Wednesday, 13 January 2021

ரோஸ் - புத்தக மதிப்புரை



புத்தகத்தின் பெயர்: ரோஸ்

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

பக்கங்கள்: 64

விலை: ₹60


அவசர வாழ்க்கையின் அன்றாட நெருக்கடியில் எவ்வித அக்கறையும் இல்லாமல் ஒரு குழந்தையின் உள்ளம் எந்த அளவிற்கு அலட்சியப்படுத்தப்படுகிறது என்பதைத் தனது "ரோஸ்" என்கிற கதையின் மூலம் அழுத்தமாகப் பதிய வைக்கிறார் ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன்.


நிழல்கள் ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற சினிமா நடிகர்களின் பெயர்களை சிறுவயதில் கேள்விப்படும்போது ஒரு கிரக்கம் இருக்கும். பின்னாளில் ஜெயம் ரவி வந்தபின்பு தான் அந்தப் பெயர்களின் தேவையும் அழகும் புரிந்தது. இப்போக்கு சினிமா உலகில் அதிகம். ஆனால் எழுத்துலகில், தான் எழுதிய முதல் கதையான 'ஆயிஷா'-வின் பெயரையே தனது பெயரின் முன்னொட்டாக ஒட்டிக்கொண்ட ஆசிரியர் இரா.நடராசனைப் போல் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.


குழந்தைகளை மையப்படுத்தி எழுதும் இன்றைய எழுத்தாளுமைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான நடராசன் 2014-இல் தமது சிறுவர் இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்திய அகாடமி விருதைத் பெற்றவர்.


காலை தூங்கி எழுவதிலிருந்து அன்று இரவு தூங்காமல் அழுவது வரையிலான ஒருநாள் பொழுதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தேவா என்கிற குழந்தையின் எளிய ஆசையை நனவாக்க முடியாமல் போனது ஏன்? என்பதன் பாரத்தை வாசிப்பவர் மனதில் திருத்தமாக இறக்கி வைக்கிறது 'ரோஸ்'.


தேவாவின் வீட்டில் ஜன்னல் ஓரத்தில் ரோஜா செடி அழகாகப் பூத்திருக்கிறது. அதைக் கண்டு விட்டான் தேவா. ஆசையோடு அதைத் தொட்டுப்பார்க்க வேண்டும், பறிக்க வேண்டும் என்பது ஒன்று தான் அந்தக் குழந்தையின் அந்த நாளின் ஆசை. இந்தச் சின்ன ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவனுக்கு இடம் கொடுக்கவில்லை இந்த எந்திர உலகம்.


பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் தேவாவுக்கு அவன் வீட்டு ரோஜாவையே ஞாபகப்படுத்துகிறது. பேப்பர் கட்டிங் கலைஞர் வருகிறார். அவர் காகிதத்தில் ரோஜா எப்படி செய்வது என விளக்குகிறார். 


'லோட்டஸ்' பொயம் நடத்தும் இங்கிலீஷ் மிஸ், 

"....லவ் தான் பூக்களின் தோட்டத்துக்கு காவலாக இருந்தது. அது தாவரங்களின் கடவுளான ஃபுளோரா கிட்டவந்து ஒரு புது பூ வேணும்னு கேட்டது. ..... ரோஜா என்ன கலர்ல இருக்கும்?" என்று கேட்கிறார்.


"மிஸ்... மிஸ்... நான் சொல்றேன் மிஸ்.... எங்கள் வீட்டில் நிஜமாவே ரோஜா பூத்திருக்கு மிஸ்... நான் பாத்தேன் மிஸ்... ரெட் கலர் மிஸ்..." என்கிறான் தேவா.


"செடில ரோஸை பார்க்கிறது பெரிசில்ல.. ரோஸ்... ரோஸ்னு... எழுதிப் பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம... ஆர் ஓ எஸ் ஈ... ரோஸ் கரெக்ட்டா எழுதிப் பழகு.... புரியுதா.... உட்காரு..." என்று அந்த ரோஜாவை (தேவாவை) சூம்பிப் போகச் செய்கிறார் மிஸ்.


தமிழ் மிஸ், ரோஜாவை 'ரோசா' என அழைக்கச் சொல்கிறார். அது ஒரு வெளிநாட்டு செடி என்கிறார்.

பூக்கும், பூவா வகைத் தாவரங்களை விளக்க வரும் சயின்ஸ் மிஸ், தேவாவின் கேள்வியை அடக்க, "... அதெல்லாம் உனக்கு வேண்டாம்... புக்குல இருக்கறத படி.... போதும்...." என்கிறார்.


"ஆமா மிஸ்.... ரோஜா எதுக்கு பூக்குது..."

".... மிஸ்... மிஸ்....எங்கள் வீட்டில் நிஜமாவே ரோஜா பூத்திருக்கு மிஸ்... நான் பாத்தேன் மிஸ்..."

"கொஞ்சம் விட்டா.... ரொம்ப நான்சென்ஸா கேள்வி கேப்பீங்களே....எடு... புக்க... படி... ரோஸ் இஸ் எ பிளவரிங் பிளான்ட் ."


இதே போன்று பெரும்பாலான ஆசிரியர்களிடம் தேவா மொக்கை வாங்கினாலும் அவனது வாஞ்சையான வார்த்தைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. இறுதியாக திரும்பவும் வீடு சென்ற பின்பாக அவன் ரோஜாவைப் பார்க்கிறானா இல்லையா என்பதைக் கதையில் பார்த்துக்கொள்ளுங்கள்.


கால்களில் சக்கரம் கட்டாத குறையாக பொருளாதார காரணங்களுக்காக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர், சிலபஸ் முடிப்பதை மட்டுமே கல்வியின் ஆகச்சிறந்த பணியாக நினைத்து கடமையாற்றும் ஆசிரியர்கள், தன் வீட்டில் பூத்த ஒற்றை ரோஜாவின் அதிசயத்தை, அதன் அழகியலை ஸ்பரிசிக்கத் தவிக்கும் தேவா, அந்த ரோஜானுபவத்தை தங்களுக்குள்ளும் சாரமாக இறக்கிக் கொண்ட அவனது நண்பர்கள் என விறுவிறுவிறுவென ஓடுகிறது கதை.


குழந்தை உளவியலைப் புரிந்துகொள்ள முயலும் ஒவ்வொருவரும் உணர்ந்து படித்து, படித்து உணர வேண்டிய எளிய புத்தகம் 'ரோஸ்'.


- மாணிக்க முனிராஜ்

No comments:

Post a Comment

அறுபடாத தொடர் சங்கிலி

மாற்றத்தின் மணற்கேணியில் தொட்டனைத்து ஊறிப் பரவிய உலகின் பல படைப்புகளை உளமாற நுகர்வது  வாசிப்பு வாசிப்பின் பகிர்மாணத்தில் உழைப்பின் துளிகளில்...