அறிவியல் உண்மைகளை விட மூடநம்பிக்கைகளே பரவுவதில் இன்றும் வேகம் உடையதாக உள்ளன. ஆனால் அவை வேகமாக பரவுவதற்கு உதவுவது அறிவியல் சாதனங்களே என்பது ஒரு நகை முரண்.
சூரியகிரகணத்தின் போது சூரியக் கண்ணாடிகளை கொண்டு தாராளமாக வெளியில் வந்து சூரிய கிரகணத்தைக் காணலாம்.
வெறும் கண்களால் பார்க்கக் கூடாது அவ்வளவுதான். அதுவும் சூரிய கிரகணத்தின் போது மட்டும் அல்ல எப்போதுமே வெறும் கண்களால் சூரியனைப் பார்க்கக் கூடாது.
ஆனால் இன்றளவும் சூரிய கிரகணத்தின் போது வெளியில் வரக்கூடாது; கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வந்தால் கருவில் இருக்கும் சிசுவிற்கு ஆபத்து ஏற்படும்; கதிர்வீச்சு ஆபத்து இருப்பதால் உணவு உண்ணக்கூடாது; உடலுறவு கொள்ளக் கூடாது; கிரகணத்தின்போது பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன்தான் பிறக்கும் போன்ற மூட நம்பிக்கைகள் தான் வேகவேகமாக பரவுகின்றன. அவையாவும் வெகு சாதாரணமாக நம்பவும் படுகின்றன.
இதையெல்லாம் விடக் கொடுமை சூரிய கிரகணத்தின் போது உடம்பில் அரிப்பு ஏற்பட்டால் கர்ப்பிணி பெண்கள் சொரிந்து கொள்ளக் கூடாது, அவ்வாறு சொரிந்து கொண்டால் குழந்தைக்கு அந்த இடத்தில் மச்சம் ஏற்படுமாம். ஆனால் அது எந்த இடத்தில் என்று சொல்லவில்லை.
இவை போன்ற பத்தாம் பசலித் தனங்கள் எங்கிருந்து வருகின்றன என்று தீவிரமாகவெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. அதற்கான பதிலைக் கூட அவர்களே தந்து விடுகின்றனர். சூரிய கிரகணத்தின் போது என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று சில குறிப்புகளைக் கொடுக்கின்றனர். அந்தக் குறிப்புகளிலேயே அவர்களின் உச்சிக்குடுமி டிங் டிங் என்று அசைந்தாடுகிறது.
"தர்ப்பைப் புல் கதிர்வீச்சுகளை தடுக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கச் சொன்னார்"களாம் முன்னோர்கள். இது யாருடைய முன்னோர்களாக இருக்கும்?
மேலும் "மந்திர சாஸ்திராத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும்" என்பதால் மந்திரங்களை உச்சாடனம் செய்வதுதான் சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டிய ஆகச்சிறந்த பணியாம். அதையே பிழைப்பாகக் கொண்டிருப்பவர்கள் வேண்டுமானால் அதைச் செய்து கொண்டே கிடக்கட்டும். முதுகைக் கேள்விக்குறியாக்கி மண்ணில் மனிதம் விதைக்கும் நமக்கு அது தேவையில்லை.
சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் வருகிற இயற்கை நிகழ்வான வானியலின் அதிசயத்தை, அதைத் தெளிவுபட உணர்த்திய அறிவியலின் அற்புதத்தை ஒவ்வொருமுறை நிகழும் போதும் தவறாமல் கண்டுகளிக்க வேண்டும்.
அதையும் சாதாரண சூரியக் கண்ணாடி கொண்டு பாதுகாப்பாகக் கண்டு களிப்பதற்குரிய எளிய வாய்ப்பையும் அறிவியலே நமக்கு வழங்கியிருக்கிறது. ஆகவே வீட்டிற்குள் முடங்கி கிடப்பதை விடுத்து சூரிய கிரகணத்தின் போது வெளியே வந்து அதை நாம் கொண்டாடி மகிழ வேண்டும்.
- மாணிக்க முனிராஜ்
No comments:
Post a Comment