விவாதம் தான் செய்ய வேண்டும். சண்டை செய்யவேண்டும். சேட்டைகள் செய்ய வேண்டும். மக்களோட பல்ஸ் உணர்ந்தவராகப் பேச வேண்டும். இது உருவாக்கும் சாவோஸ் மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும். நேரடி பிரச்சாரம் இறுதியில் தான் செய்ய வேண்டும்" என்று இன்பௌண்ட் மார்க்கெட்டிங்கைவிட அவுட்பௌண்ட் மார்க்கெட்டிங்கே வீரியம் மிக்கது என்று விளக்குகிறார்.


தேர்தல் வெற்றிக்கு நம் அணி உருவாக்கும் கூட்டணியை விட எதிரி உருவாக்க முயலும் கூட்டணியை உடைக்க வேண்டிய அவசியம் குறித்து உளவியல் கூட்டணி என்ற கட்டுரையில் விளக்குகிறார். மேலும் உளவியல் பகுப்பாய்வு அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.


"நம்பகத்தன்மை, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், 

பொய் பேசாமல் இருத்தல், ஒப்புவித்தலாக இல்லாமல் இயல்பாகப் பேசுவது‍, அழுத்தம் திருத்தமாக 2, 3 பாய்ண்ட்களைப் பேசுவது, தவறுகளை ஒப்புக் கொள்வது" உள்ளிட்ட

மனதைத் தூண்டும் பேச்சு வன்மைக்குரிய 10 கட்டளைகளைப் பரிந்துரைக்கிறார்.  


மொத்தத்தில் ஏவாளை ஃபர்பிடண்ட் ட்ரீயின் ஆப்பிள் பழத்தைத் திண்ண வைத்த செற்பெண்ட்டும் (பாம்பும்), ஹாலோ எஃபக்ட் தந்திரத்தால் மோடி, டிரம்ப் வகையறாக்களை தேசத்தின் உச்சத்தில் அமர்த்திய ஊடகங்களும் பின்பற்றிய சித்து வேலை ஒன்று தான். அது தான் மார்க்கெட்டிங்.


இந்த மார்க்கெட்டிங் கலையை சமத்துவத்தையும் சமூகநீதியையும் காக்க களத்தில் நிற்கும் தம்பிகளும், தொண்டர்களும், தோழர்களும், அண்ணன்களும், தலைவர்களும் அறிந்து புரிந்து செயலாற்ற பயன்படுத்திக் கொள்ள இப்புத்தகம் பயன்படும்.


- மாணிக்க முனிராஜ்

02:07, 12.1.2021

Tuesday, 5 January 2021

சிலேட்டுக்குச்சி - நூல் மதிப்புரை


 *புத்தக மதிப்புரை*

----------------------------------------

புத்தகத்தின் பெயர்: சிலேட்டுக்குச்சி

ஆசிரியர்: சக.முத்துக்கண்ணன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

பக்கங்கள்: 112

விலை: ₹110


"நீரைத் தேடி ஓடும் வேரைப் போல தன்னை ஒத்த மனவயது கொண்ட ஆசிரியர்களை, பெற்றோர்களைத் தேடி அலைகிறார்கள் குழந்தைகள்" என முன்னுரையில் தன்முகம் காட்டும் முத்துக்கண்ணன், தன் பெயருக்குப் பிறப்பால் வந்த (சக) முன்னெழுத்துகளின் இயல்பைப் போலவே நூல் முழுதும் குழந்தைகளின் பிரியமான ஒரு சகாவாகவே திரிகிறார்.

குழந்தைகளைப் பொறுத்தவரை "சும்மா சொல்வது" வேறு "பொய் சொல்வது" வேறு. அப்படி சும்மா சொன்ன மனோஜால் ஆசிரியர் படும் பாடு, 

ஆசிரியர்களுக்கு விதவிதமாக மாணவர்கள் சூட்டும் 'பட்டப்பெயர்கள்',

"பெய்யெனப் பெய்து தீர்த்த" 200 மில்லி லிட்டர் நியாயம் கொண்ட ஒண்ணுக்கு சம்பவம்,

சட்டையின் உள்பக்கம் எழுதிய பிட்டு போன்றவையெல்லாம் சிரிப்பால் ஒரு புறம் சிந்திக்க வைக்கின்றன.


மறுபுறம், வகுப்பில் கடைசி மாணவனான அன்சாரியின் கைகளில் கலர் சாக்பீஸ் கொடுத்து பின்னர் அவனிடம் வாங்கி எழுதி அவனைப் பெருமைப்படுத்திய பன்னீர் சாரும், 

"எல்லாஞ் சாப்டிங்களா?" எனக் கேட்டு விட்டு அட்டன்டன்ஸ் எடுக்கும் ராமரய்யாவும், 

கண்பார்வைக்கு இணையாக காதுகளிலேயே பார்க்கும் திறம் படைத்த முருகன் சாரும், 

பெண் குழந்தைகளின் மானம் காத்த சுந்தர் சாரும், கதைகளின் வாசற்கதவைத் திறந்தவிட்ட மாதவன் ஐயாவும்,

குழந்தைகளுக்கான பிரச்சனைகளைச் சொல்ல வாய்ப்பு தந்து அவர்களுக்காக பிரே பண்ணும் அற்புதம்மேரி டீச்சரும்,

எப்போதும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியராக விளங்கும் பஞ்சம்மா டீச்சரும் குழந்தைகளைக் கையாளும் விதமும், அவர்களின் மீது அன்பைச் சொரியும் விதமும் கண்களைக் குளமாக்குகின்றன.


'தொக்குச்சிய்யம்', 'தொண்ணச் சோறு' போன்ற வெவ்வேறு பதங்களின் விளக்கமும், அவற்றின் மூலம் வெளிப்படும் ஆழமும் அழுத்தமுமான உணர்வுகளும் சொற்களுக்கு உயிருள்ளதை உரக்கச் சொல்கின்றன.


"ஆசிரியரின் அர்ப்பணிப்பு மிக்க எந்தவொரு வகுப்பிலும் மாணவர்கள் பொய் பேசுவதில்லை. இது கட்டுப்பாடின்றி தானே நிகழும். கட்டுப்படுத்தி எதைத்தான் நிரந்தரமாக சாதித்து விட முடிகிறது?" என்கிறார். எவ்வளவு பெரிய உண்மை. இன்றைக்கு கட்டுப்பாடு மிகுந்ததாகச் சொல்லப்படும் பள்ளிக்கூடத்தை நோக்கி ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது.


'ஆணுக்குள் ஒரு எக்ஸ்' என்ற 10 ஆவது கட்டுரையில், அரசு சீருடை அணிந்த மாணவர்களைத் தனது காரில் சுற்றுலா அழைத்து வந்த அந்தப் பெயர் தெரியாத ஆசிரியர், ஏழெட்டு வயது பெண் குழந்தை வயிற்றால் கழிந்ததால் கேன் வாட்டரைக் கொண்டு சுத்தம் செய்ததைச் சொல்லும் இறுதி வரிகளில் இப்படி முடிக்கிறார், "அந்தப் பொண்ணு மட்டும் யூனிஃபார்ம்ல இல்லாட்டி அவங்கப்பான்னு நெனச்சிருப்பேங்க"... "அவரு பிள்ளெங்களுக்கு செஞ்சா அப்பான்னு சொல்லலாம். அடுத்தவங்க பிள்ளெங்களுக்கு செஞ்சா அம்மான்னுதானே சொல்லணும்"


இந்நூலின் வகைமை பெயரளவிற்கு கட்டுரைத் தொகுப்பு என்று இருந்தாலும் 17 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பைப் போலவே வாசிப்பவர்களுக்கான அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். ஒவ்வொரு கதையின் முடிவிலும் மனதில் தைப்பதைப் போன்ற ஒரு கிளைமாக்ஸில் முடிக்கிறார் ஆசிரியர்.


குடிக்கும் அப்பாக்களைக் கண்டறிய கண்ணை மூடி கையுயர்த்தச் சொல்கிறார். வகுப்பில் ஒரே ஒரு மாணவனைத் தவிர எல்லோரும் கையை உயர்த்துகின்றனர். அந்த ஒரு மாணவனை மட்டும் தனியே அழைத்து கேட்கிறார். "அவனுக்கு அப்பா இல்லை"! இன்றைய அப்பாக்களின் குடிநோயால் நாளைய சமூகமே அழுகிப் பாழாகும் அவலநிலையை எதிர்நோக்கி உள்ளதை 'மணல் கடிகாரம்' என்ற அத்தியாயயம் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது.


"விட்டு விடுங்கள் வீதிகள் பார்த்துக்கொள்ளும்" என்று கோடைவிடுமுறையில் குழந்தைகளின் சுதந்திரத்திற்காக அரை கூவல் விடுக்கிறார். எத்தனைப் பெற்றோர் காதுகளில் இது சென்று சேரும் என்பது தெரியவில்லை.


தான் குழந்தையாக இருந்தபோது தனக்கு நேர்ந்ததையும், தன்னிடம் தன் வகுப்பில் உள்ள குழந்தைகள் வழியாகத் தான் உணர்ந்ததையும் மிகுந்த நகைச்சுவையோடும், குழந்தைகள் மீது சமூகம் காட்டவேண்டிய அலாதியான அக்கரையோடும் எழுதப்பட்டுள்ள நூல் இது.


குழந்தைகளின் குழந்தைமையை மேலும் புரிந்துகொள்ளவும், அவர்களின் சுற்றமறிந்து, சூழலறிந்து அவர்களுக்குத் தேவையானதை, தேவையான அளவில், தேவையான நேரத்தில் ஊட்டக் கூடிய பக்குவத்தை மேம்படுத்திக் கொள்ளவும், தாங்கள் நழுவவிட்ட இடங்களில் தங்களை சரிப்படுத்தி நிலைநிறுத்திக்கொள்ளவும் ஆசிரியராகப் பணிபுரிகிற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் 'சிலேட்டுக்குச்சி'.


- மாணிக்க முனிராஜ்

மண்ட பத்திரம்!

மழை வேண்டி மண்டையில் தேங்காய் உடைக்கும் மர மண்டைகளே! தேங்காய் உடைத்தால் மேகம் உடையுமா? எலுமிச்சை உருட்டினால் வானம் உருகுமா? ஆடு வெட்டினால் ஆ...