கிரீமிலேயர் எனும் சமூகநீதி
இந்திய
அரசியல் என்பது சாதிய பொருளாதார ஆதிக்க உணர்வுசார் அரசியல்.
சாதியப்
பார்வைக்கு சாதியம் குறித்த நீண்ட நெடிய வரலாற்றின் வடு எத்தகையது என்ற ஆழமான புரிதல்
தேவை. இடஒதுக்கீடு என்பது மறுபங்கீடு என்று அப்போதுதான் புரியும்.
இன்றைக்கு
நடைபெற்று வரும் நீட் போராட்டங்கள் சமூகநீதி தொடர்பான மேலதிகமான விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.
இந்தியாவின் பன்மைத்துவ பாதுகாப்பு என்பதுதான் தேசத்தின் உயிர்நாடி. சமூகநீதியைக் கட்டிக்
காக்காமல் பன்மைத்துவத்தை ஒருகாலும் பாதுகாக்க முடியாது.
இந்தியாவின்
வெறெந்த மாநிலத்திலும் பின்பற்றாத அளவிற்கு அறுபத்தொன்பது விழுக்காடு இடஒதுக்கீட்டுக்
கொள்கையைக் கடைபிடிக்கும் நமது மாநிலத்தின் மீது அதைப் பொறுக்கமாட்டாத உயர்சாதி அரசியலின்
வன்ம வடிவங்களில் ஒருமுகம்தான் நீட்.
செழுமையான இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு
என்பதும் பாகுபாடுதான் என்றாலும் அதை நேர்மறை பாகுபாடாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை
இந்திய சமூக வரலாற்றை ஆழமாகப் புரிந்துகொள்வதிலிருந்து பெறமுடியும்.
பொருளாதார
ரீதியாக பின்தங்கியுள்ள முற்பட்ட வகுப்பினர் பாதிப்படைவதாகவும், திறமைக்கு இடஒதுக்கீட்டினால்
பங்கம் வந்துவிட்டதாகவும் கூப்பாடு போடுவதெல்லாமே இடஒதுக்கீட்டை சீர்குலைப்பதற்கான
சதிகளில் ஒரு பகுதியே.
தற்போது
பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீட்டிற்கு மாற்றாக சமூக நீதியைக் காக்க வேறு மாற்று
கிடையாது என்றாலும் இடஒதுக்கீட்டை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். அவற்றில் ஒருகூறு
கிரீமிலேயர் நடைமுறையை அனைத்துப் பிரிவினருக்கும் சமூகநீதி பாதிக்கப்படாத வகையில் ஆக்கப்பூர்வமாக
பின்பற்றப்பட வேண்டும் என்பது.
தற்போதைய கிரீமிலேயர்
கிரீமிலேயர்
முறையே ஒரு பாகுபாடானதாகவும் பார்க்கப் படுகிறது. அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது.
தனது வருமானத்தை அல்லது குடும்பத்தின் வருமானத்தை அரசுப் பணியில் உள்ளவர்கள் வெளிப்படையாக
முழுமையாக காட்ட வேண்டிய கட்டாயமிருக்கிறது. ஆனால் அதைப் போல தனியார் துறையில் பணியாற்றும்
நபர்களோ, சுயதொழில் நடத்துபவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற பிறரோ தங்களது வருமானத்தை
முழுமையாகக் காட்டுவதற்கான வாய்ப்புகள் தற்போதைய நடைமுறையில் இல்லை.
வருவாய்த்
துறையினரால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் ஒன்றுதான் அவரவர் வருமானத்தை நிர்ணயிக்கும்
ஒரே காரணியாக இருக்கிறது. நடைமுறையில் வருமான சான்றிதழ் வழங்க என்னென்ன வழியில் எவ்வளவு
வருமானம் தனிநபரால் அல்லது குடும்பத்தால் ஈட்டப்படுகிறது என்ற கூர்மையான நேர்மையான
ஆய்வு நடத்தப்படுவதில்லை.
மாறாக
வருமான சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரரால் தனது வருமானம் இன்னது என்று அளிக்கப்படும்
தகவலைப் பொறுத்து அந்த வருமானத்துக்கோ அல்லது சற்று கூட்டியோ பெரும்பான்மையான வருமான
சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
குறைந்தபட்சம் வருமானச் சான்று கோருபவர் ஏதேனும் வகையில்
வரி செலுத்துபவரா என்பது கூட ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. வருவாய்த் துறைக்கும்
வருமான வரித் துறைக்கும் இடையே ஒரு மெல்லிய ஒருங்கிணைப்பு இருந்தாலே இவற்றில் பெரும்பான்மையைச்
சரிசெய்துவிட முடியும். ஆனாலும் அரசு நிர்வாகத்தில் ஆட்சியாளர்களுக்கு உள்ள அலட்சியப்போக்கும்
புரையொடிப் போயிருக்கும் லஞ்சநோயும் சரியான நேர்மையான வருமான சான்றிதழ் வழங்கப்படுவதில்
பெருந்தடைக் கற்களாக இருக்கின்றன.
ஒருநபரை
கிரீமிலேயராக வகைப்படுத்துவதில் இவ்வாறு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் இவையெல்லாவற்றுக்கும்
மேலாக கிரீமி லேயர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதும்,
கிரீமிலேயர் வருமானதாரர்களை முன்னேறியவர்களாகக் கருதி பொதுப்பிரிவில் போட்டியிடச் செய்வது
என்பதும் மிகப்பெரும் சமூக அநீதி.
பிற்படுத்தப்பட்டோருக்கான
பாராளுமன்றக் குழு, “கிரீமி லேயர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒருபுறம் இதர பிற்பட்டோரை
நீக்கிக் கொண்டே போகிறீர்கள், இன்னொரு புறத்தில் மத்திய அரசுப் பணிகளில் 16 சதவீதம்
பேர் கூட இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியவில்லை” என்று தெரிவிக்கிறது.
ஆக்கப்பூர்வமான சமூகநீதிக்கான கிரீமிலேயர்
தற்போது
நடைமுறையில் உள்ளது போல கிரீமிலேயரில் வருபவரை சமூகநீதிக்குப் புறம்பாக முற்பட்டவர்களாகவோ
முன்னேறியவர்களாகவோ கருதி இடஒதுக்கீட்டு முறையிலிருந்து வெளியேற்றுதல் அறவே கூடாது.
மாறாக கிரீமி லேயராக உள்ள ஒருவருக்கு அவரது பிரிவில் பின்னுரிமையும் அல்லாதோருக்கு
முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.
அதுவும் தற்போது உள்ளவாறு இதர பிற்பட்ட வகுப்பினருக்கு
(ஓபிசி) மட்டுமல்லாது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் (எஸ்சி,எஸ்டி) கூட
அது பொருந்துவதாக அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட வேண்டும். இதுவே ஆக்கப்பூர்வமான சமூகநீதி.
எந்த
அளவிற்கு இடஒதுக்கீட்டிலிருந்து கணிசமானவர்களை வெளியேற்றலாம் என்பதையே நோக்காகக் கொண்டிருக்கும்
மத்தியில் ஆளும் அரசு எஸ்சி எஸ்டிக்கும் கிரீமிலேயரை அமல்படுத்தினால் அது விபரீதமாகத்தான்
முடியும் என்கிற சந்தேகம் நியாமானதுதான்.
ஆனால்
கிரீமிலேயர் என்பதை தற்போது உள்ளதுபோல இடஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றும் நடைமுறையாகப்
பின்பற்றாமல் ஒவ்வொரு பிரிவிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பொருட்படுத்தி, உள்ளார்ந்த,
அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கிய, முறையான முன்னேற்றத்தைக் கைக்கொள்வதற்கான ஒரு சீரிய
சாதனமாக பின்பற்ற வேண்டும் என்பதே நாம் கருதும் ஆக்கப்பூர்வமான சமூகநீதி.
இதுபோன்று
அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் பொருளாதார பின்புலத்தையும் சமூக வரலாற்றையும் ஒருசேர
சிந்தித்து அடித்தள முன்னேற்றம் ஏற்படுவற்காக ஓரளவு முன்னேறியவர், முன்னேற்றத்தின் சுவடே படாதவருக்காக ஒதுங்கி நின்று
வழிவிட்டு பின்னர் செல்வது அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட ஒரு வாய்ப்பாக அமையும்.
இடஒதுக்கீட்டை
எப்போது விழுங்கி செறிக்கலாம் எனக் காத்துக்கிடக்கும் மத்திய அரசும், அந்தந்த இடஒதுக்கீட்டுப்
பிரிவில் ஆதாயத்தை அனுபவித்தவர்கள் தன்னுடைய அடுத்தடுத்த சந்ததிக்கு மீண்டும் மீண்டும்
இடஒதுக்கீட்டின் பயன் கிடைக்க வேண்டுமென்று இருக்கிப் பிடிப்பதும், சாதிய முன்னேற்றத்திற்கான அமைப்பு ரீதியிலான அரசியலும்
கூட பெரும்பாலும் இடஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் கைகளிலேயே இருப்பதும் இத்தகைய ஒரு
கிரீமிலேயர் முறையைப் பின்பற்றுவதில் தொடர்ந்து பின்னடைவு இருந்து வருவதற்கான காரணங்களாக
உள்ளன.
இடஒதுக்கீட்டு
விழுக்காட்டின்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட
ஒவ்வொரு பிரிவிலும் கிரீமிலேயர் அல்லாதோருக்கு முழுக்க முழுக்க கல்வி வேலைவாய்ப்பில்
முன்னுரிமை வழங்கியதுபோக மீதமுள்ள இடங்கள் அவ்வப்பிரிவில் உள்ள கிரீமிலேயரில் வருபவர்களுக்கு
வழங்கப்பட வேண்டும். ஒருவேளை குறிப்பிட்ட பிரிவில் ஆளில்லாமல் போனால்கூட அவ்விடங்களைப்
பொதுப்பிரிவிற்கு மாற்றாமல் பின்னாளில் நிரப்பும்படி இருத்தி வைக்கும் நடைமுறையை முறையாகக்
கையாள வேண்டும்.
பொருளாதாரத்தில்
வளர்ந்த இடஒதுக்கீட்டுப் பிரிவினரே இடஒதுக்கீட்டை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறார்கள்.
நல்ல வருவாய் ஈட்டும் அரசுப் பணியிலோ அல்லது தனியார் பணியிலோ பணிபுரியும் பெற்றோர்
அவர்களது குழந்தைகளுக்கு எல்லாவிதமான அடிப்படை வசதிகளையும் மேம்பட்ட வாழ்க்கையையும்
உறுதி செய்கிறார்கள். அவ்வாறு உள்ள ஒரு குடும்பத்திலிருந்து வரும் ஒரு நபரையும் அத்தகைய
எந்தவிதமான அடிப்படை வசதியும் எந்தவிதத்திலும் பார்த்திராத குடும்பத்திலிருந்து வரும்
ஒரு நபரையும் ஒரே தராசில் எடைபோடுவது எப்படி சமூக நீதியாகும்? அதை எவ்வாறு சமவாய்ப்பாகக்
கருத முடியும்?
இடஒதுக்கீட்டினால்
பயன்பெற்ற குடும்பங்களின் வாரிசுகளே அதிக அளவில் மீண்டும் மீண்டும் பயன்பெறுவதால் ஒருமுறையும்
இடஒதுக்கீட்டை அனுபவிக்காத ஒரு பிரிவு எந்தவித முன்னேற்றமும் இன்றி சமூகத்தின் அடித்தளத்திலேயே
தேங்கிக் கிடக்கிறது. இது அனைத்துப் பிரிவிற்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில்
இத்தகைய குறைகளைக் குறைக்க பொருளாதார ரீதியாகவும் இன ரீதியாகவும் பல்வேறு பிரிவினருக்கான
கல்வி உதவித்தொகை, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு போன்ற
முறைகளைக் கையாண்டாலும் கூட இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பினதங்கியோருக்காக கல்வி
மற்றும் வேலைவாய்ப்பில் கொடுக்கப்படும் உள்ளார்ந்த முன்னுரிமையே அனைத்திலும் வலிமையானதும்
பாதுகாப்பானதும் ஆகும்.
வருமான உச்ச வரம்பு
கிரீமி
லேயருக்குரிய உச்ச வரம்பான ஆண்டு வருமானம் ரூபாய் ஆறு லட்சத்திலிருந்து தற்போது எட்டு
லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் உச்சவரம்பை நிர்ணயிக்க பரிந்துரை செய்த
நீதியரசர் ஈஸ்வரையா தலைமையிலான தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 10.50 லட்சம் ரூபாயாக
முதலிலும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான பாராளுமன்றக் குழுவின் கடுமையான எதிர்ப்புக்குப்
பின்னர் 15 லட்சம் ரூபாயாக இறுதியிலும் பரிந்துரைத்தது.
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான
பாராளுமன்றக் குழு 20 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க வலியுறுத்தியது. ஆனால் எவற்றையும்
பொருட்படுத்தாத மத்திய அரசு 8 லட்சம் ரூபாயாக உச்சவரம்பை நிர்ணயம் செய்துள்ளது. ஆக
இடஒதுக்கீட்டின் மீதும் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் தற்போதைய மத்திய அரசுக்கு உள்ள
அக்கறை எவ்வளவு என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
ஒருவேளை
சமூகநீதி காக்கும் மெய்யான கிரீமிலேயர் முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்துமானால்
வருமான உச்சவரம்பு வருடாவருடம் மாற்றத்தக்கதாகவும், ஒரு தலைமுறை கிரீமிலேயரில் வந்தது
என்பதற்காக அவரது குழந்தைகளும் கிரீமிலேயர் வரம்பிற்குள்தான் வரவேண்டும் என்றவாறில்லாமல்
அவ்வப்போதைய வருமானமே ஒருவரை கிரீமிலேயரில் வைப்பதற்கான உண்மை அளவுகொலாக இருக்க வேண்டும்.
அத்துடன் கிரீமிலேயருக்கான வருமான உச்ச வரம்பை வரையறுக்கும் பொறுப்பு உரிய ஆணையங்களிடமே
அமையப் பெற்றதாகவும் இருக்க வேண்டும்.
சராசரி
நிலையில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஆண்டு வருமானத்தைப் போல் ஒன்றரை மடங்கு, கடந்த நிதியாண்டில்
தனிநபர் வருமானவரி தாக்கல் செய்தவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்டு வருமானத்தின் சராசரி
போன்ற ஒன்றையோ பிறவற்றையோ வருமான உச்ச வரம்பை நிர்ணயிப்பதற்கான அளவுகோலாகக் கொள்ளலாம்.
மேலும்
தற்போது மத்திய அரசு வருமான உச்சவரம்பை கஞ்சத்தனமாக குறைத்துக் காட்டுவதைப் போல எவ்வளவு
வேண்டுமானாலும் குறைத்து வருமான உச்ச வரம்பை நிர்ணயிக்கலாம். அது எவ்வளவுக்கெவ்வளவு
குறைவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு இடஒதுக்கீட்டின் வழியே முன்னுரிமையின் அடிப்படையில்
அனைத்துப் பிரிவிலும் விளிம்புநிலையில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும்,
இடஒதுக்கீட்டிற்கான தகுதி இருந்தும் அதன் பயன் தலைமுறை தலைமுறையாக எட்டாக் கனியாகவே
உள்ளவர்களும், ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராக உள்ளவர்களும் பயன்பெறுவர்.
உடல்நிலை
சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரைப் பார்க்க வரிசையில் நிற்கிறோம். அங்கு
நம்மை விட மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு நபர் வருவாரானால் அவருக்கு வரிசையைத் தாண்டி முன்னுரிமை
தருகிறோம் இல்லையா? கிரீமிலேயர் வழியே பொருளாதார
ரீதியில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிப்பது
என்பதும் அதைப்போலத்தான்.
-மாணிக்க முனிராஜ்
manickamuniraj@gmail.com
No comments:
Post a Comment