Tuesday, 19 September 2017

அரசியல் முடிவற்றது




ஒரு ஜனநாயக நாட்டில் எது பெரும்பாண்மையோ அதுதானே நடந்தேற வேண்டும்.

செய்தித்தாள், தொலைக்காட்சி, முகநூல், வாட்ஸப் என்று எங்கு திரும்பினாலும் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், விமர்சகர்கள் முதல் தேநீர்க்கடை பேச்சாளர்கள் வரை எல்லோரும் பெரும்பாண்மையாக நீட் தேர்வை ஏற்காமல் எதிர்த்த போதும், பெரும்பாண்மைக்கு மதிப்பளிக்காமல் பெரும்பாண்மையை மிதிக்கும் போக்கில் ஒரு ‘அரசு செயல்படுமானால் அதை எப்படி ‘பெரும்பாண்மையால் கட்டமைக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசாக நாம் எடுத்துக்கொள்ள முடியும்?

பெரும்பாண்மையின் உணர்வு புரியாமலா ஒரு அரசு செயல்படுகிறது? அவ்வாறு செயல்படத்தான் முடியுமா?

எல்லோரும் தட்டினால் அதுவும் எல்லோரும் ஒரே நேரத்தில் தட்டினால் அதிலும் எல்லோரும் ஒரே குரலில் அதட்டினால் கூட திறவாத கதவுடைய காதுகேட்காத அரசின் காதுகளில் எந்த எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றுவது?

ஒருவேளை இந்தியப் பெரும்பாண்மையை உற்றுநோக்கும்போது தமிழகம் சிறுபாண்மைதானே என்ற பா(போ)ர்வையில் நீட் தேர்வைத் தமிழகத்திற்கு கட்டாயமாக்குமானால், இந்திய நாடு வெறுமனே ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்லவே! அது ஒரு ஜனநாயகக் குடியரசாயிற்றே!! ஒரு குடியரசு அனைத்து மக்களுக்கானதுமாக, அனைத்து மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுமாகத்தானே இருக்க வேண்டும். அவ்வாறு குடிகளுக்கான உரிமைகளை மதிக்காமல் போனால் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே சொல்லப்பட்ட “இறையாண்மைமிக்க, சமூகத்துவ, சமயசார்பற்ற, ஜனநாயக குடியரசு என்பது பொருளற்றதாகிவிடாதா?

ஆனால் அவ்வாறு, ‘நாம், இந்திய மக்கள்…….. எனத் துவங்கும் அரசியலமைப்பின் முகப்புரையைப் பொருளற்றதுதாக்கிவிடுவதற்கான வேலைப்பாடுகள்தான் இன்று அதிவேகமாக நடைபெற்று வருகின்றன என்பதுதான் நம் சமகாலத்திய சாபக்கேடு.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 1976-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42-ஆவது திருத்தத்தின் அடிப்படையில் பொதுவுடைமை மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளை வலியுறுத்தும்படியாக ‘சமூகத்துவ(சோஷலிஸ்டிக்) மற்றும் ‘சமயசார்பற்ற(செக்யூலரிஸ்டிக்) ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
இந்த இரண்டு வார்த்தைகளுமே தற்போது ஆளும் மத்திய அரசுக்கு உவப்பாக இல்லை. 

இவ்விரண்டு சொற்களையும் நீக்கிவிடுவதற்கான முயற்சிகள் இவ்வாட்சியின் தொடக்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டபோது கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் கிளம்பியது. வார்த்தைகளை நீக்கவில்லை, ஆனால் அவற்றை நீக்காமலேயே அவற்றை நீக்கிய பொருளில் தமது செயற்பாடுகளை வெகுகனகச்சிதமான முறையில் கட்டமைத்துக்கொள்கிறது. தமிழகத்தின் சமீபத்திய உதாரணமான உதயசந்திரனைப்போல.

ஆனாலும் மத்திய அரசு செயல்படுத்திவரும் ஒவ்வொரு வெகுமக்கள் விரோத நடவடிக்கையையும் அத்தகைய நடவடிக்கைகள் மூலமாகவே தான் ஒரு வெகுமக்கள் நண்பனைப் போன்ற விளம்பரத்தையும் அது செய்துகொள்கிறது.

ஒவ்வொரு நாளையும் ஏதோ ஒரு பிரச்சினையில் இருத்திவைக்க அரசே திட்டமிட்டு செயலாற்றிவருகிறதோ என்ற சந்தேகம் ஏற்படும்படியாக அரசின் செயல்கள் அமைந்துள்ளன. இன்றைய பொழுதின் பிரச்சினை நீட் தேர்வு குறித்தது என்றால் அது என்றைய பொழுதையும் பிரச்சினையற்றதாக வைக்கவே இல்லை. 

குறிப்பாக மாநில உரிமைகளை துச்சமென மிதித்து கூட்டாட்சித் தத்துவத்தை ஊறுகாய்க்கும் மதிக்காமல் சட்டங்களைத் தீட்டுவதும் திட்டங்களைச் செயல்படுத்துவதும் ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் அதையே ‘ஒரே இந்தியா, ஒரே தேசம், ஒரே சட்டம் என்று கோஷமிட்டவாறு அவற்றையே விளம்பரமாக செய்தும் வருகிறது. இவற்றை எதிர்த்து கருத்துரைப்பவர்களை 'இந்தியாவிற்கு எதிரானவர்', 'தேசவிரோதி' என்பதுபோல சித்தரிப்பதும், அவற்றுக்கு பலநேரங்களில் நீதிமன்றங்களையும் திடமாக துணைக்கு அழைத்துக் கொள்வதும்தான் இன்றைய ஆளும் அரசின் ராஜதந்திரம்.

வளர்ச்சித் திட்டம் என்கிற போர்வையில் தமிழ்நாட்டின்மீது மட்டும் விதவிதமான மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதும் அவற்றை எதிர்த்துப் போராடுபவர்களையும், கருத்து கூறுபவர்களையும் காட்டமாக ஒடுக்குவதும், காவல்துறை நடவடிக்கை எடுப்பதும் மற்றெப்போதும் இல்லாத அளவில் தற்போது அதிகரித்திருக்கிறது.

இன்றைய சூழலில் அதிகரித்துவரும் வெகுமக்கள் போராட்டங்களில் கலந்துகொள்பவர்களைக் காட்டிலும் வெளியே இருந்து பிரச்சினை குறித்து கருத்து கூறுபவர்கள் அதிகம். 

தவறில்லை. ஆனால் அவ்வாறு பகிரப்படும் விவாதிக்கப்படும் கருத்துகள் உரிய பொதுநியாயத்தோடு ஒட்டிய சிந்தனையுடன் எங்கேனும் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும்.

அந்தக் கருத்தை பொதுநியாயத்தை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள் எவையெவை எனவும், அக்கட்சிகளில் எவையெவை அழுத்தத்தோடு நியாயத்துக்காக வெகுமக்கள் நலன்கருதி போராடுகின்றன எனவும், அவற்றிலும் வெறுமனே அடையாளத்துக்காக போராடுபவை எவை, அடையாளத்தைத் தாண்டி ஆழமான புரிதலுடன் ஒடுக்கப்பட்டோர் சிறுபாண்மையினர் போன்றோர் நலனை உள்ளடக்கி வெகுமக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் முன்னெடுப்பவை எவை என்று சல்லடைபோல சலித்தெடுத்து அரசியல் கட்சிகளின் உண்மை முகங்களை அடையாளம் காண வேண்டும்.

அல்லாமல் வெறுமனே கூடி பேசி அரிப்பைத் தணித்துக் கொண்டு விடைபெற்றுவிடுவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஏனெனில் நமது நாட்டைப் பொருத்தவரை இவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் சர்வரோக நிவாரணி வாக்கு ஒன்றுதான்.

ஆனால் அத்தகைய வாக்கை செலுத்துவதில் நம்மவர்கள் காண்பிக்கும் அக்கறை இருக்கிதே, அது மிகவும் அலட்சியப் போக்குடன்தான் இன்றளவிலும் பெரும்பாண்மையாக இருந்து வருகிறது.

‘என்னுடைய ஒரு வாக்கினால் என்ன மாற்றம் விளைந்துவிடப் போகிறது? என்ற மாதிரியான விரக்தியும், ‘நான் அளித்த வாக்கு வீணாகிவிட்டதென்றால் என்ன செய்வது? அதனால்தான் ஜெயிக்கிற நபருக்குப் பார்த்து வாக்களிக்கிறேன் என்ற மாதிரியான அசட்டுத்தனமும், ‘எங்கப்பா அந்த சின்னத்துக்குத்தான் காலாகாலமாக ஓட்டுப் போட்டார்; அதனால் நானும் அந்த சின்னத்துக்குத்தான் ஓட்டுப்போடுவேன். ஏனென்றால் நாங்கள் அந்தக் கட்சி. அல்லது, ‘எங்கப்பா / எனது கணவர் இந்தச் சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடச் சொன்னார். அதனால் நான் இந்தச் சின்னத்துக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்ற மாதிரியான அடிமைத்தனமும் வாக்களிப்பதில் கோலோச்சுகிற அளவிற்கு அவரவரின் சொந்தமான அறிவு கோலோச்சுவதில்லை. 

இவை எல்லாவற்றையும் விட ‘இவர் என்னுடைய சாதி / மதம் என்ற மாதிரியான அடிப்படைவாதமும், ‘கோட்டர் கோழிபிரியாணி பணம் இலவச தேர்தல் வாக்குறுதிகள் போன்றவற்றின் ஆசையால் வாக்களிக்கும் தற்காலிக சுயலாபவேட்கைவாதமும் மிகவும் வலிமையாக வாக்களிப்பதில் பங்காற்றுகின்றன.

இத்தனை காலமாக அவர்கள் பட்ட அவத்தைகளுக்கு யார்யாரெல்லாம் காரணம் என்ற புரிதலும் அவர்களை விலக்கி மாற்று சிந்தனையுடன் உள்ள சரியான நபர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பதையும் அவர்கள் டீக்கடை முன்பும் இன்னபிற சந்திப்புகளிலும் இவ்வளவு காலமாக விவாதித்த பேச்சுக்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். 

சரியான மாற்றரசியலை சுயவிருப்பத்தோடும் தெளிவோடும் அர்த்தபூர்வமான புரிதலோடும் சுயமாக தேர்வு செய்யும்படியாக அவர்களது பேச்சுகள் அவர்களுக்குத் துணைநிற்க வேண்டும்.

அன்றன்று அரங்கேறும் செய்திசார்பாக பேசுவதும் அதிலுள்ள நியாய அநியாயங்கள் தொடர்பாக வாத பிரதிவாதங்களில் பங்கேற்று அன்றன்றைய கோபங்களைத் தற்காலிகமாகத் தணித்துக்கொள்வதில் முடிந்துவிடுவதில்லை நமக்கான அரசியல். அரசியல் முடிவற்றது.

-மாணிக்க முனிராஜ்
manickamuniraj@gmail.com

No comments:

Post a Comment

பண் பாடு

பயணங்கள் தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது.  பக்குவங்கள் தான் மனிதனைப் பண்படுத்துகின்றன.  பண்பாடு தான் மனிதனைப்  பண் பாடவும் வைக்கிறது.