உலக மகளிர் தினத்தை வெறுமனே மகளிர் தினமாகக் கொண்டாடாமல் உலக உழைக்கும் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம்.
உழைக்காமல் குடும்பத்தையே சுரண்டி, குடித்துக் கூத்தடித்து, குடும்பத்தை அண்டி வாழும் ஆண்கள் வேண்டுமானால் உண்டு. உழைக்காத பெண் ஒருவர் உலகில் இல்லை.
வேலைக்குப் போகும் பெண்கள் அனைவரும் பணியிடங்களில் தங்கள் உழைப்பைச் செலுத்துவது மட்டும் அல்லாமல் பணி முடித்து வீட்டுக்கு வந்த பின்பு வீட்டில் இருக்கும் பணிகளையும் கவனித்து *இரட்டை உழைப்பை* ஒவ்வொரு நாளும் செலுத்தி வருகின்றனர்.
குடும்பங்களைப் பராமரித்து வரும் பல பெண்களை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டால் "நான் எந்த வேலைக்கும் செல்வதில்லை. வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்" என்று சாதாரணமாகக் கூறுவார்கள்.
உழைக்கும் மகளிர் என்பதில் உள்ள 'உழைக்கும்' என்ற சொல்லை, 'பொருளாதார ரீதியாக பணம் ஈட்டும்' என்று மட்டுமே பொருள் கொள்ளக்கூடாது.
ஏனென்றால் குடும்பத்தில் உள்ள அனைவரின் உற்பத்தித் திறனுக்கும் உந்து விசை அளிக்கும் பெண்ணின் உழைப்புக்கு ஊதியம் கணக்கிட்டால்தான், வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பின் மதிப்பு எவ்வளவு என்று தெரியும்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சமீபத்திய அறிக்கையில், "வீட்டு வேலைகளைச் செய்யும் அனைத்து பெண்களுக்கும் அவர்களின் வேலைக்கான ஊதியம் வழங்கப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் மொத்தத் தொகை இந்தியாவின் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 விழுக்காட்டுக்கு நிகராக இருக்கும்" என்கிறது.
"15 முதல் 60 வயது வரை உள்ள இந்தியப் பெண்கள் தங்கள் தினசரி நேரத்தில் சுமார் 7.2 மணி நேரத்தை வீட்டு வேலையில் செலவிடுகிறார்கள் என்பதால் பெண்களுக்கு ஓய்வெடுக்கக் கூட நேரம் கிடைக்காத “நேர வறுமை” இருக்கிறது" என்று ஐஐஎம்ஏ பேராசிரியர் நம்ரதா சிந்தார்கர் கூறுகிறார்.
பெண்களுக்கான இந்த நேர வறுமையைப் போக்க வீட்டு வேலைகள் பலவும் சமூக வேலைகளாக மடை மாற்றம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக சோஷியல் கிட்சன் என்று சொல்லப்படும் ஆரோக்கியமான சத்தான சமூக உணவு தயாரிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அது சாத்தியமாக முதலில் வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தும் வீட்டில் உள்ள ஆண், பெண் நபர்கள் அனைவருக்கும், அவரவர்களின் வயது மற்றும் சக்திக்கேற்ப சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக குழந்தை வளர்ப்பில் பாலினப் பாகுபாட்டை அறவே ஒழிக்கும் வகையில், வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, சுத்தமாகப் பராமரிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற அன்றாட அடிப்படைப் பணிகளை ஆண், பெண் குழந்தைகளுக்கு மாற்றி மாற்றி அளித்து பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் பெண்களின் வேலைகள் என்கிற பிற்போக்குச் சிந்தனையை ஆண் குழந்தைகளின் மூளைகளில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.
பெண்ணை ஆணுக்கு அடிமை என்று சொல்லி பேதப்படுத்தும் புராண, இதிகாசக் கசடுகள் குழந்தைகளிடம் சேராமல் தடுக்கப்பட வேண்டும். சமத்துவமின்மை எனும் பிற்போக்குத்தனத்தைப் பயிற்றுவிக்கும், நியாயப்படுத்தும் எதுவும் சமூக முன்னேற்றத்திற்கான தடைக்கற்களே என்பதை நமது அடுத்த தலைமுறைக்குப் புரிய வைப்போம். தடைகளை உண்டாக்கும் தாடைகள் பெண்களின் கைகளால் நாளை உடைபடும்.
அரசியல் சமத்துவத்துக்கான வாய்ப்பாடு சமூக சமத்துவத்தில் அடங்கியிருக்கிறது. சமூக சமத்துவத்துக்கான வாய்ப்பாடு பாலின சமத்துவத்தில் அடங்கியிருக்கிறது. பாலின சமத்துவத்துக்கான வாய்ப்பாடு வீட்டில் உள்ள குழந்தைகளை சமத்துவமாக வளர்ப்பதில் அடங்கியிருக்கிறது. ஆகவெ நாம் அனைவரும் "ஆணும் பெண்ணும் ஒன்னு - அதை மறுப்பவர் தலையில மண்ணு" எனும் சமத்துவ வாய்ப்பாட்டைப் பயில்வோம். அனைவரும் மகிழ்வோம்.
உழைக்காத மகளிர் உலகில் இல்லை!
மகளிர் உழைக்காமல் உலகே இல்லை!!
உழைப்பே உருவான மகளிர் அனைவருக்கும்
உலக உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
-மாணிக்க முனிராஜ்

No comments:
Post a Comment