பத்தாண்டுகளில் பள்ளிக் கல்வி:
கடந்த பத்தாண்டுகளில் இருக்கும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேறு எப்போதும் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு ஆசிரியர்களின் பொதுவான மன அழுத்தம் இன்று கூடியுள்ளது. இதன் மறுபக்கம் மாணவர்களின் எண்ணிக்கை மெல்லமெல்ல தனியார் பள்ளிகளை நோக்கி உந்தித் தள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு பெரும் எண்ணிக்கையில் தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் சிறப்புடன் அரசு செயல்படுத்தி வருகிறது.
2005-06 –ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வித்துறையில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் (Activity Based Learning –ABL) முறை செயல்படுத்தப்பட்டது. கற்றுத்தர வேண்டிய அனைத்து கற்றல் கூறுகளையும் மாணவர்களைக் கவரும் விதமான விளையாட்டுகளின் வழியாக ஆர்வமுடன் தானே கற்றுக்கொள்ளும் விதமாக எளிமையாக செயல்வழிக் கற்றல் முறை அமைந்திருந்தது.
அம்முறையில் பாடவாரியாக ஒவ்வொரு வகையான சின்னங்களும் பாடத்திற்கு ஒரு வண்ணமும் கொண்ட கற்றல் அட்டைகள் இருந்தன. இவற்றைக் கையாள ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ஆண்டுமுழுமைக்கும் திட்டமிடப்பட்ட ஏணிப்படிகள் இருந்தன. இந்த ஏணிப்படிகளே ஆசிரியரின் அன்றாட பணிகளை எவ்வாறு செய்யவேண்டுமென்று சிறப்பாக திட்டமிட்டு வழிகாட்டின.
ஆனால் இம்முறையைச் செயல்படுத்துவதில் கல்வித்துறை கையாண்ட சில அணுகுமுறைகள் ஆசிரியரின் மனநிலையைப் பதம்பார்த்தன. 1 முதல் 5 வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு வகுப்பில் இருந்தனர். வருகைப்பதிவேட்டின்படி 3-ஆம் வகுப்பில் படித்துவரும் ஒரு சராசரி மாணவன் அனைத்து பாடங்களிலும் 3-ஆம் வகுப்பில் இருக்கும்போது, அதே வகுப்பில் படிக்கும் மீத்திறன் மிக்க மாணவன் ஒருவன் தமிழில் 4-ஆம் வகுப்பிலும் ஆங்கிலத்தில் 3-ஆம் வகுப்பிலும் படித்துவரும்படியான சூழல் இருந்தது. மேலும் இம்முறையில் கற்றல் திறனுடைய குழந்தைகளை அவர்கள் வேகத்துக்குத் தகுந்தாற்போல் ஏணிப்படியில் ஏறுவதற்கான வாய்ப்பிருந்தாலும் மறுபுறம் வகுப்பறையில் அவர்கள் 3-ஆம் வகுப்பு படித்தாலும் கற்றல் அட்டைகளில் தமிழில் 2-ஆம் வகுப்பிலும், ஆங்கிலத்தில் 1-ஆம் வகுப்பிலும் இருந்தமாதிரியான காட்சிகள் இருந்தன.
இவையெல்லாம் ஒருபுறம் ஆசிரியர்களைச் சலனப்படுத்தினாலும் ஒருசில மாறாத மனநிலை கொண்ட ஆசிரியர்களைத்தாண்டி பெரும்பாலான ஆசிரியர்கள் இம்முறையோடு இணங்கி ஆர்வமுடன் பணியாற்றத் தொடங்கினர். செயல்வழிக்கற்றல் முறையில் சில மாற்றங்களைச் செய்து இம்மாதிரியான சில நடைமுறைகள் பின்னாட்களில் மாற்றப்பட்டன. அதற்கு எளிய செயல்வழிக் கற்றல் முறை (Simplified Activity Based Learning- SABL) என்று பெயரும் மாற்றப்பட்டது. மேலும் மாணவர்களின் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்ந்து வேலைவாய்ப்பத் திறன்மிக்க முழு ஆளுமையை வளர்த்தெடுக்கும் விதமான படைப்பாற்றல் கற்றல் முறை (Active Learning Methodology –ALM) 6முதல்8 வகுப்புக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பின்னர் இந்த முறையைச் சுருக்கி 5ஆம் வகுப்பிற்கு எளிய படைப்பாற்றல் கல்வி (Simplified Active Learning Methodology- SALM) முறை செயல்படுத்தப்பட்டது.
நீர்த்துப் போன செயல்வழிக் கற்றல்:
சமச்சீர்கல்விமுறை நடைமுறைக்கு வந்தபோது சில பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. முப்பருவக் கல்வி முறையை அடிப்படையாகக்கொண்ட சமச்சீர் கல்விமுறையை ஏதோ செயல்வழி கற்றலுக்கான மாற்றுமுறை போன்று பேசப்பட்டது. சமச்சீர் கல்வி முறை வந்தால் செயல்வழிக் கற்றல் முறை போய்விடும் என்று மிகப் பரவலான ஆனால் வலுவான எண்ணம் ஆசிரியர்கள் மத்தியில் வேரூன்றப்பட்டது. ஏற்கனவே வருடாவருடம் தரப்பட்ட கற்றல் அட்டைகள் புதிதாக வராமல் பழைய அட்டைகளையே பயன்படுத்திக்கொண்டிருந்த நிலையில், இருந்த அட்டைகளும் பழையதாகி, கிழிந்து மற்றும் காணாமல் போய் செயல்வழிக் கற்றல் முறையின் அடிப்படை அமைப்பு முறை சிதைக்கப்பட்டன.
பல்வேறு பணிச்சுமைகளால் முறையை சரிவர செயல்படுத்த இயலாத நிலையிலிருந்த ஆசிரியர்கள் மேற்சொன்ன விஷமப் பரப்புரைகளால் மனதளவில் செயல்வழிக்கற்றலைப் படிப்படியாக தூரமாகத் தள்ளிவைத்து விட தள்ளப்பட்டனர். சமச்சீர் கல்வி முறை புத்தகங்களுக்கேற்ப மாற்றப்பட்ட செயல்வழி கற்றல் அட்டைகள் பள்ளிகளை உரிய காலத்திற்கு வந்தடையவில்லை. அதனால் செயல்வழி கற்றல் முறை இனி இல்லை என்பதுபோன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதனாலேயே செயல்வழி கற்றல் அட்டைகளெல்லாம் வந்தபிற்பாடும்கூட பெயரளவிற்கே அது செயல்முறைப்படுத்தப்பட்டது.
தற்போது 2018-19ஆம் கல்வியாண்டு முதலாக 1முதல் 4 வகுப்புகளுக்கு ABL என்று இருந்தமுறை மாற்றப்பட்டு 1 முதல் 3 வகுப்புகளுக்கு புதிய அனுகுமுறையிலான செயல்வழிக் கற்றல் முறையும் (ABL New Approach) 4 மற்றும் 5 வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி (SALM) முறையும் செயல்பாட்டில் உள்ளன. இம்முறை பெரும்பாலும் பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் புதிய அனுகுமுறை செயல்வழிக் கற்றல் அட்டைகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று சென்ற ஆண்டே சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை புதிய அட்டைகள் வழங்கப்படவில்லை.
செயல்வழிகற்றல் முறையைச் சிறப்பாக செயல்டுத்த சில அடிப்படை கூறுகள் அவசியமானவை. அவற்றில் மிக முக்கியமான ஒன்று வகுப்பிற்கு ஒரு ஆசிரியர். அதற்கு மிகப் பெரும்பான்மையான அரசுப்பள்ளிகளில் எப்போதும் வாய்ப்பிருந்ததேயில்லை. அரசுப்பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிட்டு குறை கண்டறியும் எந்த அறிவுஜீவிகளுக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை ஒப்பிடத் தெரிந்த அளவிற்கு, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிடத் தெரிவதில்லை. அல்லது தெரிவுசெய்யப்பட்ட ஞாபகமறதி (Selective Amnesia) போன்ற கோளாறுகள் அவர்களுக்கு இருக்கின்றன.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க 2005-06 காலகட்டத்தில் செயல்வழக் கற்றல் அறிமுகப்படுத்தப்பட்ட துவக்கத்தில் கனிசமாக ஆங்காங்கே அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கூடியதற்கு மாறாக இந்த பத்தாண்டுகளின் இறுதியில் மிக அதிக எண்ணிக்கையில் தனியார் பள்ளிகளில் கூடியுள்ளன. 2009 முதல் நடைமுறையில் இருந்துவரும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் எந்தப்பிரிவு செயல்படுத்தப்படுகிறதோ இல்லையோ பிரிவு 12(1))(C)-இன் கீழ் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறை மிகச் செம்மையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இவற்றின் காரணமாக 2015-16-இல் 56.55 லட்சமாக இருந்த அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை நான்கே ஆண்டுகளில் 46.60 லட்சமாகக் குறைந்துள்ளது.
அடிப்படையில் செயல்வழிக் கற்றல் முறையில் ஏற்பட்ட குழப்பம் மிகுந்த நடைமுறைகளுக்கும் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் தள்ளப்பட்டதற்கும், அரசுப் பள்ளி மாணவர்களின் அடைவுத்திறன் பின்னடைவிற்கும் ஊடாக உள்ள தொடர்புக் கண்ணி தீவிர தனியார்மயப்படுத்துதல் அல்லாமல் வேறில்லை.
தனியார் பள்ளி– அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பணி நேரம்:
தனியார் பள்ளிகளில் பெரும்பான்மையாக ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணியைத்தாண்டி அலுவல் ரீதியான பிற பணிகளை ஒதுக்குவது மிகக் குறைவு. ஒவ்வொரு வகுப்பிற்கும் இரு ஆசிரியர்களும் ஒரு உதவியாளரும் உள்ள பள்ளிகளும் உள்ளன. பள்ளியை நிர்வகிப்பதற்கென்று தனியான நிர்வாக அமைப்பு உள்ளது. பெரும்பாலும் நிர்வாகம் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் நேரத்தில் எந்தவிதத்திலும் குறுக்கீடு செய்வதில்லை. இதனால் மாணவர்களுக்காக செயல்பட வேண்டிய ஆசிரியர்களின் நேரம் முழுமையாக மாணவர்களுக்காகவே செலவிடப்படுகிறது.
இங்கே ஒரு அரசுப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் என்ற அடிப்படைப் பணியைத் தாண்டி அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மேற்கொள்ளும் பணிகளை வரிசை படுத்தினால் ஒரு முழம் தூரத்திற்கு அவை நீள்கின்றன. அன்றாட பள்ளிப் பணிகளில் மாணவர்களிடம் நேரம் செலவிடும்படியான கல்விசார் பணிகளைக் காட்டிலும் நிருவாகப் பணிகளே அதிக எண்ணிக்கையில் நீள்கின்றன. மாணவர்களின் கற்றலை உறுதிசெய்யும் விதமாக, வகுப்பறையில் நடைபெற்ற நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த பல்வேறு பதிவேடுகளை ஒவ்வொரு ஆசிரியரும் பராமரிக்கவேண்டிய தேவையிருக்கிறது. அவற்றைத்தாண்டி தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, தேர்தல் சாவடிப் பணி, குடும்ப அட்டைப் பணி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்-நீக்கல்-திருத்தம் போன்ற பல பணிகள் அரசுப்பள்ளி ஆசிரியரின் தலையிலேயே கட்டப்படுகின்றன. மேலதிகமாக இத்தகைய பணிகளெல்லாம் அத்தியாவசியப் பணிகள் என்று கருதி ஆசிரியராகிய ஒரு நபருக்கு வழங்கப்படலாம் என்று 2009-இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் 27-ஆவது பிரிவில் உறுதியும் செய்யப்பட்டுவிட்டது. இவற்றில் பேரிடர் கால பணிகளைத் தவிர பிற பணிகளில் மாணவர் நலன் கருதி ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல் இருப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக வட்டார கல்வி, மாவட்டக் கல்வி அலுவலகங்களும் வட்டார வள மையங்களும் அவ்வப்போது கோருகின்ற தகவல்களை அளிப்பதன்பொருட்டும், மாதாந்திர அறிக்கை, சம்பளப் பட்டியல் போன்றவற்றை அலுவலகத்தில் அளிப்பதற்காகவும், தலைமையாசிரியர் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும் குறைந்தபட்சமாக வாரத்திற்கு ஒருமுறையேணும் தலைமை ஆசிரியர்களோ அல்லது ஆசிரியர்களோ பள்ளியைவிட்டு, தமது கற்பித்தல் பணியை விட்டுவிட்டு வெளியில் வரவேண்டிய தேவையிருக்கிறது.
EMIS எனும் பூதம்:
EMIS எனப்படும் பள்ளித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கிட்டத்தட்ட தினந்தோறும் ஏதேனும் ஒரு பதிவை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அதற்காக அவ்வப்போது மாநில இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என எவரிடமிருந்தாவது ஒரு செயல்முறைகள் வந்தவண்ணம் உள்ளன. அவ்வாறு உரிய காலத்தில் உரிய பணியை மேற்கொண்டு முடிக்காவிட்டால், தலைமையாசிரியருக்கும் அப்பள்ளி சார்ந்த ஆசிரியர் பயிற்றுநருக்கும் விளக்கம் கேட்கப்படும் என்று அச்செயல்முறைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. இதனால் ஆசிரியரின் கற்பித்தல் பணியை ஒத்திவைத்துவிட்டு இப்பணியை சிரமேற்கொண்டு முடிப்பதிலேயெ பல ஆசிரியர்களின் கவனமும் பள்ளிநேரமும் சென்றுவிடுகிறது.
EMIS தளத்தில் உரிய விவரங்களைப் பதிவிடவோ அல்லது தினந்தோறும் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையைப் பதிவிடவோ ஆசிரியர்கள் இணையத்தைப் பயன்படுத்தவேண்டிய கட்டாய தேவை உள்ளது. இணைய சேவை வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்தும் அலைபேசியில் கிடைக்கும் அலைநீளத்தைப் பொறுத்தும், பள்ளி அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்தும்தான் இணையத்தின் சேவை மற்றும் வேகம் இருக்கும். கிராமத்தில் உள்ள பல பள்ளிகளில் இத்தகைய இணைய சேவை தேவையான அளவில் கிடைப்பதில்லை. அதே நேரத்தில் EMIS-இல் மேற்கொள்ள வேண்டிய பணிகளை “இன்று காலை 11 மணிக்குள் / இன்று பிற்பகல் 2 மணிக்குள் / இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் முடிக்கவேண்டும்” என்றே சுற்றறிக்கைகள் ஒலமிடுகின்றன. இதனால் பள்ளிக்கு வெளியே உள்ள அருகாமை நகரத்தில் ஏதேனும் ஒரு தனியார் இணைய மையத்திற்குச் சென்றாவது பணியை முடிக்க வேண்டிய தேவையிருப்பதால் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்தைக் கல்வித் துறையே வலிந்து ஏற்படுத்துகிறது. இவையல்லாமல் ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளும் விடுப்புகள் என்று மாணவர்களின் கற்றல் நேரம் பலவகைகளில் தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகிறது.
தனியார் பள்ளியும் அதன் நுகர்வோர்களும்:
கல்வித்துறை தற்போது EMIS தளத்தில் ஆசிரியர்கள் அவரவர் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளனரா என்பது குறித்து தகவல் பதிவிட வலியுறுத்தியது. அரசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே சேர்ப்பது குறித்து பரிசீலனையில் ஈடுபடுவதாகவும் ஒரு தகவலை சில மாதங்களுக்கு முன்பு அரசு வெளியிட்டது. சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் அனைவரின் குழந்தைகளையும் அவர்களின் வாரிசுகளின் குழந்தைகளையும் அரசுப்பள்ளிகளில் சேர்த்திடவும் சேர்த்து பரசீலித்தால் சிறப்பாக இருக்கும். உண்மையிலேயே அப்படி ஒரு அறிவிப்பு வெளியானால் அரசுப்பள்ளிகள் ஓரளவு காக்கப்பட வாய்ப்பு உருவாகலாம்.
ஆனால் இத்தகையதொரு பரிசீலனை அரசாணையாக வருவதற்கான வாய்ப்புதான் காணல் நீராகத் தோன்றுகிறது. ஏனென்றால், சுயநிதி தனியார் பள்ளிகளை நடத்திக்கொண்டிருப்பவர்களில் மிகப்பெரும்பாண்மையானவர்கள் நேரடி கட்சிசார் அரசியல்வாதிகளாகவோ, அல்லது அரசியல்வாதியின் பினாமிகளாகவோ, உறவினர்களாகவோதான் இருக்கிறார்கள் என்பது கண்கூடு.
இவர்களுக்கப்பால் மத நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகளும், தனியார் தொழிற்சாலைகள் மூலம் நடத்தப்படும் பள்ளிகளும் கணிசமாக உள்ளன என்றாலும் இத்தகைய நிறுவனப்பள்ளிகளும், அரசியல்வாதிகளின் பள்ளிகளும்தான் அரசையும் ஆளும் மற்றும் ஆண்ட அரசியல்வாதிகளையும், அரசு உயர் அதிகாரிகளையும் தங்கள் தொழில் இசைவிற்கேற்ப வைத்துள்ளனர். தனியார் பள்ளிகளின் இத்தகைய ஒன்றுபட்ட வலுவான மைய இணைப்பின் மூலம் தங்கள் தொழில் பாதிக்கப்படாதவாறான கல்விக்கொள்கைகளையே அரசு எடுக்கும்படியாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இத்தகைய தனியார் பள்ளிகளின் மிகப்பெரும் எண்ணிக்கையிலான நுகர்வோர்களே அரசூழியர் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளாகத்தான் இருக்கின்றனர் எனும்போது தமது வணிகம் பாதிக்கும்படியான ஒரு கொள்கைமுடிவைத் தானே முன்னின்று எடுப்பார்கள் என்று யாரும் எந்தத் திசையிலும் நம்புவதற்கில்லை.
மேலும் காலகாலமாக இலாபநோக்கோடு போட்டியிடும் மனப்பான்மை தனியார் துறைக்கு எப்போதும் உண்டு. கடந்த சில பத்தாண்டுகளாக அதன் வணிக நோக்கத்திற்காக எத்தகைய தகிடுதத்தங்களையும் துணிந்து செய்யவல்ல வல்லமை கொண்டதாக மாறியுள்ளன. குறிப்பாக இயற்கை வளக் கொள்ளையிலும், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைத் துறைகளிலும் அதன் முகம் கோரமுகமாக மாறியிருப்பதை நாம் நன்றாகவே உணர்வோம். கடந்த பத்தாண்டுகளில் புதிது புதிதாகத் தோன்றியுள்ள தனியார் பெரும்பள்ளிகளும், தனியார் பெரும்மருத்துவமனைகளுமே இவற்றுக்குச் சான்றுகள். இத்தகைய தனியார் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நோக்கி உந்தித்தள்ளப்பட்டுள்ள மற்றும் தள்ளப்படுகிற பெரும் எண்ணிக்கையிலான மக்களில் முன்வரிசையில் நிற்பவர்களே இந்த அரசூழியர்-ஆசரியர் வர்க்கத்தினர்.
பணியிடைப் பயிற்சியும் – வகுப்பறை நேரமும்:
2002-03 முதலாக தீவிரமாக செயல்பட்டுவந்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 1முதல்8 வகுப்புவரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் குறுவளமைய (Clushter Resource Centres) அளவிலும், அவ்வப்போது பள்ளி செயல்படும் வேளைநாட்களில் வட்டார அளவிலும் தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது ஒருங்கிணைந்த கல்வி (Samagra Shiksha) நடைமுறைக்கு வந்தபின்பு குறுவள மைய பயிற்சிகள் வருடத்திற்கு 2 மட்டும் என குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளையில் வட்டார பயிற்சி நாட்கள் வரைமுறையெ இல்லாமல் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயலுக்காக வகுப்பறையில் செலவிடும் நாட்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.
சென்ற கல்வியாண்டின் இறுதி மாதங்களில் “கற்றல் விளைவுகள்” என்ற தலைப்பில் 1முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கும் மற்றும் 6 முதல் 8 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு நாட்கள் வீதம் பயிற்சி நடைபெற்றது. அதேபோல இந்தக் கல்வியாண்டில் சமீபத்தில் முதல் பருவத்தின்போது மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்களுக்கான பயிற்சி அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் சுமார் ஒருமாத காலத்திற்கு மேல் நடைபெற்று வந்தது.
அதைத்தொடர்ந்து தற்போது NISHTHA (National Initiative for School Heads’ and Teachers’ Holistic Advancement) என்று அழைக்கப்படும் ஒரு பயிற்சியானது 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு 5 நாட்கள் வீதம் நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ இந்த இரண்டாம் பருவத் தொடக்கத்தில் துவங்கிய இப்பயிற்சியானது இப்பருவம் முழுவதுமே எப்படியும் சுமார் 50 வேலை நாட்கள் நடைபெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்பயிற்சியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையுமாக ஒரே நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே இந்தியா ஒரே மொழி ஒரே ரேஷன் என்கிற ‘ஒரே’ வரிசையில் தற்போது ‘ஒரே பயிற்சி’ போன்று நடைபெற்று வருகிறது. இதே நேரத்தில் 11, 12 –ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசியரியர்களுக்குரிய புதிய பாடநூலுக்கான பயிற்சியும் நடைபெறுகிறது. மேலும் STIR (Students and Teachers Innovation for Results) என்று அழைக்கப்படும் தனியார் அமைப்பின் மூலமாக சில மாவட்டங்களில் மட்டும் வழங்கப்படும் பயிற்சியும் மாதத்திற்கு ஒருமுறை அரைநாள் வீதம் என்றபோதும் இப்பயிற்சியால் மாதத்திற்கு சுமார் 4 வேலைநாட்கள் பள்ளிகளின் உயிரோட்டமான நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.
கற்றல் நேரக் கொள்ளை:
பொதுவாக எந்தவொரு பணியில் உள்ள நபருக்கும் பணிக்கு இடையில் பயிற்சி வழங்குவது என்பது அத்தியாவசியமான ஒன்றுதான். அது போலவே ஆசியரியர்களுக்கும் பணியிடைப்பயிற்சி வழங்கப்படுவதும் அதன்மூலமாக பணித்திறன் மேம்படுத்தப்பட வேண்டுவதும் அவசியமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இப்பயிற்சிகள் வழங்கப்படும் காலம்தான் இங்கு மிக முக்கியமாக உற்றுநோக்கவேண்டியுள்ளது. இப்பயிற்சிகள் முழுக்க முழுக்க மாணவர்களின் கற்றல் நேரத்தைக் கொள்ளையடித்து வழங்கப்படுகிறது. இந்த மிகப்பெரும் சிக்கல் ஒன்றை எவ்விதத்திலும் கவனிக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே கண்டுகொள்ளப்படாமல் உள்ளதா என்பது கேள்விக்குரியது.
ஆண்டுக்கு சராசரியாக 20 வேலைநாட்கள் பயிற்சிக்காக பள்ளி வேலை நாட்களில் இவ்வாறு ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் அந்த ஆசிரியர்/ ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டிய பகுதிகள் உரிய மாணவர்களுக்கு கற்பிக்க இயலாதது ஒருபுறமிருந்தால், மறுபுறம் வருகைபுரிந்த ஆசிரியர், மாணவர்களைக் கூடுதலாக பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பதால் பள்ளியிலிருக்கும்போது பயிற்சிக்குச் சென்றுள்ள பிற ஆசிரியர்களது பாடத்தை நடத்த முடியவில்லை என்பதைவிட அவரது பாடத்தையும்கூட நடத்த முடிவதில்லை. இதன் மூலம் ஆசிரியரின் அன்றாடப் பணிகளும் பாதிப்படைகின்றன. குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 பிரிவு 24(1)(c)-இன் படி “குறித்த காலத்திற்குள் வரையறுக்கப்பட்ட கலைத்திட்டம் முழுமையும் முடிக்கப்பட வேண்டும்” என்பதை ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாக வலியுறுத்துகிறது. ஆனால் அவ்வாறு முழுமையாக முடிக்கத் தேவையான முழுமையான நேரம் என்பது ஆசிரியர்களின் கைகளில் இல்லை.
பயிற்சியும் – உரிய காலமும்:
வருடத்திற்கு 20 நாட்கள் ஆசிரியருக்கு பணியிடை பயிற்சி அளிக்கப்பட வேண்டுமென்றால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அவற்றை எந்தெந்த தலைப்புகளில் எத்தணை எத்தணை நாட்கள் எவ்வெப்போது வழங்கலாம் என்பதை மாணவர்களின் கற்றல் நேரத்தை அபகரிக்காதவாறு திட்டமிடப்பட வேண்டும். உதாரணமாக மாதந்தோறும் ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் குறுவளமைய (Clushter Resource Centres) அளவில் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்ததை மேலும் செம்மையான முறையில் தொடரலாம். அருகாமை ஆசிரியர்களுக்கிடையே மாதந்தோறும் ஒரு சந்திப்பு ஏற்பட்டு அதன்மூலம் தங்கள் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
இரண்டு முதலாக ஐந்து நாட்கள் வரை தொடர்ச்சியாக பயிற்சி வழங்கவேண்டிய தேவையிருக்குமானால் அவைபோன்ற தலைப்புகளில் வழங்கப்படும் பயிற்சிகளை கோடை விடுமுறையிலோ அல்லது பருவத்தேர்வு விடுமுறை நாட்களிலோ சிறப்பான இடங்களில் தங்குமிடப் பயிற்சிகளாகவோ அல்லது தங்கா பயிற்சிகளாகவோ வழங்கலாம். அல்லது கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஜூன் மாதத்தில் 5 நாட்களும் கல்வியாண்டின் இடையில் இரண்டாம் பருவத்தொடக்கத்தில் 5 நாட்களுமாகவோ அல்லது ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும் 3 நாட்கள் வீதமோ வேலைநாட்களிலேயே பயிற்சியை வழங்கலாம். இவ்வாறு பயிற்சிகளை வேலைநாட்களில் வழங்கும்போது பள்ளிக்குக் கட்டாயமாக விடுப்பு அளித்துவிடலாம். இந்த பயிற்சி நாட்களை கல்வியாண்டின் மொத்த வேலை நாட்களிலேயே சேர்க்கும் விதமாகவும் கூட வைத்துக்கொள்ளலாம். இதற்கு முன்பாகக் குறுவள மையப் பயிற்சிகளாக வழங்கப்பட்ட 10 நாட்களை பள்ளி வேலைநாட்களாக எடுத்துக்கொண்ட முன்னுதாரணங்களும் உள்ளன.
மேலும் பயிற்சியின் தன்மையைப் பொறுத்து அவற்றை வழங்கவேண்டிய காலகட்டத்தையும் முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக புதிய பாடப்புத்தகத்திற்கான பயிற்சிகளைக் கல்வியாண்டின் துவக்கத்திலேயே வழங்கியிருக்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய அரைநாள் அல்லது ஒருநாள் பயிற்சிகளை முன்பு நடைமுறையில் இருந்தது போலவே சனிக்கிழமைகளில் நடத்தலாம். இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் செலவிட வேண்டிய கற்றல் கற்பித்தல் நேரமானது விரயமாகாமல் தடுக்கப்படும். மேலும் பாடப்பகுதியை உரிய காலத்தில் முடித்து மாணவர்களைக் கற்றல் விளைவுகள் சார்ந்தும் தேர்வுகள் சார்ந்தும் தயார்படுத்துவதற்கான நல்வாய்ப்பு ஆசிரியருக்குக் கிட்டும். இதன்வழி அரசுப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றம் தடைபடுவது தடுத்து நிறுத்தப்படும். அரசுப்பள்ளிகளைக் காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பல முயற்சிகளில் பயிற்சியும் ஒரு முக்கியமான அங்கமாகும்.