Tuesday, 19 September 2017

கேள்விகளை அடக்கும் கேள்விகள்








அத கேக்க நீ யாரு?
உனக்கு இந்த கேள்விய கேக்க என்ன தகுதி இருக்கு?
மொதல்ல உன்னயும் உன்ன சுத்தியிருக்குறவங்களயும் திருத்து. அப்புறம் எங்கள பத்தி சொல்லு.
நீ மட்டும் யோக்கியமா?
த்தோ வந்த்டாருப்பா காந்தி… நம்மள திருத்துறதுக்கு…
இன்னும் இவை போன்ற பல வியாக்கியானங்களை நாம் அன்றாடம் கேட்கிறோம்.  

ஒரு குறையைச் சுட்டி காட்டி கேள்வி கேட்க முன்வருபவர் மீது அன்றாடம் அள்ளி வீசப்படும் சேறுகள்தாம் இவை. 

ஒருபுறம் கேள்வி கேட்பவரிடம்  அவரால் கேட்கப்படும் கேள்வி சார்ந்து  அவரிடம் சமூகம் எதிர்நோக்கும் ஒழுக்க எதிர்பார்ப்பில் நியாயம் இருந்தாலும், மறுபுறம் தன்னுடைய தவறை எவரும் அடையாளப்படுத்திவிடாதபடி தற்காத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளே இவற்றில் பெரும்பான்மை.

இந்த சமூகம் தனக்கென சில விழுமியங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அவற்றை பரிபூரணமாகப் பின்பற்ற சமூகப் பிராணியான மனிதனை தொடர்ந்து அது வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது.
 
எது சரி எது தவறு என்பதை இலக்கியங்களும் நமது சான்றோர்களும் முன்னோர்களும் பலவாறு கூறியிருப்பதை ஒருவாறு உள்வாங்கியும் சமூகம் நிகழ்கால படிப்பினைகளோடு பின்னிப்பிணைந்து விழுமியங்களை கட்டமைக்கிறது. 

சமூகத்தின் விழுமியங்களை கட்டமைப்பது சமூகமேதான்.

சமூகத்தின் விழுமியங்கள் சார்ந்த புரிதல் இல்லாத அல்லது எட்டாத மனிதர்களைக் காட்டிலும் அத்தகைய புரிதல் உள்ளவரிடம் அவற்றை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.  அதனால்தான் இந்த சமூகம் ஆசிரியர்களிடம் அளவுகடந்த விழுமியங்களை எதிர்பார்க்கிறது.

ஆனால் வரலாற்று ரீதியாகக் கொண்டாடப்படும் புனிதர்களில்கூட அப்பழுக்கற்ற தன்மை என்பது காலங்காலமாக வளர்ந்து வந்த ஒன்றேயல்லாமல் எந்தவொரு மனிதனுக்கும் அது உடன்பிறப்பல்ல.

பொதுவாக சமூகம் விரும்பும்படியான விழுமியங்களின் பரிபூரணத்தை அடைய ஒவ்வொரு நாளும் தன்னாலானவரை முயற்சிப்பது ஒன்றே இன்றைய சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியது.

அவ்வாறான விழுமியங்களின் முழுமையை நோக்கிய பாதையில் முட்டுக்கட்டைகளாக இருப்பவைதாம் மேற்பகிர்ந்த கேள்விகள்.
கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது என்றவாறான கேள்விகள். அதாவது கேள்விகளை அடக்கும் கேள்விகள்.

எல்லாவற்றிலும் முழுமைத்துவத்தை அடைந்த பிறகே ஒரு மனிதன் கேள்வி கேட்கத் தகுதியானவனாகிறான் என்ற தகுதிப்பாட்டை கேள்வி கேட்பதற்கான தகுதியாக வைத்துக்கொண்டால் எந்தவொரு மனிதனும் கேள்வியே கேட்கமுடியாது. 

ஏனென்றால் முழுமைத்துவம் என்பது ஏதோவொரு பாதையின் முடிவல்ல. அது ஒரு முடிவற்ற பாதை.

கேள்விகள் புதுமைகளின் விதைகள்; நாகரிக மறுமலர்ச்சியின் நுழைவாயில்கள்; சமூகப்புரட்சிகளின் தோற்றுவாய்கள்; அனைத்துவகை அறிவியல்களின் அடிப்படைகள்; வர்க்கப் புரிதல்களின் வெளிச்சக் கீற்றுகள்; அடிமனதின் அச்சம் போக்கிகள்; ஆறாம் மனித அறிவின் அடையாளங்கள்; நாளைய உலகின் நம்பிக்கைகள்.
கேள்விகள்தான் இந்த சமூகத்தின் களை கொத்திகள்.

-மாணிக்க முனிராஜ்
ஆசிரியர்
manickamuniraj@gmail.com


No comments:

Post a Comment

பண் பாடு

பயணங்கள் தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது.  பக்குவங்கள் தான் மனிதனைப் பண்படுத்துகின்றன.  பண்பாடு தான் மனிதனைப்  பண் பாடவும் வைக்கிறது.