Wednesday, 13 January 2021

ரோஸ் - புத்தக மதிப்புரை



புத்தகத்தின் பெயர்: ரோஸ்

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

பக்கங்கள்: 64

விலை: ₹60


அவசர வாழ்க்கையின் அன்றாட நெருக்கடியில் எவ்வித அக்கறையும் இல்லாமல் ஒரு குழந்தையின் உள்ளம் எந்த அளவிற்கு அலட்சியப்படுத்தப்படுகிறது என்பதைத் தனது "ரோஸ்" என்கிற கதையின் மூலம் அழுத்தமாகப் பதிய வைக்கிறார் ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன்.


நிழல்கள் ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற சினிமா நடிகர்களின் பெயர்களை சிறுவயதில் கேள்விப்படும்போது ஒரு கிரக்கம் இருக்கும். பின்னாளில் ஜெயம் ரவி வந்தபின்பு தான் அந்தப் பெயர்களின் தேவையும் அழகும் புரிந்தது. இப்போக்கு சினிமா உலகில் அதிகம். ஆனால் எழுத்துலகில், தான் எழுதிய முதல் கதையான 'ஆயிஷா'-வின் பெயரையே தனது பெயரின் முன்னொட்டாக ஒட்டிக்கொண்ட ஆசிரியர் இரா.நடராசனைப் போல் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.


குழந்தைகளை மையப்படுத்தி எழுதும் இன்றைய எழுத்தாளுமைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான நடராசன் 2014-இல் தமது சிறுவர் இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்திய அகாடமி விருதைத் பெற்றவர்.


காலை தூங்கி எழுவதிலிருந்து அன்று இரவு தூங்காமல் அழுவது வரையிலான ஒருநாள் பொழுதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தேவா என்கிற குழந்தையின் எளிய ஆசையை நனவாக்க முடியாமல் போனது ஏன்? என்பதன் பாரத்தை வாசிப்பவர் மனதில் திருத்தமாக இறக்கி வைக்கிறது 'ரோஸ்'.


தேவாவின் வீட்டில் ஜன்னல் ஓரத்தில் ரோஜா செடி அழகாகப் பூத்திருக்கிறது. அதைக் கண்டு விட்டான் தேவா. ஆசையோடு அதைத் தொட்டுப்பார்க்க வேண்டும், பறிக்க வேண்டும் என்பது ஒன்று தான் அந்தக் குழந்தையின் அந்த நாளின் ஆசை. இந்தச் சின்ன ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவனுக்கு இடம் கொடுக்கவில்லை இந்த எந்திர உலகம்.


பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் தேவாவுக்கு அவன் வீட்டு ரோஜாவையே ஞாபகப்படுத்துகிறது. பேப்பர் கட்டிங் கலைஞர் வருகிறார். அவர் காகிதத்தில் ரோஜா எப்படி செய்வது என விளக்குகிறார். 


'லோட்டஸ்' பொயம் நடத்தும் இங்கிலீஷ் மிஸ், 

"....லவ் தான் பூக்களின் தோட்டத்துக்கு காவலாக இருந்தது. அது தாவரங்களின் கடவுளான ஃபுளோரா கிட்டவந்து ஒரு புது பூ வேணும்னு கேட்டது. ..... ரோஜா என்ன கலர்ல இருக்கும்?" என்று கேட்கிறார்.


"மிஸ்... மிஸ்... நான் சொல்றேன் மிஸ்.... எங்கள் வீட்டில் நிஜமாவே ரோஜா பூத்திருக்கு மிஸ்... நான் பாத்தேன் மிஸ்... ரெட் கலர் மிஸ்..." என்கிறான் தேவா.


"செடில ரோஸை பார்க்கிறது பெரிசில்ல.. ரோஸ்... ரோஸ்னு... எழுதிப் பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம... ஆர் ஓ எஸ் ஈ... ரோஸ் கரெக்ட்டா எழுதிப் பழகு.... புரியுதா.... உட்காரு..." என்று அந்த ரோஜாவை (தேவாவை) சூம்பிப் போகச் செய்கிறார் மிஸ்.


தமிழ் மிஸ், ரோஜாவை 'ரோசா' என அழைக்கச் சொல்கிறார். அது ஒரு வெளிநாட்டு செடி என்கிறார்.

பூக்கும், பூவா வகைத் தாவரங்களை விளக்க வரும் சயின்ஸ் மிஸ், தேவாவின் கேள்வியை அடக்க, "... அதெல்லாம் உனக்கு வேண்டாம்... புக்குல இருக்கறத படி.... போதும்...." என்கிறார்.


"ஆமா மிஸ்.... ரோஜா எதுக்கு பூக்குது..."

".... மிஸ்... மிஸ்....எங்கள் வீட்டில் நிஜமாவே ரோஜா பூத்திருக்கு மிஸ்... நான் பாத்தேன் மிஸ்..."

"கொஞ்சம் விட்டா.... ரொம்ப நான்சென்ஸா கேள்வி கேப்பீங்களே....எடு... புக்க... படி... ரோஸ் இஸ் எ பிளவரிங் பிளான்ட் ."


இதே போன்று பெரும்பாலான ஆசிரியர்களிடம் தேவா மொக்கை வாங்கினாலும் அவனது வாஞ்சையான வார்த்தைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. இறுதியாக திரும்பவும் வீடு சென்ற பின்பாக அவன் ரோஜாவைப் பார்க்கிறானா இல்லையா என்பதைக் கதையில் பார்த்துக்கொள்ளுங்கள்.


கால்களில் சக்கரம் கட்டாத குறையாக பொருளாதார காரணங்களுக்காக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர், சிலபஸ் முடிப்பதை மட்டுமே கல்வியின் ஆகச்சிறந்த பணியாக நினைத்து கடமையாற்றும் ஆசிரியர்கள், தன் வீட்டில் பூத்த ஒற்றை ரோஜாவின் அதிசயத்தை, அதன் அழகியலை ஸ்பரிசிக்கத் தவிக்கும் தேவா, அந்த ரோஜானுபவத்தை தங்களுக்குள்ளும் சாரமாக இறக்கிக் கொண்ட அவனது நண்பர்கள் என விறுவிறுவிறுவென ஓடுகிறது கதை.


குழந்தை உளவியலைப் புரிந்துகொள்ள முயலும் ஒவ்வொருவரும் உணர்ந்து படித்து, படித்து உணர வேண்டிய எளிய புத்தகம் 'ரோஸ்'.


- மாணிக்க முனிராஜ்

மார்க்கெட்டிங் மாயவலை - புத்தக மதிப்புரை

 

புத்தகத்தின் பெயர்: மார்க்கெட்டிங் மாயவலை

ஆசிரியர்: கார்த்திகேயன்

பதிப்பகம்: ரஞ்சிதா, 43, அங்குசாமி தெரு, மகாநகர், வண்டியூர், மதுரை - 20, 9036782332

பக்கங்கள்: 68

விலை: ₹120

"முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்" என்கிற இயற்பியல் நியதிக்கு ஏற்ப மார்க்கெட்டிங் மாயாஜாலங்களால் ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் கைப்பற்றும் கார்ப்பரேட் மயப்படுத்தப்பட்ட அரசியல் உலகை எதிர்கொள்ள ஒரே வழி, அதே மார்க்கெட்டிங் யுக்திகளைக் கைக்கொள்வது ஒன்றுதான் என்பதை அனைவருக்கும் குறிப்பாக இன்றைய அரசியல் பயில்வோர்க்கு தெளிவுற விளக்குகிறது இந்த நூல்.


தொடக்கத்தில் ஏதோ ஆங்கிலப்படத்தின் டப்பிங் போல ஒரு உணர்வு ஏற்பட்டாலும் கட்டுரையின் அடுத்தடுத்த கட்டங்களில் நிகழ் அரசியல் போக்கினை விவரிக்கும் யதார்த்தமான அனுகுமுறையால் மாயவலையில் வாசகர்களையும் சிக்கவைக்கிறார் நூலாசிரியர் கார்த்திகேயன்.


ஒரு நாட்டிலிருந்து பிறநாடுகளுக்குச் சென்று தங்கள் நாட்டின் பெருமைகளைப் பேசிய தூதுவர்களும், மதங்களை உருவாக்கிய மூலவர்களும் அவர்களது சீடர்களும்தான் உலகின் முதல் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள் என்கிறார்.


"மன்னர்களின் விருப்பமான மதமாக வேதிய மதம் இருந்தது. இதற்கு மூலவர்கள் இல்லை. இதை உருவாக்கிய தனி நபர் என்று எவரும் இல்லை. ஆனால் அந்த மதத்திற்கு ஒரு நோக்கம் இருந்தது. அதை உருவாக்கிய கூட்டம் மட்டுமே அனைத்து இடங்களிலும் அதிகார மையமாக செயல்பட வேண்டும் என்பது"


"அவர்கள் பரவிய அனைத்து இடங்களிலும் உள்ள சிறுதெய்வ வழிபாடு முன்னோர் வழிபாடு புகழ் வாய்ந்த அரசர்கள் என்று அனைத்தையும் உள்வாங்கி கதைகள் புனைந்து தனிநபர்களை கடவுளாகவும் வழிபாட்டு முறைகளை தங்கள் மதத்தின் ஒரு அங்கமாகவும் நிலைநாட்டினர்."


"இந்த மார்க்கெட்டிங் வெற்றிக்காக அவர்கள் உருவாக்கிய கதைகள் எத்தனை புராணங்கள் எத்தனை இதிகாசங்கள் எத்தனை .... உளவியல் உத்திகள் எத்தனை என்று அறியும்போது மிகப்பெரிய மலைப்பு ஏற்படுகிறது" என்று பிராமணியத்தின் தந்திரமான மார்க்கெட்டிங் உத்திகளை சிறப்பாக விளக்குகிறார் ஆசிரியர்.


ஷாட்கன் அப்ரோச், கொரில்லா மார்க்கெட்டிங், அஃபிலியேட் மார்க்கெட்டிங், இன்ஃபுளூயன்ஸ் மார்க்கெட்டிங் என்று எத்தனையோ வகை மார்க்கெட்டிங் இருந்தாலும் "கூட்டைவிட குருவி தான் முக்கியம்" என்று கன்டென்ட்டின் முக்கியத்துவத்தைத் தெளிவாக்குகிறார். 


"..... எப்பப்பாரு பிரச்சாரம் செய்யக் கூடாது. விவாதம் தான் செய்ய வேண்டும். சண்டை செய்யவேண்டும். சேட்டைகள் செய்ய வேண்டும். மக்களோட பல்ஸ் உணர்ந்தவராகப் பேச வேண்டும். இது உருவாக்கும் சாவோஸ் மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும். நேரடி பிரச்சாரம் இறுதியில் தான் செய்ய வேண்டும்" என்று இன்பௌண்ட் மார்க்கெட்டிங்கைவிட அவுட்பௌண்ட் மார்க்கெட்டிங்கே வீரியம் மிக்கது என்று விளக்குகிறார்.


தேர்தல் வெற்றிக்கு நம் அணி உருவாக்கும் கூட்டணியை விட எதிரி உருவாக்க முயலும் கூட்டணியை உடைக்க வேண்டிய அவசியம் குறித்து உளவியல் கூட்டணி என்ற கட்டுரையில் விளக்குகிறார். மேலும் உளவியல் பகுப்பாய்வு அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.


"நம்பகத்தன்மை, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், 

பொய் பேசாமல் இருத்தல், ஒப்புவித்தலாக இல்லாமல் இயல்பாகப் பேசுவது‍, அழுத்தம் திருத்தமாக 2, 3 பாய்ண்ட்களைப் பேசுவது, தவறுகளை ஒப்புக் கொள்வது" உள்ளிட்ட

மனதைத் தூண்டும் பேச்சு வன்மைக்குரிய 10 கட்டளைகளைப் பரிந்துரைக்கிறார்.  


மொத்தத்தில் ஏவாளை ஃபர்பிடண்ட் ட்ரீயின் ஆப்பிள் பழத்தைத் திண்ண வைத்த செற்பெண்ட்டும் (பாம்பும்), ஹாலோ எஃபக்ட் தந்திரத்தால் மோடி, டிரம்ப் வகையறாக்களை தேசத்தின் உச்சத்தில் அமர்த்திய ஊடகங்களும் பின்பற்றிய சித்து வேலை ஒன்று தான். அது தான் மார்க்கெட்டிங்.


இந்த மார்க்கெட்டிங் கலையை சமத்துவத்தையும் சமூகநீதியையும் காக்க களத்தில் நிற்கும் தம்பிகளும், தொண்டர்களும், தோழர்களும், அண்ணன்களும், தலைவர்களும் அறிந்து புரிந்து செயலாற்ற பயன்படுத்திக் கொள்ள இப்புத்தகம் பயன்படும்.


- மாணிக்க முனிராஜ்

02:07, 12.1.2021

Tuesday, 5 January 2021

சிலேட்டுக்குச்சி - நூல் மதிப்புரை


 *புத்தக மதிப்புரை*

----------------------------------------

புத்தகத்தின் பெயர்: சிலேட்டுக்குச்சி

ஆசிரியர்: சக.முத்துக்கண்ணன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

பக்கங்கள்: 112

விலை: ₹110


"நீரைத் தேடி ஓடும் வேரைப் போல தன்னை ஒத்த மனவயது கொண்ட ஆசிரியர்களை, பெற்றோர்களைத் தேடி அலைகிறார்கள் குழந்தைகள்" என முன்னுரையில் தன்முகம் காட்டும் முத்துக்கண்ணன், தன் பெயருக்குப் பிறப்பால் வந்த (சக) முன்னெழுத்துகளின் இயல்பைப் போலவே நூல் முழுதும் குழந்தைகளின் பிரியமான ஒரு சகாவாகவே திரிகிறார்.

குழந்தைகளைப் பொறுத்தவரை "சும்மா சொல்வது" வேறு "பொய் சொல்வது" வேறு. அப்படி சும்மா சொன்ன மனோஜால் ஆசிரியர் படும் பாடு, 

ஆசிரியர்களுக்கு விதவிதமாக மாணவர்கள் சூட்டும் 'பட்டப்பெயர்கள்',

"பெய்யெனப் பெய்து தீர்த்த" 200 மில்லி லிட்டர் நியாயம் கொண்ட ஒண்ணுக்கு சம்பவம்,

சட்டையின் உள்பக்கம் எழுதிய பிட்டு போன்றவையெல்லாம் சிரிப்பால் ஒரு புறம் சிந்திக்க வைக்கின்றன.


மறுபுறம், வகுப்பில் கடைசி மாணவனான அன்சாரியின் கைகளில் கலர் சாக்பீஸ் கொடுத்து பின்னர் அவனிடம் வாங்கி எழுதி அவனைப் பெருமைப்படுத்திய பன்னீர் சாரும், 

"எல்லாஞ் சாப்டிங்களா?" எனக் கேட்டு விட்டு அட்டன்டன்ஸ் எடுக்கும் ராமரய்யாவும், 

கண்பார்வைக்கு இணையாக காதுகளிலேயே பார்க்கும் திறம் படைத்த முருகன் சாரும், 

பெண் குழந்தைகளின் மானம் காத்த சுந்தர் சாரும், கதைகளின் வாசற்கதவைத் திறந்தவிட்ட மாதவன் ஐயாவும்,

குழந்தைகளுக்கான பிரச்சனைகளைச் சொல்ல வாய்ப்பு தந்து அவர்களுக்காக பிரே பண்ணும் அற்புதம்மேரி டீச்சரும்,

எப்போதும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியராக விளங்கும் பஞ்சம்மா டீச்சரும் குழந்தைகளைக் கையாளும் விதமும், அவர்களின் மீது அன்பைச் சொரியும் விதமும் கண்களைக் குளமாக்குகின்றன.


'தொக்குச்சிய்யம்', 'தொண்ணச் சோறு' போன்ற வெவ்வேறு பதங்களின் விளக்கமும், அவற்றின் மூலம் வெளிப்படும் ஆழமும் அழுத்தமுமான உணர்வுகளும் சொற்களுக்கு உயிருள்ளதை உரக்கச் சொல்கின்றன.


"ஆசிரியரின் அர்ப்பணிப்பு மிக்க எந்தவொரு வகுப்பிலும் மாணவர்கள் பொய் பேசுவதில்லை. இது கட்டுப்பாடின்றி தானே நிகழும். கட்டுப்படுத்தி எதைத்தான் நிரந்தரமாக சாதித்து விட முடிகிறது?" என்கிறார். எவ்வளவு பெரிய உண்மை. இன்றைக்கு கட்டுப்பாடு மிகுந்ததாகச் சொல்லப்படும் பள்ளிக்கூடத்தை நோக்கி ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது.


'ஆணுக்குள் ஒரு எக்ஸ்' என்ற 10 ஆவது கட்டுரையில், அரசு சீருடை அணிந்த மாணவர்களைத் தனது காரில் சுற்றுலா அழைத்து வந்த அந்தப் பெயர் தெரியாத ஆசிரியர், ஏழெட்டு வயது பெண் குழந்தை வயிற்றால் கழிந்ததால் கேன் வாட்டரைக் கொண்டு சுத்தம் செய்ததைச் சொல்லும் இறுதி வரிகளில் இப்படி முடிக்கிறார், "அந்தப் பொண்ணு மட்டும் யூனிஃபார்ம்ல இல்லாட்டி அவங்கப்பான்னு நெனச்சிருப்பேங்க"... "அவரு பிள்ளெங்களுக்கு செஞ்சா அப்பான்னு சொல்லலாம். அடுத்தவங்க பிள்ளெங்களுக்கு செஞ்சா அம்மான்னுதானே சொல்லணும்"


இந்நூலின் வகைமை பெயரளவிற்கு கட்டுரைத் தொகுப்பு என்று இருந்தாலும் 17 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பைப் போலவே வாசிப்பவர்களுக்கான அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். ஒவ்வொரு கதையின் முடிவிலும் மனதில் தைப்பதைப் போன்ற ஒரு கிளைமாக்ஸில் முடிக்கிறார் ஆசிரியர்.


குடிக்கும் அப்பாக்களைக் கண்டறிய கண்ணை மூடி கையுயர்த்தச் சொல்கிறார். வகுப்பில் ஒரே ஒரு மாணவனைத் தவிர எல்லோரும் கையை உயர்த்துகின்றனர். அந்த ஒரு மாணவனை மட்டும் தனியே அழைத்து கேட்கிறார். "அவனுக்கு அப்பா இல்லை"! இன்றைய அப்பாக்களின் குடிநோயால் நாளைய சமூகமே அழுகிப் பாழாகும் அவலநிலையை எதிர்நோக்கி உள்ளதை 'மணல் கடிகாரம்' என்ற அத்தியாயயம் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது.


"விட்டு விடுங்கள் வீதிகள் பார்த்துக்கொள்ளும்" என்று கோடைவிடுமுறையில் குழந்தைகளின் சுதந்திரத்திற்காக அரை கூவல் விடுக்கிறார். எத்தனைப் பெற்றோர் காதுகளில் இது சென்று சேரும் என்பது தெரியவில்லை.


தான் குழந்தையாக இருந்தபோது தனக்கு நேர்ந்ததையும், தன்னிடம் தன் வகுப்பில் உள்ள குழந்தைகள் வழியாகத் தான் உணர்ந்ததையும் மிகுந்த நகைச்சுவையோடும், குழந்தைகள் மீது சமூகம் காட்டவேண்டிய அலாதியான அக்கரையோடும் எழுதப்பட்டுள்ள நூல் இது.


குழந்தைகளின் குழந்தைமையை மேலும் புரிந்துகொள்ளவும், அவர்களின் சுற்றமறிந்து, சூழலறிந்து அவர்களுக்குத் தேவையானதை, தேவையான அளவில், தேவையான நேரத்தில் ஊட்டக் கூடிய பக்குவத்தை மேம்படுத்திக் கொள்ளவும், தாங்கள் நழுவவிட்ட இடங்களில் தங்களை சரிப்படுத்தி நிலைநிறுத்திக்கொள்ளவும் ஆசிரியராகப் பணிபுரிகிற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் 'சிலேட்டுக்குச்சி'.


- மாணிக்க முனிராஜ்

அறுபடாத தொடர் சங்கிலி

மாற்றத்தின் மணற்கேணியில் தொட்டனைத்து ஊறிப் பரவிய உலகின் பல படைப்புகளை உளமாற நுகர்வது  வாசிப்பு வாசிப்பின் பகிர்மாணத்தில் உழைப்பின் துளிகளில்...