Friday, 15 October 2021

மு.நீலகண்டனின் "டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்" - நூல் அறிமுகம்

மு.நீலகண்டனின் "டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்" - நூல் அறிமுகம் - மாணிக்க முனிராஜ்


டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளை மலையாகக் கற்பனை செய்துகொண்டால் அந்த மலையின் முகடுகள் ஒவ்வொன்றின் நீள அகல உயரங்களை ஒரு பருந்துப் பார்வையில் எளிமையாகப் பார்க்க வைத்து புரட்சியாளரை உள்வாங்க வைக்கும் நல்லதொரு முயற்சிதான் 'டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்' என்கிற நூல்.


புரட்சியாளர் அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஆங்கிலத்தில் 30க்கு மேற்பட்ட தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தமிழில் 37 தொகுதிகளாக இணையதளத்தில் கையடக்க ஆவணமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் சில நூறு பக்கங்கள் முதல் பல நூறு பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக உள்ளன. அவற்றையெல்லாம் வாசிக்க விரும்பும் ஆசை பலருக்கு இருந்தாலும், அவை முழுமையும் படிப்பதற்கான பக்குவமும், பொறுமையும், வாய்ப்பும் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை.


அவ்வாறானவர்களுக்கு அம்பேத்கரின் படைப்புகளை, அவரின் தேர்ந்த படைப்புகளின் சாரத்தை ஒரு தேநீர் அருந்தும் அனுபவத்தைப் போல நேர்த்தியாக அறிமுகப் படுத்தியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் மு.நீலகண்டன்.


அரசியல், பொருளியல், சட்டவியல், சமூகவியல், சமயம் என்று 5 பகுதிகளாகப் பிரித்து அம்பேத்கரின் வெவ்வேறு கால கட்டப் படைப்புகளை அவற்றின் கரு சிதையாமல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.


அரசியல்:


சௌத்பரோ குழுவிடம் அம்பேத்கர் அளித்த சாட்சியத்தில் தீண்டாதாருக்கான சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை வலியுறுத்தும்போது, "...முகமது நபியின் மதத்தை சுல்தான் மாற்ற முடியும் என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டார். போப், கிறிஸ்துவ மதத்தைக் கவிழ்த்துவிட முடியும் என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டார். அதேபோல் முக்கியமாக உயர் சாதி இந்துக்களையே கொண்ட சட்டசபை தீண்டாமையை ஒழிப்பதற்கோ, கலப்பு மணங்களை அனுமதிப்பதற்கோ, தீண்டாதார் பொது வீதிகளையும், பொதுக் கோவில்களையும், பொதுப் பள்ளிக் கூடங்களையும் பயன்படுத்த கூடாது என்ற தடையை நீக்குவதற்கோ, சுருக்கமாகச் சொன்னால் தீண்டாதார் மீது சுமத்தப்பட்டுள்ள மாசுகளை நீக்கி சுத்தப்படுத்துவதற்கு வழி செய்யும் சட்டம் எதையும் இயற்றாது." என்று குறிப்பிட்டுள்ளார். 


மேலும் "...சுயாட்சி மேல் சாதியினரின் பிறப்புரிமையாகக் கருதப்படுவதைப்போலவே, தீண்டத்தகாதாரின் பிறப்புரிமையாகவும் இருக்கிறது" என்பதை வலியுறுத்தியுள்ளார். அம்பேத்கர் தனது ஆணித்தரமான வாதத்தின் மூலம், "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் நோக்கம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்பு கொடுப்பது தான்" என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வறிக்கையின் ஒரு இடத்தில், ''இவர்கள் மற்றவர்களை போல பிறருடைய அதிகாரத்தைத் தாங்கள் கைப்பற்றிக் கொள்ள விரும்பவில்லை மாறாக சமூகத்தில் தங்களுக்குரிய இயல்பான இடம் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்." என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

அன்றைக்கு கிராமங்களில் ₹10 நிலவரி செலத்தியவர்களும், நகர்ப்புறங்களில் ₹2000க்கு வருமான வரி கட்டியவர்களும் அல்லது ₹36 வீட்டுவாடகை செலுத்தியவர்ளும், பல்கலைக் கழகங்களில் இளங்கலைப் பட்டம் பெற்று 7 ஆண்டுகளும் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டுகளும் ஆனவர்களும்தான் வாக்கு செலுத்தினர் என்ற உண்மையை, இன்றைய வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்கிற அடிப்படையுடன் ஒப்புநோக்கும்போதுதான் வாக்குரிமையின் வரலாறு எவ்வளவு வலிமிகுந்தது என்பது புரியும். 


'பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை' என்கிற ஆய்வின் வழியாக தீர்மானகரமாக 'பிரிவினை' ஒன்று தான் தீர்வு என்பதை எவ்விதமான உணர்ச்சிப் பற்றுமின்றி தெளிவுபடக் கூறியுள்ளார். 'இரானடே, காந்தி, ஜின்னா' என்கிற உரையில், "காந்தி, ஜின்னா இருவரும் வழிபாட்டு உருவங்களாகவும், மாமனிதர்களாகவும் திகழ்கிறார்கள்... தனி முதன்மை மட்டுமின்றி இருவரும் தாங்கள் தவறே இழைக்கமாட்டாதவர்கள் என்று உரிமை கொண்டாடுகின்றனர்... இவ்விருவரால் இந்திய அரசியலே உறைந்து கிடக்கிறது எனலாம்" என்று சாடுகிறார் அம்பேத்கர்.


பொருளியல்:


கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதிக்கோட்பாடும் என்கிற கட்டுரை வழியாக 'கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இந்தியாவின் பொதுக்கடன் முழுவதும் போரினால் ஏற்பட்டது" என்பதை ஆய்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சாடுகிறார். 


"முதல் என்பது நுகர்வு போக உபரியாகத் திரட்டி வைக்கப்பட்ட முந்தைய உழைப்புச் செல்வம்" என்றும் "நமது சமுதாயம் ஒரு முதல் பற்றாக்குறையான சமுதாயமாக உள்ளது" என்றும் கூறுகிறார். 


"ஒரு உழவனுக்கு தனது நிலம் தன் கையில் உள்ள பிற காரணிகளின் அளவைப் பொறுத்தே பொருளாதார உகப்பு நிலையில் பயிரிட ஏற்றதற்குச் சிறியதாகவோ பெரியதாகவோ அமையமுடியும். வெறும் நிலவுடமையின் அளவு எந்தத் தனிப் பொருளாதார அர்த்தமும் உடையது அல்ல" என்கிறார். "எனவே சிறு நிலவுடைமை பொருளாதார உகப்பு நிலை விளைச்சலுக்கு ஏற்றதல்ல என்பதும், பெருநிலவுடமை தான் பொருளாதார உகப்புநிலைக்கு ஏற்றது என்பதும் பொருளியலின் மொழியல்ல; வெற்றுச் சொற்களே" என்று மிகத் துல்லியமாக சிறு நிலவுடைமைக்கான தீர்வை வழங்கியிருக்கிறார். 


நிலத்தை பெரும்பண்ணை ஆக்குவதும் நிலச் சிதறல்களை ஒன்றாக்குவதும் ஒருங்கிணைந்த நிலவுடமையைச் சிதறாமல் தொடர்ந்து பாதுகாப்பு செய்வதற்கும் சரியான தீர்வு 'நிலத்தை தொழில் மயமாக்குவதே' ஆகும் என்பது அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை ஆகும்.


"வேளாண்மை பிரச்சனைகளின் அடிப்படைத் தீர்வின் திறவுகோல் இந்தியாவைத் தொழில்மய நாடாக்குவதிலேயே அடங்கும்" என்று 1918ஆம் ஆண்டிலேயே இந்திய வேளாண்மை குறித்த தன்னுடைய கருத்தாக்கத்தை டாக்டர் அம்பேத்கர் வெளியிட்டார் என்றும், வேளாண்மை அரசுத் தொழிலாக இருக்க வேண்டும் என பின்னாளில் அம்பேத்கர் விரும்பியதாகவும் ஆசிரியர் மு.நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார்.


"ரூபாயின் பிரச்சினை அதன் தோற்றமும் அதற்கான தீர்வும்" என்கிற ஆய்வுக்கட்டுரை பின்னாளில் "இந்திய செலாவணி மற்றும் வங்கித் தொழிலின் வரலாறு" என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 'இந்திய ரிசர்வ் வங்கி' உதயத்திலும் இந்தக் கட்டுரையின் பங்கு உள்ளது நினைவுகூரத்தக்கது. 


மிகக் கடுமையான உழைப்பின் பயனாக உருவாகிய இந்த ஆய்வுக் கட்டுரையில் "இந்தியச் செலாவணி நிர்வாகத்தில் அரசியல் ஈடுபாட்டைக் தடுக்கும் ஒரே வழி ரூபாய் நாணயங்கள் வெளியிடுவதைத் தடுப்பது அல்லது நிறுத்துவதே ஆகும். இதுதான் நமக்கு வேண்டியது. இது விந்தையாக காட்சியளிக்கலாம். பாதுகாப்பு என்பது குறிப்பிட்ட அளவுடன் நிரந்தரமாக மாற்ற முடியாத ரூபாய் வெளியிடுவதில் இருக்கிறது." என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.


சட்டவியல்:


இந்திய ஒன்றியம் என்று சொல்வதை அர்த்தமற்ற வகையில் எதிர்த்து வருபவர்கள் கவனிக்க வேண்டியது, 'இந்தியா' என்றோ 'பாரதம்' என்றோ இல்லாமல் இந்திய அரசியலமைப்பை "இந்திய ஐக்கிய மாநிலங்களின் அரசியலமைப்பு" என்ற பெயரால் குறிப்பிட டாக்டர் அம்பேத்கரும் வலியுறுத்தியுள்ளார் என்பதுதான்.


சமூகவியல்:


'இந்தியாவில் சாதிகள் அவற்றின் இயக்கமும் தோற்றமும் வளர்ச்சியும்' என்கிற ஆய்வுக் கட்டுரையில், "சாதியின் பல்வேறு இயல்புகளை ஆய்வு செய்யும்போது அகமணம் அல்லது தன் இனத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்ளும் பழக்கமே சாதியின் அடிப்படையான ஒரே இயல்பு. அதாவது கலப்புமணம் இன்மையோ அல்லது கலப்பு மனத்தடையோதான் சாதியின் சாராம்சம் ஆகும்" என்கிறார். "சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே" என்பதைத் தெளிவாக்குகிறார். 


அகமண வழக்கம் அல்லது கதவடைத்த அமைப்பு -தனித்து இயங்குவது இந்துச் சமுதாயத்தின் ஒரு போக்காக இருந்தது. அகமண வழக்கமும் பிராமணர்களிடமிருந்து பிறந்து மற்ற வர்ணத்தாருக்குப் பரவியது. பின்னர் பிராமணரல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழு விருப்பத்தோடு பின்பற்றத் தொடங்கினர். 


பிறரைப் பார்த்து அவர்களைப் போல வாழும் தொற்றுநோய்ப் பழக்கம் அனைத்துப் பிரிவினரையும் பிடித்துக் கொண்டதால், ஒருவருக்குள் ஒருவர் கலந்து பழகி வாழ்ந்து வந்தவர்கள், தங்களுக்குள் பாகுபாடுகளை வளர்த்துக் கொண்டு பிரிந்து தனித்தனி சாதிகளாயினர். என்பதே ஆய்வின் முடிவாகும்.


இந்தியாவில் சாதி முறை தோன்றி வளர்ந்ததற்குக் காரணம் மேல் நிலையில் இருந்த வகுப்பாரைப் பார்த்து கீழ் நிலையிலிருந்தோர், 'போலச் செய்ததன் விளைவு' என்று விளக்கமளிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.


"சாதிய உருவாக்கம் இயந்திரகதியில் நடந்த முறை" என்கிறார். சாதி என்பது எண்ணிக்கையில் ஒன்றே ஒன்றாக இருத்தல் என்பது எப்போதும் இருந்திருக்க முடியாது. சாதிகள் எண்ணிக்கையில் பன்மையிலேயே நிலவி வருகின்றன. சாதிச் சட்டங்களை மீறியதால் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களை எவரும் ஏற்காத நிலை ஏற்படுவதால், தாங்களே ஒரு புதிய சாதியாக உருவாக்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய குழுக்கள் தானே இயங்குகின்ற ஒரு இயந்திர விதியால் புதிய சாதிகளாக மாற்றப்பட்டு பன்மடங்காகப் பெருகின" என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.


'சாதி ஒழிப்பு' என்கிற மிகச்சிறந்த படைப்பின் உருவாக்கம் சுவாரசியமான பின்னணியைக் கொண்டது. ஜாத்-பட்-தோடக் மண்டல் என்பது சாதி இந்துக்களால் லாகூரில் செயல்பட்டு வந்த ஒரு சமூக சீர்திருத்த சங்கம் ஆகும். அதன் வருடாந்திர மாநாட்டில் தலைமை உரையாற்ற அம்பேத்கரை அழைத்தனர். உரையைத் தயாரித்து அனுப்பி வைத்தார். அச்சங்கத்தினர், உரையில் சில மாற்றங்களைச் செய்யும்படியும் சிலவற்றை நீக்கும்படியும் வேண்டினர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் "என் உரையில் ஒரு கால் புள்ளியைக் கூட நான் மாற்ற மாட்டேன்; என் உரையைத் தணிக்கை செய்வதை அனுமதிக்க மாட்டேன்; என் உரையில் உள்ள கருத்துகளுக்கு நானே முழுப்பொறுப்பு ஏற்கிறேன்" என்று அதன் அமைப்பாளருக்குத் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்ததால் மாநாடு ரத்து செய்யப்பட்டது. பின்னாளில் இந்த உரையைச் 'சாதி ஒழிப்பு' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார் அம்பேத்கர்.


இந்தியச் சமூக அமைப்பைத் திருத்தி அமைக்க வேண்டுமானால் அரசியல் சீர்திருத்தத்திற்கு முன் சமூகச் சீர்திருத்தம் ஏற்பட்டாக வேண்டும். உலகம் முழுவதும் அரசியல் புரட்சிகளுக்கு முன்பே சமூக மதப் புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை பல்வேறு உதாரணங்களின் மூலம் இந்த நூலில் விளக்கி இருக்கிறார். பொருளாதாரப் புரட்சிக்கும் சமுதாய மாற்றமே அடிப்படை என்கிறார்.


இந்து சமூகம் என்பது ஒரு கற்பனையே. இந்திய நாட்டு மக்களிடம் இருந்து தங்களைத் தனித்துக் காட்டுவதற்கு முகமதியர்கள் வைத்த பெயர்தான் 'இந்து'. முகமதியர்களுக்கு முன்பு இந்தப் பெயர் இருந்தது இல்லை. இந்து என்ற சொல் ஒரு அன்னியப் பெயர்தான். இந்து என்ற உணர்வே எவரிடமும் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் இருப்பது 'சாதி' என்ற உணர்வுதான். குழுஉணர்வு இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும். 


முகமதியர்களும் கிறித்துவர்களும் தங்களின் மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியை இந்துக்கள் எடுக்கவில்லை. ஏனெனில், மதமாற்றத்திற்கு சாதி ஒத்துவராது. மதம் மாறி வந்தவர்களுக்கு எந்தச் சாதியில் இடமளிப்பது என்பது தான் பிரச்சினை. சாதி சட்டங்களைப் பொறுத்தவரையில் அதில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உறுப்பினராகும் தகுதி உள்ளது. ஆகவே சாதி இருக்கும் வரை இந்து மதத்தை விரிவாக்க முடியாது.


இந்தியாவில் மௌரியப் பேரரசின் காலத்தில் தான் சதுர்வர்ணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சூத்திரர்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக இருந்தார்கள். மற்ற காலங்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து சூத்திரர்களை எவ்வித உரிமையும் அற்றவர்களாக ஒடுக்கினர். கல்வி, செல்வம், ஆயுதம் எதற்கும் சூத்திரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே இங்கு சமுதாயப் புரட்சி ஏற்படாமல் போனது. 


கிளைச் சாதிகளை ஒழிப்பதன் மூலமாகவோ, சமபந்தி விருந்துகளின் மூலமாகவோ சாதி ஒழிப்பு நடைபெறாது. "சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி 'கலப்புத் திருமணம்'தான். இரத்தக் கலப்பின் மூலம் தான் உற்றார் உறவினர் என்கிற உணர்வு ஏற்படும். இந்துக்களிடையே கலப்புமணம் சமூக வாழ்வில் அதிக ஆற்றல்வாய்ந்த அம்சமாக இருக்கும்." என்று அறுதியிட்டுக் கூறுகிறார் டாக்டர் அம்பேத்கர்.


மேலும் சாதி என்பது ஒரு மனநிலை தான். அதை மாற்ற முடியும். "சாதிக் கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் வேதங்களையும், சாஸ்திரங்களையும் வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை அழிக்க வேண்டும். வேறு எதுவும் பயன்தராது." என்று தீர்க்கமாகக் கூறினார் டாக்டர் அம்பேத்கர்.


இந்து மதத்துக்கு ஒரே ஒரு பிரமாணமான புத்தகம் அனைத்து இந்துக்களும் ஏற்று ஒப்புக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். இந்துக்களிடையே புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும். இந்து என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் அரசு நிர்ணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று புரோகிதராகப் பணிபுரிவதற்கு இடம் அளிக்க வேண்டும். புரோகித பணியாளரும் அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் இந்த சாதி ஒழிப்பு நூலில் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் இந்தக் கனவு நனவாகும் என நம்புவோம்.


"அழுகிய புண் மீது அடர்த்தியான திராவகத்தை ஊற்றியது போல் சாதி இந்துத் தலைவர்களின் உள்ளங்களை சாதி ஒழிப்பு என்ற இந்தக் கட்டுரை பற்றி எரியச் செய்தது" என்று டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள தனஞ்செய்கீர் கூறியுள்ளது இதன் வலிமையை மேலும் பறைசாற்றுகிறது.


சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்தோ-ஆரிய சமுதாயத்தின் நான்காவது வருணமாக எப்படி ஆனார்கள்? என்கிற ஆய்வின் வழியாக சூத்திரர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஆரிய இனங்களில் ஒரு பகுதியினர். முதலில் 3 வருணம் மட்டுமே இருந்தது. அப்போது சூத்திரர்கள் சத்திரிய வருணத்தின் ஒரு பகுதியினராக ஆள்பவர்களாகவும் இருந்து வந்தனர். 


சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் ஓயாத சண்டைச் சச்சரவு இருந்து வந்தது. இதனால் இவர்கள் மீது வெறுப்பும் பகையும் கொண்ட பிராமணர்கள் சத்திரியர்களுக்கு பூணூல் சடங்கு செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால் சமூக ரீதியில் இழி நிலைக்குத் தள்ளப்பட்டனர். வைசியர்களின் படிநிலைக்கும் கீழே இறக்கப்பட்டு நான்காவது வருணத்தினராக சூத்திரர்களாயினர். இதற்கு முன் 4-ஆவது வர்ணம் இருந்ததில்லை. இதுவே டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு முடிவாகும்.


தீண்டப்படாதவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்? என்கிற ஆய்வு நூலில், தீண்டாமைக்கு இன அடிப்படை வேறுபாடோ அல்லது தொழில் ரீதியான வேறுபாடோ காரணம் அல்ல என்கிறார். தீண்டப்படாதவர்கள் தூய்மையற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். கி.பி.400-இல் தோன்றியவர்கள். இனக் குழுக்களிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீது பிராமணர்கள், பெளத்தர்களிடம் காட்டியது போன்ற வெறுப்பையும், பகையையும் காட்டியதும், மாட்டிறைச்சி உண்பதைக் கைவிடாததும் இவர்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்பட்டதற்கான முக்கிய காரணிளாக அம்பேத்கர் எண்ணினார்.


சமயம்:


'இந்து பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்' என்ற தலைப்பில் இந்து சமயத்திலும் பௌத்த சமயத்திலும் பெண்களின் நிலைமை குறித்து விரிவாக ஆய்வு செய்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளது. புத்தரின் மடத்திலேயே தங்கி இருந்த விசாகம் அம்மையார், புத்தரால் பெரிதும் பாராட்டப்பட்ட அம்ராபாலி, 500 பெண்களை புத்த மடத்தில் சேர்ப்பித்த மகாபிரஜாபதி கௌதமி போன்ற பலரும் புகழ் பெற்று இருந்ததும், பௌத்த மதத்தில் பெண்கள் மிகுந்த சுதந்திரத்துடன் இருந்ததும், இதனால் இந்துப் பெண்களிடையே எழுச்சி ஏற்பட்டதும் இப்பகுதியில் விளக்கப்படுகிறது.


"ஒரு பெண் குழந்தை பிறப்பதானது துயரம் அடைவதற்கான சந்தர்ப்பம் அல்ல. மகிழ்ச்சி அடைவதற்கான ஒரு சந்தர்ப்பம்" என்றும், "ஆண்களோடு பெண்களும் சட்டத்தகுதி, சுதந்திரம், உயர்வு, சமத்துவத்தையும் பெற முடியும்" என்றும் புத்தர் கூறியுள்ளதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார் அப்பேத்கர். பௌத்த மதத்தில் ஆண் பெண்ணிற்கு இடையே கல்வி, நீதி, தொழில் அனைத்திலும் சமத்துவம் பேணப்பட்டது. 


கணவன் இறப்பிற்கு பின்பு அல்லது முன்பு பெண்ணின் விருப்பப்படி மறுமணம் செய்து கொள்ள உரிமை இருந்தது. "ஆண்களைப் போலவே சன்னியாசி வாழ்க்கையை அடைவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு உள்ளது" என்று முதன்முதலில் பிரகடனம் செய்தவர் புத்தர் தான்.


ஆனால் மநு சாஸ்திரத்திலோ, "ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. தாய் மகள் சகோதரி எவருடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது; புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை; அறிவாளிகளையும் வெற்றி கொள்ளும்... படுக்கை மோகம், பதவித்தாகம், ஆபரண ஆசை, கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீய நடத்தை ஆகியவையே பெண்களின் குணங்கள். 

பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதி அற்றவள். 


வேதங்களைப் படிப்பதற்கு பெண்களுக்கு உரிமை இல்லை. சொத்துரிமை இல்லை. கணவன் இறந்தால் விதவை மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. தீயில் விழுந்து உயிர் விட வேண்டும். கணவன் விரும்பினால் மனைவியை விற்கலாம். ஒரு பெண்ணைக் கொல்வது பெரியதவறு ஒன்றும் இல்லை. அது ஒரு அற்பமான குற்றமே ஆகும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் அதன்படியே இந்துப் பெண்களின் பெரும்பான்மையானோரின் வாழ்க்கை இருந்ததையும் சுட்டிக் காட்டி பௌத்த-இந்து மதங்கள் பெண்களை எவ்வாறு கையாண்டனர் என்பதையும், "இந்தியாவில் பெண்களின் வீழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் காரணம் மனு தர்மமே" என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் டாக்டர் அம்பேத்கர்.


இந்து மதத்தின் அதிகாரப்பூர்வமான கோட்பாடு சதுர்வர்ணம் என்ற அசமத்துவமே ஆகும். ஆனால் மறுபுறத்தில் புத்தர் சமத்துவத்திற்காக நின்றார். சதுர்வர்ணத்தின் மிகப் பெரும் எதிரியாக இருந்தார். அதற்கு எதிராக போதனையும் செய்தார் போராடவும் செய்தார். புத்த மதம் அடிப்படையில் பகுத்தறிவையும் அனுபவத்தையும் போதனை செய்தது. காலத்தால் பொருந்தாதவை என்று கண்டறியப்பட்டால் அவற்றை மாற்றிக் கொள்வதற்கு புத்த மதத்தில் இடம் உண்டு. ஒழுக்க முறைமையே புத்தமதம். அது இல்லையென்றால் புத்தசமயம் ஒன்றும் இல்லாததாகும். புத்த சமயத்தில் கடவுள் இல்லை என்பது உண்மையே. கடவுளுக்குப் பதிலாக அந்த இடத்தில் ஒழுக்க முறைமை இருக்கிறது. 


"ரோம சாம்ராஜ்யத்தில் பாகனிசத்தைத் தூக்கி எறிந்து கிருஸ்துவ மதத்தை தழுவியது போல, இந்தியாவிலும் ஏற்படுவது நிச்சயம். இந்து மக்கள் திறல், அறிவு ஞானம் பெறும் போது புத்த சமயத்தின் பால் நிச்சயம் திரும்புவார்கள்" என்கிறார் டாக்டர் அம்பேத்கர். மேலும் இரண்டாயிரம் ஆண்டு இடைவெளியில் பிறந்த புத்தரையும் மார்க்ஸையும் அவரவர்களுடைய கோட்பாட்டு ரீதியாக மிகச்சிறப்பாக ஒப்பிட்டுள்ளார். 


"துக்கம் என்பதற்கு பதிலாக சுரண்டல் என்று வாசித்தால் புத்தர் மார்க்ஸிடமிருந்து விலகி இருக்கவில்லை என்பதை அறியலாம்." என்கிறார் அம்பேத்கர். புத்தரை ஒரு ஜனநாயகவாதியாகவும் பொதுவுடைமைவாதியாகவும் மிகச் சிறப்பாக நிறுவுகிறார். 


சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் இந்த முழக்கத்தினால் பிரெஞ்சு புரட்சிக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் அது சமத்துவத்தை உருவாக்க தவறி விட்டது அதன்பின் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சி சமத்துவத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் நிறைவு செய்யவில்லை. புத்தரின் வழியைப் பின்பற்றினால்தான் இந்த மூன்றும் சேர்ந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது என்று கூறுகிறார். 


இன்றைய முதலாளித்துவ சமுதாயம் மாறி சோசலிசமும், அதைத்தொடர்ந்து பொதுவுடைமையும் விஞ்ஞான ரீதியாக கட்டாயமாக வரலாற்றில் நிகழும் என்று மார்க்ஸ் கூறியதைப் போன்றதே மக்களிடையே அறிவு வளர வளர மக்களால் புத்த மதமும் கட்டாயமாகப் பின்பற்றப்படும் என்று அம்பேத்கர் கூறியதும். மேலும் ஆய்வின் இறுதியில், "உலகில் பெளத்த தத்துவம் பயனளிக்கத் தவறுமானால், ஒட்டுமொத்த உலகமும் மார்க்ஸியத்திற்கே செல்ல வேண்டிவரும்." என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.


மார்க்ஸையும், அம்பேத்கரையும், பெரியாரையும் இப்படிச் சுருக்கமான வடிவில் எளிமையாக வெளியிடுவதும் அறிமுகப்படுத்துவதும் இன்றைய நவீன தலைமுறைக்கு மிகமிகத் தேவையான ஒன்று. குறிப்பாகக் குழந்தை வாசகர்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியாகக் கதைகளாகவும், காமிக்ஸ்களாகவும், சீரியல்களாகவும், சிறிய சிறிய காணொளிகளாகவும் எளிய வடிவில் புரட்சிப் படைப்புகளைப் படைப்பதும், அவற்றைப் பரவலாக்குவதும் காலத்தின் கட்டாயம்.


புத்தகத்தின் பெயர்: டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்

ஆசிரியர்: மு.நீலகண்டன்

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஏழாம் பதிப்பு: ஆகஸ்டு, 2012


பக்கங்கள்: 294

விலை: ₹185


- மாணிக்க முனிராஜ்,

(manickamuniraj@gmail.com)

Sunday, 6 June 2021

பாரம்பரிய மருத்துவத்தின் சோதனைக் காலம் - கட்டுரை

 


பாரம்பரிய மருத்துவத்தின் சோதனைக் காலம் - மாணிக்க முனிராஜ்
***********************************
கொரோனாவைக் குணப்படுத்த, கொரோனா வராமல் பாதுகாக்க என்று வாட்ஸப்பில் குவிந்துவரும் பெருந்தகவல் இன்று மக்களை மிகுந்த குழப்பத்திற்கும், உயிர் பயத்தில் எது சரி? எது தவறு? என்று பிரித்தறிய முடியாத ஒரு பதற்ற நிலைக்கும் தள்ளியுள்ளன.

ஒருபுறம் மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதும், சாணத்தில் குளிப்பதும் கொரோனாவை அண்டவிடாது என்பதும்; காயத்திரி மந்திரம் சொல்லி யோகாசனம் செய்தால் கொரோனா விரைவாகக் குணமாகிறதா என இந்திய அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் வழியாக ஆய்வு செய்வதும்; 'கோ கொரோனா கோ' என்று தட்டில் ஒலியெழுப்பி விளக்கு பிடிப்பதுமாக கொரோனாவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளன.

மறுபுறம் இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், இலவங்கம், பட்டை, தனியா, ஓமம், எலுமிச்சை, துளசி, மல்லி, வெற்றிலை போன்றவற்றில் சிலவற்றையோ எல்லாவற்றையுமோ காய்ச்சிக் குடிப்பதாலும்; ஆவி பிடிப்பதாலும்;  பிரணாயாமா போன்ற யோகாசனம் செய்வதாலும் கொரோனா தொற்றாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லது கொரோனா வந்தவர்கள் இதைச் செய்தால் கொரோனா கிருமி செத்துவிடும் என்பதைப் போன்ற தகவல்கள் பரப்பப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றன.

'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற சொலவடைக்கு ஒப்ப எதையாவது செய்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் காத்துக் கொள்ளலாம் என்று கருதி எதையெதையோ செய்து வருகின்றனர்.
பொய்ச்செய்திப் பரவல் கொரோனா வைரஸை விட வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனரே கூறுகிறார்.

இவற்றில் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி தேநீர் அருந்துவது பொதுவாக இருமல், சளி இருப்பவர்களுக்கும், கொரோனா காரணமாக இருமல், சளி ஏற்பட்டவர்களுக்கும்
ஒரு தற்காலிக ஆறுதலைத் தரும் என்பதிலும், இது போன்ற உணவுப் பழக்கங்கள் இயல்பான நம்முடைய நோய் எதிர்ப்புத்திறனை வலுவாக வைக்க உதவும் என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இவை தொற்று ஏற்பட்டவர்களின் கொரோனா கிருமிகளை அழித்துவிடும் என்பதோ அல்லது இயல்பாக இவ்வாறு நம் உணவும் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் கொரோனா தொற்றே நமக்கு தொற்றாது என்பதோ முற்றிலும் தவறான, அறிவியலுக்குப் புறம்பான, போலி அறிவியல் தகவல் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எப்படிப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட, உடல் வலுவான நபராக இருந்தாலும், தொற்று ஏற்படக்கூடிய சூழலில் இருந்தால் அவருக்கும் கட்டாயமாக தொற்று ஏற்படத்தான் செய்யும். தொற்றின் பாதிப்பு வேண்டுமானால் அவருடைய இயல்பான  நோய் எதிர்ப்பாற்றலால் குறைவாக இருக்கலாம். அதே போல தொற்று ஏற்பட்டவர் இவற்றையெல்லாம் சாப்பிட்டால் கொரோனா கிருமியை அழிந்து விட முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆய்வோ நிரூபனமோ இதுவரை இல்லை.

அதற்காக மூலிகைகள் பயனற்றது என்பது நமது வாதமல்ல. கொரோனா கிருமிகளை அழிப்பதில் அல்லது கட்டுப்படுத்துவதில்  மூலிகையின் பயன் நிரூபிக்கப்படவில்லை  அவ்வளவுதான். நவீன மருத்துவத்துக்கான மாத்திரை மருந்துகள் ஆய்வகங்களில் செயற்கையாக மட்டும் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக இயற்கையான மூலிகைகளைக் கொண்டும்தான் தயாரிக்கப்படுகின்றன. அடிப்படையில் எல்லாம் கரிம, கனிம வேதிப்பொருட்கள்தானே.

இங்கு அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால் பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தளிப்பதிலும், குணப்படுத்துவதிலும், குறிப்பாக ஆய்விலும் அறிவியல் அனுகுமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது தான்.

ஆய்விற்கு இன்று வழியில்லாமல் இல்லை. முன்பாவது ஆய்வுகளில் அரசு ஒத்துழைப்பு  குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அதற்கென்றே ஆயுஷ் போன்ற அரச அமைப்புகளும் உள்ளன. ஆனால் இவையெல்லாம் எந்த அளவிற்கு நோயியலை ஆய்வுப்பூர்வமாக அனுக ஏற்பாடுகள் செய்துள்ளன என்பதெல்லாம் பெரிய கேள்வி.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்ற கிராமத்தில் ஆனந்தையா என்பவர்  கொரோனாவுக்காக நாட்டு மருந்து அளித்து பதினைந்தே நிமிடத்தில் குணப்படுத்துகிறார். தினமும் 500 பேருக்கு அவர் இலவசமாக வழங்கி வருகிறார் என்று செய்தி. இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு 3 நாட்களுக்குத் தடை விதித்ததுடன் ஆயுஷ் அமைச்சகத்திற்கு சோதனைக்காக சேம்பிளை அனுப்பியுள்ளனர்.

ஆய்வு முடிவில் அந்த மருந்து கொரோனாவைக் குணப்படுத்துமா குணப்படுத்தாதா என்பது குறித்த விளக்கம் எதுவும் இல்லை. ஆனால் அந்த மருந்து சாப்பிடுவதால் ஆபத்து எதுவும் வராது என்று கூறியுள்ளதாம். ஆகவே திரும்பவும் மருந்து வழங்க அனுமதி அளித்ததுடன் போலீஸ் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்.

பின்னர் பத்து பதினைந்தாயிரம் பேர் வரை ஒரே இடத்தில் கூடியதால் மீண்டும் தடை விதித்ததையடுத்து, ஆந்திர மாநில எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆனந்தையாவை சந்தித்தபோது, ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு கண்ணில் ஆயுர்வேத சொட்டு மருந்து விட்டு ஐந்தே நிமிடத்தில் எழுந்து நின்று நன்றாக சுவாசிப்பதை டெமொ செய்து காட்டுகின்றனர்.

உடனே அங்கிருந்த சோமிரெட்டி என்கிற எம்எல்ஏ "ஆயுஷ் அமைச்சகம் அங்கீகரித்துள்ள இந்த நாட்டு மருந்தை உடனடியாக எல்லாருக்கும் இலவசமாக வழங்க ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேட்டியளிக்கிறார். உண்மையில் ஆயுஷ் அமைச்சகம் இதுவரை அது போன்ற அங்கீகாரம் எதையும் வழங்கவில்லை. மாறாக ஆணையர் ராமுலு, "இதனை ஆயுர்வேத மருந்து என அழைக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். ஆய்வு முடிவு எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் எதற்காக இத்தகைய அவசரம் காட்டப்படுகிறது?

பாரம்பரியமாக வைத்தியங்களைப் பார்த்து வரும் வைத்தியர்களில் பலர் போலியாக பணம் பறிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் அடிப்படை சித்த, ஹோமியோ, ஆயுர்வேத மருத்துவப் படிப்பைப் படிக்கவில்லை என்பது மட்டுமல்ல. (சொல்லப்போனால் அப்படியெல்லாம் படிக்காதவர்களால்தான் காலங்காலமாக சித்த, ஆயுர்வேத மருத்துவ முறை வளர்ந்து வந்தது.) காலத்துக்குத் தகுந்த எந்தவிதமான முன்னேற்றத்தையும் அவர்கள் கைக்கொள்ளாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றனர் என்பது தான் இங்கு சிக்கலாக உள்ளது.

மேற்கத்திய மருத்துவம் புதிய புதிய நோய்களுக்கு புதிய புதிய மருந்துகளைத்தான் கண்டறிந்து வருகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் உட்பட எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எல்லா நோய்களுக்கும் சேர்த்து ஒரே அருமருந்தாக அகஸ்திய ரசாயனம் உள்ளது என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுவடிகளில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும் அனைத்து நோய்களுக்கும் பாரம்பரிய முறையில் தீர்வளிக்க முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுவடிகளில் எழுதப்பட்டிருக்கிறது, கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் தீவிரமாக நம்புபவர்களில் எத்தனைப் பேர் எல்லாவற்றுக்கும் பாரம்பரிய மருத்துவத்தை நாடுகின்றனர் என்பதை உற்றுக் கவனிக்க வேண்டும்.

எப்படி எவ்வளவு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையாளராக இருந்தாலும், நோய் வந்தால் சாமியை மட்டும் கும்பிட்டு சரிசெய்துகொள்ள முடியாது என்று பகுத்தறிவுடன் சிந்தித்து மாத்திரை, மருந்துகளை எடுத்துத் தன்னைக் குணப்படுத்திக்கொள்கின்றரோ,

எப்படி சாமிக்கு அருகில் நின்று பூசை செய்பவராக இருந்தாலும், பள்ளிவாசல், தேவாலயங்களில் வழிபடுவோராக  இருந்தாலும் வைரசுக்குப் பயந்து முகக் கவசம் அணிகின்றனரோ,

அப்படியேதான் ஒரு விபத்து நேரிட்டால் அல்லது தீவிரமான உடல் உள்ளுறுப்புக்கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் பாரம்பரிய மருத்துவத்தின் தீவிர பற்றாளர்கள் எவரும் நவீன மருத்துவத்தை நாடாமல் இருப்பது இல்லை.

'போலி அறிவியல், மாற்று மருத்துவம் மற்றும் மூடநம்பிக்கை - ஒரு விஞ்ஞான உரையாடல்' நூலின் ஆசிரியரும் மயக்கவியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் சட்வா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணையவழிக் கூட்டத்தில் பேசும்போது,

"எல்லா நோய்களையும் மாற்று மருத்துவத்தால் குணப்படுத்திவிட முடியும் என்று கூறுபவர்கள், காசநோய், மலேரியா, தொழுநோய், யானைக்கால் நோய் போன்றவற்றை என்றைக்காவது குணப்படுத்தியிருக்கிறார்களா? என்றால் இல்லை.

மாறாக, மருந்து கண்டறியப்படாத சில நோய்களை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்று மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சிலர் மக்களை நம்பவைக்க முயல்கின்றனர். ஆனால் ஒரு வியாதிக்கு மருந்து கண்டறியப்படாமல் இருந்தால், அதற்கு 'மருந்து இல்லை' என்று வெளிப்படையாகச் சொல்வது விஞ்ஞான மருத்துவம்தான்" என்கிறார்.

மேலும் அவர், "உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொன்று குவித்த பெரியம்மை போன்ற நோய்களை விஞ்ஞான மருத்துவத்தின் கொடையான தடுப்பூசியின் உதவியால்தான் வென்றிருக்கிறோம். நோய்களைத் தீர்க்கும் ஆயுதம் விஞ்ஞான மருத்துவம் தான். பண்டைய ஓலை சுவடிகளில் உள்ளது; நமது வீட்டு சமையலறையில் உள்ளது போன்ற முன் முடிவுகளின்படி கொரோனாவை அணுகக் கூடாது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும்" என்றும் எச்சரிக்கிறார். 

இதன் பொருள் பாரம்பரிய மருத்துவமே முற்றுமுதலாகத் தவறானது என்றோ, நவீன மருத்துவம் மட்டுமே மனிதகுலத்தைக் காக்க வந்த விடிவெள்ளி என்றோ வாதிடுவதல்ல. அலோபதி மருத்துவமுறை அறிவியல் அனுகுமுறைகளை பின்பற்றினாலும்கூட இன்றும் சில மருந்துகள் எதிர்ப்பார்க்கும் பலனை எல்லாவிதமான நோயாளிகளுக்கும் அளித்துவிடுவதில்லை.

ஆனால் பெரும்பான்மையாக அவற்றின் பலன் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என்பது தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. 
ஒன்று சரி என்றால் அது மிகப் பெரும்பான்மையானவர்களுக்குச் சரியாக இருக்க வேண்டும். தவறு என்றால் அது மிகப் பெரும்பான்மையானவர்களுக்குத் தவறாக இருக்க வேண்டும். புள்ளிவிவர அடிப்படையிலான ஆய்வுதான் எது சரி, அது எந்த அளவிற்கு சரி, ஒரு மருந்தை ஏற்கலாமா? கூடாதா? என்பதையெல்லாம் தீர்மானிக்கிறது.

இன்றைக்கு கொரோனாவிற்கு  சிகிச்சையளிக்க மீத்தைல் பிரெட்னிசலோன் போன்ற ஸ்டெராய்டுகளை அதிகமாகவும் நீண்ட காலமாகவும் பயன்படுத்துவதால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தி கருப்பு பூஞ்சை எனப்படும் மியூக்கோர்மையோஸிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது என்று  மருத்துவர்கள் சொல்வதாக செய்திகள் வருகின்றன.

நாட்பட்ட சளித்தொல்லை, தும்மல், இருமல் ஒவ்வாமை, கடி எனப்படும் தோல் நோய் போன்ற பரவலாக சமூகத்தில் இருக்கும் சில நோய்கள் எந்த மருத்துவ முறையிலாவது யாருக்காவது  நிரந்தரமாகக் குணமாகியிருக்கிறதா? என்றால் பெரும்பான்மையாக இல்லை. இவை பருவகாலங்களில் வரும், போகும். நவீன அல்லது பாரம்பரிய மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது சற்று தணியும். ஆனால் நிரந்தரமாகத் தீர்ந்தது கிடையாது என்பதே பெரும்பான்மையோரின் அனுபவமாக உள்ளது.

இதுமட்டுமல்லாமல் நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்றவற்றுக்காக தொடர்ந்து எடுக்கும் மருந்துகளாலும் உடலின் இயல்பான நோய் எதிர்ப்புத் திறன் குறைவதாகவும்; எந்தவொரு நோய்க்கும் நெடுநாள் எடுக்கப்படும் மருந்தால் ஒருவித மருந்தடிமைத்தனம் ஏற்படுவதாகவும் சொல்கின்றனர்.  நோய்களைக் குணப்படுத்துவதற்கு மாறாக கட்டுக்குள் வைப்பதையே இந்த மருத்துவம் செய்கிறது. இதன்வழி நோயாளி - மருந்து - வணிகம் என்ற சங்கிலி அறுபடாமல் இருக்கவே நவீன மருத்துவம் உதவுகிறது என்கிற குற்றச்சாட்டும் இதன் மீது உள்ளது.  இதுபோன்று நவீன மருத்துவ முறையாலும் முழுமையாக சரியாகக் கையாள முடியாத போதாமைகள் இல்லாமல் இல்லை.

ஆனால், குழந்தையின்மையைத் தீர்க்க சாதாரண மருந்து மாத்திரைகள் முதல் செயற்கைக் கருத்தரிப்பு, வாடகைத்தாய் முறை வரை நவீன மருத்துவம் கண்டறிந்துள்ள படிப்படியான தீர்வுகள் ஏராளம். சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளையே மாற்றும் அறுவை சிகிச்சை முதல் டெலிமெடிசின், ரோபோட்டிக் மருத்துவ சிகிச்சை வரை நவீன மருத்துவத்துறையின் சாகசமான சாதனைகள் ஏராளம்.

இந்தியர்களின் சராசரி ஆயுள் 1921-இல் 24 ஆண்டுகள் என்றிருந்தது 1990-இல் 59.6-ஆகவும் 2019-இல் 70.8-ஆகவும் உயர்ந்துள்ளது. இது மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது குறைவுதான் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த அளவிற்கு சராசரி ஆயுள் வளர்ந்ததற்கு நவீன மருத்துவமே காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. எல்லாவற்றையும் விட குறிப்பிட்ட எந்தவொரு நோய்க்கும் ஏற்றுக்கொள்ளப்படும் மருந்து எதுவும் முறையான மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்ட பின்பே பயன்பாட்டுக்கு வருகின்றன. நிரூபிக்கப்படாத ஒன்றை ஏற்றுக்கொள்வதில்லை. இது தான் எப்போதைக்கும் அவசியமான அறிவியல் அனுகுமுறை.

இயற்கையான சரியான உணவுப்பழக்கவழக்கத்தின் மூலமே நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சரியாக நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அதில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் குறைகள் வருகின்றனவோ அவ்விடத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் வழிகாட்டுதலை நமது நோய்த்தடுப்பாற்றலை திடப்படுத்திக்கொள்ள சிறப்பாகக் கைக்கொள்ளலாம்.

ஆனால், இந்த இரண்டாம் அலை பெருந்தொற்றுக் காலத்தில் நிரூபிக்கப்படாத மருந்துகளை, நமது பாரம்பரிய பெருமைக்காக   நம்பிக்கையின் அடிப்படையிலும், வாட்ஸப் பகிர்வின் அடிப்படையிலும் சுயமாக எடுத்துக் கொள்வதும், பின்பற்றுவதும் அதை மற்றவர்களுக்கும் பரப்புவதும் தவறானது என்பது மட்டுமல்ல. அதுவே உயிரிழப்பு போன்ற தீவிர சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆவி பிடிப்பதால் கிருமியை அழித்து விடமுடியாது என்றும் பொதுவெளியில் கூட்டம்கூட்டமாக ஆவி பிடிப்பது மேலும் மேலும் தொற்றுக்கே வழிவகுக்கும் என்பதால் அதைத் தடை செய்தும் சமீபத்தில் வெளியான அறிவிப்பைப் போல, பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கையாள்வதில் மேலும் சில அறிவிப்புகளும், சரியான  வழிகாட்டுதல்களும் மக்களுக்கு உடனடித் தேவையாக உள்ளது. 

சித்த மருத்துவர் கு.சிவராமன் போன்ற சிலர் சரியான புரிதலுடன் இரண்டு மருத்துவ முறைகளையும் இணைத்து இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ளலாம் என்றும், நோயின், நோயாளியின்  அகப்புற சூழலுக்குத் தக்கபடி தேவையான மருத்துவத்தைக் கையாளலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். எந்த சூழலில், எந்த அளவில், எந்த முறையில் சிகிச்சை அளிப்பது என்பதையெல்லாம் உரிய மருத்துவ நிபுனர்களும் அரசும் பேசி சரியானதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

-மாணிக்க முனிராஜ்
(manickamuniraj@gmail.com)

உயிர்காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்- கட்டுரை

 



உயிர்காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்
============================

வாழ்வின் சிற்சில தடங்கல்களுக்கெல்லாம் சோர்ந்துவிடும் பலருக்கு மத்தியில், எவ்வளவோ இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் சரிந்துவிடாமல் பணியாற்றும் பணியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் செவிலியர்கள்.

உயிர்காப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை:
--------------------------------------------------------------
தற்போது பரவி வரும் இரண்டாம் அலை கொரோனா பெருந்தொற்றினால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் செவிலியர் இந்திரா மற்றும் வேலூர் செவிலியர் பிரேமா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் உள்ளிட்ட 548 பேர் இதற்கு பலியாகியுள்ளதாக ஒரு வாரத்திற்கு முந்தைய மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறியுள்ளது.

ஆனால் இவ்வளவு பாடுபடும் இந்த மருத்துவப் பணியாளர்களுக்கு ஹெலிகாப்டரிலிருந்தும், பால்கனியிலிருந்தும் மலர் தூவுவதும், கை தட்டுவதும், உச்சமாகச் சென்று காலில் விழுந்து, அழுந்து பாராட்டுவதையும்தான் இதுவரையில் பதிலீடாகச் செய்துள்ளனர்.  இவையெல்லாம் அவர்களுக்கு தேவையுமில்லை, அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை. மாறாக  தமிழக அரசின் தற்போதைய அறிவிப்புகள் அனைத்தும் நம்பிக்கை ஊட்டுவதாகவும், ஆறுதலாகவும்  உள்ளன.

மகிழ்ச்சிதரத்தக்க அறிவிப்புகள்:
-------------------------------------------------------------
1212 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம், மருத்துவ-தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் மூன்று மாத ஊக்கத்தொகை, கொரோனா தடுப்புப் பணியின்போது இறந்த பணியாளர்களுக்கு நிவாரணமாக 25 லட்சம் என மருத்துவத்துறை சார்ந்த ஒவ்வொரு அறிவிப்பும் முத்தாய்ப்பானதாக உள்ளது. மிகுந்த மனிதநேயத்துடன் உள்ளது.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புக:
-----------------------------------------------------------
அதையும் தாண்டி மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறையின் காலியாக உள்ள பணியிடங்கள் விரைந்து நிரப்பப்பட வேண்டும். பெருந்தொற்றால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

குறிப்பாகப் பெருந்தொற்றால் அதிகரித்திருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையையும், மிகுந்த பணிப்பளுவையும் கருத்தில் கொண்டு செவிலியர்களின் காலிப்பணியிடங்கள் உடனடியாக  நிரப்பப்படவும், கூடுதல் பணியிடங்களை உருவாக்கி பணியமர்த்தப்படவும் வேண்டும்.

தொகுப்பூதிய முறை முற்றிலும்  ஒழிக்கப்பட வேண்டும்:
-----------------------------------------------------------
எம்ஆர்பி மூலம் பணியமர்த்தப்படும் செவிலியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் நான்கு ஆண்டு முதல் அதிகபட்சம் ஏழு எட்டு ஆண்டுகள் வரை தொகுப்பூதியத்தில் மட்டுமே பணியாற்றுகின்றனர். அவர்கள் முதன் முதலில் பணியில் சேரும்போதே நிரந்தர பணியாளராகச் சேரும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் சொற்பமாக உள்ளனர் என்றாலும்
எங்கும் பெரும்பான்மையாக பட்டியல் இன மக்களே பணிபுரிகின்றனர். சொற்பமான கூலி கிடைத்தாலும் அரசு பணி நிரந்தரமான வருமானம் என்கிற பெருமையில் ஒப்பந்த அடிப்படையிலேயே பெரும்பான்மையோர் காலகாலமாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களைப் படிப்படியாகவேனும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஆசிரியர் பணியில் தொகுப்பூதியத்தை முற்றாக ஒழித்த வரலாறு திமுக அரசுக்கு மட்டுமே உள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபடும் ஊழியர்களை நிதி நிலையை காரணம் காட்டி வஞ்சித்தது பழைய காலமாக முடியட்டும்.

அத்தியாவசிய பணியாளர்களுக்கே  சலுகையும் பாதுகாப்பும் அவசியம்:
--------------------------------------------------------
செவிலியர்கள் 10ஏ1 சர்வீஸில் பணியமர்த்தப்படுவதால் மற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்  செவிலியர்களுக்குக் கிடைப்பதில்லை. அத்தியாவசிய பணி பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கும் விடுமுறை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

சில வேளைகளில் நோயாளிகளுடன் வரும் சிலர் தங்களின் சுயவிளம்பரத்துக்காக செல்போனில் வீடியோ எடுப்பதும், கண்ணியமற்ற வகையில் நடந்து கொள்வதும், வசைபாடுவதுமாக நடந்துகொள்கின்றனர். இவர்களிடமிருந்து காக்கும் வகையில் செவிலியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து ஆணையிட வேண்டும்.

தனிமைப்படுத்துதல் அவசர அவசியம்:
------------------------------------------------------------
கொரோனா முதல் அலையின் போது ஏழு நாட்கள் பணி செய்தால் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான விடுமுறையாக அளிக்கப்பட்டது. அது இரண்டாம் அலையில் மூன்று நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா சிறப்பு வார்டில் தன் பாதுகாப்பு உடையை (PPKit) இறுக்கமுடன் நாள் முழுவதும் அணிந்து கொண்டு பணிபுரியும் அழுத்தத்தில் இருந்து மீளவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் குழந்தைகளிடமும் சமூக இடைவெளி பேண வேண்டியதன் நலன் கருதியும் ஒரு வார தனிமைப்படுத்தல் விடுமுறை அவர்களுக்கு அவசியமாகிறது. அதைக் கனிவுடன் அரசு பரிசீலிக்க வேண்டும்.

பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ள இந்த நேரத்தில் இது சாத்தியமில்லாத ஒன்றாகக் கருதலாம். ஆனால் அத்தகைய இடைவெளி கொடுக்கப்படாவிட்டால் அது சமூக நலத்துக்கு எதிராகவே முடியும் என்பதை எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

விடுமுறை அளிப்பதில் கரிசனம் தேவை:
-----------------------------------------------------------
பொதுவாகவே மருத்துவ பணியாளர்களின் விடுமுறை நாட்களை அதிகரித்து வழங்க வேண்டும். ஆறு நாட்கள் பணி செய்தால் ஒரு நாள் விடுப்பு தற்போது உள்ளது. இது வாரத்திற்கு இரண்டு நாளாகவோ அல்லது மாதத்திற்குக் குறைந்தபட்சம் 6 வார விடுமுறை நாட்கள் என்றோ மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றினால் அதற்கு ஈடு செய்யும் வகையில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்வது வழக்கம். இது CoL (Compensatory Leave) எனப்படும் இழப்பீட்டு விடுமுறை ஆகும். வார விடுமுறை கிடைக்கும் நாள் அரசு விடுமுறையாக இருந்தால் அந்த அரசு விடுமுறை பின்னர் CoL ஆகக் கொடுப்பதில்லை.

சில மருத்துவமனைகளில் தொடர்ந்தாற்போல் 2 தற்செயல் விடுப்பைக்கூட வழங்குவதில்லை. CL மற்றும் CoL சேர்த்து 4 நாட்கள் வழங்கினால் ஒரு வாரவிடுமுறைநாள் துண்டிக்கப்படுகிறது. இவையெல்லாம் முறையான அரசு விதிமுறைகளின்படிதான்  நடைபெறுகிறதா என்கிற ஐயமும் எழுகிறது.

இரவுப்பணியின்போது தொடர்ந்து 14 மணிநேரம் பணிபுரிகின்றனர் என்பதையும், மற்ற ஊழியர்கள் சனி ஞாயிறு விடுமுறை துய்ப்பதைப்போல குறிப்பிட்ட வார நாட்களில் இவர்களுக்கு விடுமுறை இல்லை என்பதையும், பணிப்பளுவைக் கருத்தில் கொண்டும்
செவிலியர்களின் விடுப்பு விஷயத்தில் மனிதநேயத்துடனும் நெகிழ்வுத் தன்மையுடனும் உரிய சரியான வழிகாட்டுதல்கள் கூடுதல் விடுப்புச் சலுகைகளுடன் சீரமைக்கப்பட வேண்டும்.

பணியிட மாறுதலும் பதவி உயர்வும்:
-----------------------------------------------------------
ஆண்டுதோறும் மற்ற பணியாளர்களுக்கு  நடப்பதைப் போலவே செவிலியர்களுக்கும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆனால் தேவையான  பெரும்பான்மையான இடங்கள் கலந்தாய்வில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டு குறைவான இடங்கள் மட்டுமே காட்டப்படுவது கடந்த காலங்களில் வழக்கமாக இருந்தது. இதனால் கலந்தாய்வால் மிகக்குறைவான நபர்கள் மட்டுமே பயன்பெற்றனர். அந்த நிலைமை மறுபடியும் தொடராத வண்ணம் சீரமைக்கப்பட வேண்டும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் மூன்று கட்ட பதவி உயர்வானது மத்திய அரசு செவிலியர்களுக்கு வழங்குவதைப் போன்று ஐந்து கட்ட பதவி உயர்வாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் இதுநாள் வரை கால தாமதப்படுத்தப்பட்டு வரும் செவிலியர்களுக்கான பதவி பெயர் மாற்ற அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பணிப்பளு அழுத்தமின்றி மனநிறைவுடன் நிம்மதியாகப் பணியாற்றினால் தான் அவர்கள் மூலம்  பொதுமக்களுக்குக் கிடைக்கும் சேவையும் சிறப்பானதாகக் கிடைக்கும். ஆகவே  செவிலியர்களின் பணிநலன் சார்ந்த எந்த ஒரு நல்ல நடவடிக்கையும் மறைமுகமாக பொதுச் சமூகத்திற்கு ஆற்றிய சீரிய பணியாகவே நினைவுகூரப்படும்.

-மாணிக்க முனிராஜ்
manickamuniraj@gmail.com

மக்சீம் கார்க்கியின் "தாய்" நூல் வாசிப்பும் - பகிர்வும்





"தாய்" நூல் வாசிப்பும் - பகிர்வும்

நாடு நகர எல்லை கடந்து,  சமூக மத இன கலாச்சார மொழி பேதங்கள் கடந்து, நூற்றாண்டு காலம் கடந்து மக்களால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்படும் நூல்கள் சிலவற்றுள் மக்சீம் கார்க்கியின் தாய் நாவலும் ஒன்று.

ஒரு சமூகம் சோசலிச சமூகமாக  மாறுவதன் பின்னணியில் எத்தனை எத்தனை மக்களின் வலியும் வேதனையும் உழைப்பும் பின்னிக் கிடக்கின்றன. அரசு நிர்வாகம் காவல் நீதி போன்ற அனைத்தும் வர்க்க நலனைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக எவ்வாறெல்லாம் செயல்படுகின்றன என்பதைப் புரட்சிக்கு முந்தைய ருஷ்யாவின் காட்சிகளால் மகோன்னதமாக படம்பிடித்துக் காட்டுகிறது இந்தத் தாய் இலக்கியம். இதை மிகச்சிறப்பாக, தெள்ளியதாய், செம்மாந்த முறையில் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் தொ.மு.சி.ரகுநாதன்.

'புகையும் எண்ணெய் அழுக்கும் நிறைந்த காற்றில், தொழிலாளர் குடியிருப்புக்கு மேல், நாள்தோறும் அந்த ஆலைச்சங்கு அலறிக் கூச்சலிடும். வேலையால் இழந்த சக்தியைத் தூக்கத்தால் மீண்டும் பெறாத தொழிலாளர்கள், ஆலைச்சங்கின் அழைப்புக்குப் பணிந்து, அழுது வடியும் வீடுகளிலிருந்து கடுகடுத்த முகங்களுடன் அடித்து மோதிக்கொண்டு வெளியே ஓடி கலைபட்ட கரப்பான் பூச்சிகளைப் போல தெருக்களில் மொய்ப்பார்கள்.' என்று தொடங்குவது முதலாக ஒவ்வொரு கட்டத்திலும் காட்சிகளை வர்ணிக்கும் பாங்கும், கதை நகர்வின் ஊடாக வெளிப்படும் வார்த்தைக் கோர்வைகளும், உரையாடலின் கருத்து வளமும்,  மார்க்ஸிய கொள்கைச் செறிவும் இது ஏன் உலகத்தர இலக்கியமாக விளங்குகிறது என்பதற்கு கட்டியங் கூறுகின்றன.

சினிமாக்களில் பார்ப்பதைப் போல தனிமனித சாகசங்களால் மலர்வதல்ல சோசலிசம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடவடிக்கைகளில் இருந்தும் பெறும்  அனுபவங்களின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்திற்குத் தொடர்ந்து கற்பிப்பதன் வழியாகவும் கற்பதன் வழியாகவும் மலர்வது சோசலிசம். படிக்காத பெண்ணாக, குடிகாரத் தொழிலாளியின் மனைவியாகக் கதையில் அறிமுகமாகும் பெலகேயா நீலவ்னா, அப்படி கற்பதன் வழியாக, கற்பிப்பதன் வழியாகத்தான் பின்னாளில் பத்திரிகைப் பிரசுரங்களை விநியோகிக்கும் புரட்சித் தாயாகிறாள்.

காதலும் வீரமும்தான் எப்போதும்  இலக்கியங்களின் அடிப்படைப் பேசுபொருள். கதைமாந்தர்களாக எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் பொதுவாக இலக்கியங்களின் கதாநாயன் ஆணாக இருப்பதே பெரும்பான்மை. இவ்வாறான இலக்கியத்தின் வழக்கமான வரம்புகளை மீறி செம்மாந்து நிற்கிறாள் தாய். தெளிந்த நீரோடையைப் போல தன் வாழ்வின் லட்சியங்களை நோக்கி, எவ்வித இடைச் சலனமும் இன்றி நடைபோடும் தாயின் மகன் பாவெல் விலாசவ், தான் கொண்ட கொள்கையையே காதலிப்பதும், அதற்காக உயிரையும் துச்சமென எண்ணிப் போராடும் வீரமும் வழக்கமான இலக்கியங்களில் காணக் கிடைக்காத கூறுகள். இத்தகைய காதலும் வீரமும்தான் புரட்சி இலக்கியத்துக்கான, புரட்சிப் பாதைக்கான உலகளாவிய இலக்கணம் என்பதாக இவ்விலக்கியம் நமக்கு  வகுத்தளித்திருக்கிறது.

மார்க்ஸியப் பாதையைத் தேர்வு செய்து பணியாற்றுபவர்கள் எந்த அளவிற்கு குடும்பம், குழந்தை போன்ற சொந்த சுகங்களைத் தவிர்த்து பொதுநலம் கருதி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக உள்ளது தாயுடனான நிகலாய் இவானவிச்சின் ஒரு உரையாடல். நிகலாய் சொல்கிறான், "குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது - எப்போதுமே குறைத்துவிடுகிறது! குழந்தைகள், குடும்பத்தை பட்டினி கிடக்காமல் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம், போதாமை. ஒரு புரட்சிக்காரன் என்றென்றும் தனது சக்தியை வளர்த்துக் கொண்டே போக வேண்டும் அப்போதுதான் அவனது நடவடிக்கைகளும் விரிவு பெறும் இன்றைய கால நிலைக்கு அது அத்தியாவசியம். நாம் தான் மற்ற எல்லோரையும் விட முன்னணியில் செல்ல வேண்டும் ஏனெனில் பழைய உலகத்தை அழித்து புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணிக்கு சரித்திரம் தேர்ந்தெடுத்துள்ள சேவகர்கள், தொழிலாளர்களாகிய நாமே தான்.  நாம் கொஞ்சம் பின் தங்கினால், சோர்வுக்கு ஆளானால் அல்லது வேறு ஏதாவது சில்லரை வெற்றியிலே மனம் செலுத்தினால், ஒரு பெரும் தவறைச் செய்யும் குற்றத்துக்கு, நமது இயக்கத்தையே காட்டிக் கொடுப்பது போன்ற மாபெரும் குற்றத்துக்கு நாம் ஆளாகி விடுகிறோம்..." இவ்வாறான எண்ணிறந்த உரையாடல்கள் வழியாக புத்துலகு படைப்பதற்கான திசைகாட்டியாக உள்ளது இந்த நூல்.

"வருத்தப்படாதே! அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் இல்லையா? போனால் போகட்டும்! அது ஒன்றும் வெட்கப்படுவதற்குரிய விஷயமில்லை. முன்னேல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களை சிறையில் தள்ளினார்கள். இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள்..."  என்று இன்றைக்கும் பொருந்துகிற யதார்த்தம் பேசும் மரியா கோர்சுனவா, ஒடுக்க ஒடுக்க  வளர்ந்து வரும் தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பின்வருமாறு உரைக்கிறாள்.

"இந்த முதலாளிகள் இருக்கிறார்களே அவர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? ஒரு மனிதனின் காலில் ஓங்கி அடித்து விட்டால் அவன் ஓடாமல் நின்று விடுவான் என்று பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் 10 பேரை அடித்தால் 100 பேர் முறைத்துக்கொள்கிறார்கள்"

பாவெல் சொல்கிறான், "நமது முதுகிலே குதிரையேறிக் கொண்டிருப்பவர்களுக்கு நமது கண்களைத் திரையிட்டு மூடிக் கட்டிவிட்டவர்களுக்கு நாம் எல்லாவற்றையும் பார்க்கவே செய்கிறோம் என்பதை எடுத்துக்காட்டத்தான் வேண்டும். நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல.  வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கௌரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம். நம்மை நரக வாழ்வுக்கு உட்படுத்தி நம்மை ஏய்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை விட சிறந்த அறிவாளிகள் என்று தம்மைக் காட்டிக்கொள்ளும் நமது எதிரிகளுக்கு நாம் அவர்களுக்குச் சமதையான அறிவாளிகள், ஏன் அவர்களை விடச் சிறந்த அறிவாளிகள் என்பதை காட்டித்தான் ஆகவேண்டும்." தமிழ் நிலத்தின் ஆரிய - திராவிட அரசியல் பண்பாட்டுப் போராட்டத்திற்கு எதிர்வினையாற்றியதைப் போலல்லவா உள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளையும், அடக்கு முறைகளையும், உருட்டல் மிரட்டல்களையும் பொருட்படுத்தாமல், 'எண்ணித் துணிந்த கருமமென' மே தின செங்கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்தும் பாவெல், தன் நண்பர்கள் அந்திரேய், நிகலாய் வெசாவ்ஷிகோவ், பியோதர் மாசின், இகோர் உள்ளிட்டவர்களுடன் கைது செய்யப்படுகிறான். அப்போது,  'சிப்பாய்களுக்கு மத்தியிலிருந்து பாவெலின் தெளிவான குரல் ஒலித்தது;  "வருகிறேன் அம்மா! போய் வருகிறேன். அன்பே..."  தாயின் மனதில் இரண்டு எண்ணங்கள் பளிச்சிட்டன.  "அவன் உயிரோடு இருக்கிறான்! அவன் என்னை நினைவு கூர்ந்தான்!".' தன் மகன் துப்பாக்கி முனையில் கடுமையான முறையில் கைது செய்யப்படும்போகூட, அவன் உயிரோடிருப்பது ஒன்று போதும் என்று கருதும் தாயின் உள்ளம் நெகிழ்ச்சியுடன் நினைவுகூரத்தக்கதாக உள்ளது.

கடவுள் இல்லை என்று ரீபின் பேசும் போது, ".... ....கடவுள் தன் உருவம் போலவே மனிதனையும் படைத்தான் என்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம்? கடவுள் மனிதனைப்போல் இருக்கிறார். மனிதன் கடவுளைப்போல் இருக்கிறார் என்பதுதானே. ஆனால், இன்றோ நாம் கடவுள் மாதிரி இல்லை, காட்டு மிருகங்கள் மாதிரி இருக்கிறோம். தேவாலயத்தில் பூச்சாண்டிதானம்மா இருக்கிறது..... ...." என்று தாய் பெலகேயாவைப் பார்த்துக் கூறுகிறான்.  அப்போது மிகுந்த வருத்தமுற்ற தாய் அந்த இடத்தில் அமரவே விரும்பாமல் அருவருப்போடு வெளியேறுகிறாள். "மதத்துரோகி! குழப்பவாதி! இவன் ஏன் இங்கு வந்து தொலைந்தான்?" என தனக்குள் நினைத்துக் கொள்கிறாள். அப்போதும் ரீபின், "அந்தப் புனிதமான இடத்தைக் காலியாக விடக்கூடாது. மனித இதயத்தில் கடவுள் குடியிருக்கும் இடம் ஒரு வேதனை இல்லம். அங்கிருந்து அவரைப் பிடுங்கியெறிந்தால் அந்த இடத்தில் படுகாயம் ஏற்படும்.  எனவே அவ்வில்லத்தில் ஒரு நம்பிக்கையை, மனித குலத்தின் நண்பனான ஒரு புதிய கடவுளைப் படைக்க வேண்டும்." என்கிறான்.

இவ்வாறு தொடக்கத்தில் மிகுந்த கடவுள் நம்பிக்கையுடன் இருந்த தாய் பெலகேயா,   பின்னாளில் லுத்மீலாவுடன் பேசும் போது சொல்கிறாள், "மக்களுக்கு ஒரு புதிய கடவுளே பிறந்து விட்டது போல் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் - எல்லாம், எல்லோருக்காகவும் - ஒவ்வொன்றும்! இப்படித்தான் நான் உங்களைப் புரிந்து கொள்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் அனைவரும் தோழர்கள்; நீங்கள் அனைவரும் அன்பர்கள்; நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள்!" தொடர்ந்து மக்கள் பணியாற்றியபின்பு கடவுள் குறித்த தாயின் புரிதல் முற்றிலும்  மாறுபடுகிறது. ரீபின் சொன்னதற்கொப்ப, அவள் கடவுளின் இடத்தில் புதிய கடவுளாக தோழர்களை வைத்துப் பார்ப்பதை எண்ணத்தில் ஏற்பட்ட புரட்சியாகவே பார்க்க வேண்டும்.

தமிழ்ப் படங்களைப் போலவே முதல் பாகத்தைக் காட்டிலும் விறுவிறுப்பாகச் செல்லும் இரண்டாம் பாகத்தில் முஜிக் என அறியப்படும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு கதைக்களமாக உள்ளது. ரீபின் கைது செய்யப்படும்போது, "போய் வருகிறேன். நல்லவர்களே!...... உண்மையை நாடுங்கள்! அதை பேணிப் பாதுகாருங்கள். உங்களிடம் தூய்மையான பேச்சுப் பேசும் மனிதனை நம்புங்கள். சத்தியத்தைக் காப்பதற்காக போராட தயங்காதீர்கள்!" என்று பொது மக்களைப் பார்த்துக் அறைகூவல் விடுப்பது நெஞ்சம் நெகிழ்வதாக உள்ளது.

விசாரனைக்காக நீதி அரங்கத்தில் நிறுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கேட்கும்போது, "இங்கு கைதிகளும் இல்லை; நீதிபதிகளும் இல்லை. ... பிடிபட்டவர்களும், பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்" எனத் தொடங்குகிறான் பாவெல். எவ்வளவு பெரிய பேருண்மை, எவ்வளவு மனோதிடத்துடன் வெளிவருகிறது!

பிரதம நீதிபதியைப் பார்த்து மேலும் பாவெல் பேசுகிறான், "நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனி நபர் சொத்துரிமைக்கு - சொத்துரிமையின் பேரால் .... .... தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும் சமுதாய அமைப்புக்கு - நாங்கள் எதிரிகள். .... ....தான் செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக மனிதப் பிறவியை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணும் சமுதாயத்தை நாங்கள் மனித தன்மையற்றதாக, எங்களது நல உரிமைகளின் எதிரியாகக் கருதுகிறோம். .... ....சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும் சகலவிதமான சாதனங்களையும் நாங்கள் எதிர்த்துப் போராட விரும்புகிறோம். எதிர்த்துப் போராடவே செய்வோம். நாங்கள் தொழிலாளர்கள். சிறு குழந்தைகளின் விளையாட்டு கருவிகளிலிருந்து பிரம்மாண்டமான இ யந்திர சாதனங்கள் வரை சகலவற்றையும் எங்கள் உழைப்பின் மூலமே நாங்கள் உலகத்துக்குப் படைத்துக் கொடுக்கிறோம்.  ஆனால் எங்களது மனிதகௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமையைக் கூட பறிகொடுத்தவர்களும் நாங்கள் தான். .... .... எங்களது கோஷங்கள் மிகவும் தெளிவானவை. 'தனிச்சொத்துரிமை ஒழிக!' 'உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில்!' 'அதிகாரம் அனைத்தும் மக்களிடம்!' 'உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை!' இவைதான் எங்கள் கோஷங்கள். இவற்றிலிருந்து நாங்கள் வெறும் கலகக்காரர்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம்!"

".... .... .... .... நீங்கள் அழித்துச் சுடுகாடாக்கிய இந்த உலகத்தை, சோசலிஷம் ஒரு மகோன்னதமான மாசக்தியாக வளர்ந்து உருவாகி வளப்படுத்தும். நிச்சயம் இது நிறைவேறத்தான் போகிறது!"

விஞ்ஞான சோஷலிஸம் என்பது அடிப்படையில் ஒரு அறிவியல் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சோவியத் யூனியனாக உழைக்கும் வர்க்கத்துக்கான ஒரு சமதர்ம சாம்ராஜ்யத்தை அமைத்து விஞ்ஞான ரீதியான ஒரு வெற்றியைப் பெற்று நாம் கொண்டாடினாலும், "முடைநாற்றம் எடுத்து நாறும் இன்றைய கேவல வாழ்வுக்கும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மனித குலத்தின் சகோதரத்துவ சாம்ராஜ்யத்துக்கும் இடையே நாம் ஒரு பாலம் கட்டியாக வேண்டும். தோழர்களே! அதுதான் இன்று நம்முன் நிற்கும் வேலை." என்று அந்திரேய் நஹோத்கா சொன்னது இன்றைக்கும் அனைத்து தேச இடதுசாரிகளுக்கும் விடுக்கும் அறைகூவலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மனித வாழ்வின் நீடித்த துன்பங்களுக்கும், அவற்றிற்கான காரணங்கள் இவைதான் என அறியாமல் இருப்பதற்கும் காரணங்களை விளக்கி, அவற்றைப் போராட்டத்தின் வழியாக, சீரிய உழைப்பின் வழியாக மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை நாடு தோறும் விதைத்துச் செல்கிறாள் இந்தத் தாய். அந்த விதைகள் சில நிலங்களில் வீரியமாக விழுந்து விருட்சமாக வளர்ந்துள்ளன. வளர்ந்தும் மாறியுள்ளன. மாறியும் சில நிலங்களில் சிவந்தும்,  பச்சைப் பசேல் எனவும், சில நிலங்களில் மஞ்சளாகவும், அடர் பச்சை நிறத்திலும், சில நிலங்களில் நீல நிறத்திலும், கருப்பு நிறத்திலுமாக வண்ணங்கள் மாறி மாறி வளர்ந்தாலும் விதைகள் விழுந்தவண்ணமாகவேதான் இருக்கின்றன. விருட்சங்களும் வளர்ந்தவண்ணமாகவேதான் இருக்கின்றன.

- மாணிக்க முனிராஜ்
manickamuniraj@gmail.com

புத்தகத்தின் பெயர்: தாய்
ஆசிரியர்: மக்சீம் கார்க்சி
தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஏழாம் பதிப்பு: ஆகஸ்டு, 2016
பக்கங்கள்: 550
விலை: ₹350

அறிவியல் தேசம் நூல் வாசிப்பும் - பகிர்வும்

 



அறிவியல் தேசம்
நூல் வாசிப்பும் - பகிர்வும்

ஒரு நாட்டின் பெருமை என்பது அதன் செழித்திருக்கும் இயற்கை வளத்தையும், தொழில் வளத்தையும், அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும், தொடர்ந்து தன்னை வளர்த்துக்கொள்ளும் மனிதவளத்தையும், இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் திறம்படைத்த அரசாங்கத்தையும் பொறுத்தது.

இந்தப் பெருமை அச்சு அசலாக நமது இந்திய தேசத்திற்குப் பொருந்தும் என்றாலும், காலங்காலமாக இந்திய தேசத்தின் இப்படிப்பட்ட அறிவார்ந்த முகத்தைத் திரித்து இது ஆன்மீக தேசம் என்பது போன்ற ஒரு போலி முகமூடியை வலிந்து உருவாக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இத்தகைய முயற்சியில் ஈடுபடுவோரிடமே தற்போது ஆட்சியும் அதிகாரமும் குவிக்கப்பட்டிருப்பதன் விளைவு இது ஆன்மீகதேசம் என்பதை, குறிப்பாக இந்துக்களின் தேசம் என்பதை நிர்மாணிப்பதிலேயே முன் சொன்ன அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் தமிழின் முன்னணி அறிவியல் எழுத்தாளரும், சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான ஆசிரியர் ஆயிஷா நடராசன் என்கிற வில்லிலிருந்து புறப்பட்டிருக்கும் "அறிவியல் தேசம் - ஓர் இந்திய அறிவியல் பயணம்" என்கிற அம்பானது இந்திய தேசத்தின் முகத்தின் மீது வலிந்து பூணப்பட்டு வரும் ஆண்மீகதேசம் என்கிற போலி முகமூடியைக் குத்திக் கிழித்திருக்கிறது.

பாரம்பரியச் சின்னங்களாக உள்ள கோவில்களும், பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். மத வழிபாட்டு சுதந்திரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய அடிப்படை உரிமை. அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.

ஆனால் இந்திய தேசத்தின் அடையாளமே ஆன்மீகம்தான் என்கிற வகையில் கட்டமைக்கப்பதற்காக காயத்திரி மந்திரம் கேட்டால் கொரோனா குணமாகிவிடும், செல்போன் கதிர்வீச்சை (அது கதிர்வீச்சே அல்லாதபோதும்) மாட்டுச்சாண வட்டை தடுத்துவிடும், மாட்டு மூத்திரமே சர்வரோக நிவாரணி என்பவை போன்ற எண்ணற்ற மூடத்தனங்களை கட்டவிழ்த்து விடுவதும் சகிக்கமுடியாத செயல்களாக உள்ளன.

அறிவியல் தேசம் என்கிற புத்தகத்தில் ஆன்மீகப் போர்வையில் நடைபெறும் மூடத்தனங்களுக்கு எதிராக விளக்கங்கள் கொடுத்து எந்த இடத்திலும் கருத்தாடாவில்லை. மாறாக, இந்தியாவின் நீள அகலங்களில் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள ஆக்கங்களை, நிறுவனங்களை, தொழில்களை, விஞ்ஞானிகளை ஒரு வழித்துணைவன் போல விவரிப்பதன் வழியாக அறிவியல்தான் இந்திய தேசத்தின் அடையாளம் என்கிற பேருண்மையை நிறுவுகிறார். அதாவது தவறானதைச் சுட்டிக்காட்டாமல், சரியானதின் மீது மட்டும் கவனத்தைக் குவியச் செய்து தவறாக சித்தரிக்கப்பட்டுவரும் பிம்பத்தை உடைத்திருக்கிறார்.

அறிவியல் தேசம் என்ற புத்தகத்தையே டிக்கெட்டாகக் கொண்டு அறிவியல் எக்ஸ்பிரஸில்  பயணப்படும் குழந்தைகளுக்கு 15 அத்தியாயங்களிலும் குறையாத அறிவுச் செல்வமும், அறிவியல் அனுபவமும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. சாகிபு, சுல்தான், சிந்து என்ற முதல் மூன்று ரயில் எஞ்சின்கள், கீழடி, மொஹஞ்சதாரோ, ஜந்தர் மந்தர், ஸ்புட்னிக், ஆரியப்பட்டா, சந்திராயன் என்று அடுத்தடுத்த சுவாரசியங்களுக்குக் குறைவில்லாமல் எக்ஸ்பிரஸ் செல்கிறது.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டா என்பதை அறிந்த பலருக்கு முதல் ராக்கெட் நைக் அப்பாச்சே என்பது தெரிய வாய்ப்பு குறைவே. மெட்டல் டிடெக்டரை ரயில்வே ஸ்டேஷன்களில் சர்வசாதாரணமாகக் கடந்து செல்லும் நாம் அது எத்தனை ஆபத்துகளைத் தடுத்து, எத்தனை உயர்களைக் காத்திருக்கிறது என்பதை எத்தனை முறை சிந்தித்திருப்போம்?

விஜயந்தா டாங்கி, வருணாஸ்திரா கடற்கணை, திவ்யதிருஷ்டி ரேடார், பிருத்வி, நாக், அக்னி ஏவுகனைகள், பிஎஸ்எல்வி என்று இந்தியாவின் அறிவியல் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

உலகிலேயே இந்தியா பருத்தி ஆடை உற்பத்தியில் இரண்டாம் இடம். நவீன லேசர் ஆய்வகம் இரண்டு மட்டுமே உலகில் உள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று. காமா கதிர்வீச்சு ஆய்வில் இந்தியாவும் ஈடுபடுகிறது. அனல், நீர், வளி, ஒளி, அணு என்று 5 வகையிலும் மின் உற்பத்தியைச் செய்யக்கூடிய உலகின் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்னும் ஏராளமான புகழ் இந்திய அறிவியல் தேசத்திற்கு உள்ளதை எண்ணி எண்ணி மெச்சத்தகுந்த வகையில் நமது சிறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

விக்ரம் சாராபாய், மேக்நாத் சாகா, பீர்பால் சகானி, பி.சி.ரே, டி.என்.வாடியா, ஹோமி பாபா, சலீம் அலி, வைனு பாப்பு, விஸ்வேஸ்வரையா, ஜிடி நாயுடு, சுந்தர்லால் பகுகுணா, யஷ்பால், நம்மாழ்வார் போன்ற எண்ணற்ற அறிவியல் மற்றும் சமூக அறிஞர்களை போகிற போக்கில் அவர்களின் சாதனைக் குறிப்புகளுடன் அறிவியல் தேசத்துக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறார். "ரயிலை கார்டுகள் காப்பது போல இந்த தேசத்தைத் தங்கள் அறிவால் காப்பவர்கள் இவர்கள்", என்கிறார் ஆசிரியர்.

இந்திய ரூபாய் நோட்டுகளையும், காசுகளையும் அச்சடிக்கும் அறிவியல் விவரணை மதிப்புமிகுந்தது. எங்கள் சிட்டுகள் மைய குழந்தைகளிடம் இந்த காசுகளின் பிரிவுகளை எடுத்துக் கூறியதும் அவர்கள் மும்பையின் டைமண்ட், ஹைதராபாத்த்தின் 5ஸ்டார் வடிவ, நொய்டாவின் கருப்புப் புள்ளி உள்ள மற்றும்  கொல்கத்தாவின் எதுவுமற்ற காசுகளைப் பிரித்தெடுப்பதை ஒரு விளையாட்டாகவே மாற்றி நாணயங்களை சேகரிக்கத் தொடங்கிவிட்டனர்.

கற்றது கையளவு என்பதற்கொப்ப, ஜவ்வாது மலையில் உள்ள காவலூர், அரக்கோணம் ராஜாலி, ராணிப்பேட்டை பெல் போன்று இதில் சொல்லப்படாத இந்தியாவின் அறிவியல் முகங்களை அறிய இன்னும் இன்னும் பல முறை அறிவியல் எக்ஸ்பிரஸில் பயணிக்க வேண்டும்.

மேலும் மேலும் புத்தகங்களை வாசிக்கத் தூண்டும் வகையில் எழுதுவதும், அதிலும் குழந்தைகளுக்காக பெரிய பெரிய விஷயங்களை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுவதும், ஒரு நாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் கதைப்பாங்கில் கட்டுரைகளை எழுதுவதும் ஆயிஷா நடராசனின் சீரிய பண்பு. இப்புத்தகமும் அதற்கு எவ்வகையிலும் குறைவில்லாத  வகையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடிக்கும்படியான சுவாரசியமான புத்தகமாக உள்ளது.

புத்தகத்தின் பெயர்: அறிவியல் தேசம்
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்
பதிப்பகம்: அறிவியல் வெளியீடு
முதல் பதிப்பு: பிப்.2021
பக்கங்கள்: 128
விலை: ₹100

- மாணிக்க முனிராஜ்
manickamuniraj@gmail.com

101கேள்விகள் 100பதில்கள் - நூல் வாசிப்பும்- பகிர்வும்




ஒரு சிறந்த புத்தகத்தின் அடையாளம், அதை வாசித்து முடித்த பின்பு நமக்குள் இருக்கும் சில கேள்விகளுக்கு அது பதில் சொல்லி இருக்க வேண்டும் என்பதைவிட   பல்வேறு கேள்விகளை நமக்குள் அது கிளறிவிட்டிருக்க இருக்க வேண்டும் என்பதே. அதனை இந்தப் புத்தகம் சிறப்பாகச் செய்திருக்கிறது.


கொசுக்கள் தன்னை விட ஐந்து மடங்கு எடையுள்ள மழைத்துளியை உதிர்த்து விட்டுத் தப்பிச் செல்வது;

கடும் வறட்சியில் பூர்வகுடிகளுக்கு தேக்கி வைத்த தண்ணீரைத் தந்த உலகின் மிகப் பழமையான ஆனைப் புளியமரம் என்கிற பாவோபாப் மரம்;

'O' ரத்தவகையினரை கொசுக்கள் விரும்பிக் கடிப்பது;

மொரீஸியஸில் அழிந்து போன டோடோவும் கல்வரியாவும்; 

நம் முகம் கைகால்களின் தோல்களில் வாழும் டிமோடெக்ஸ் ஃபாலிகுளோரம்;

180° தலையை சுழற்றும் ஐந்து கண்கள் கொண்ட கும்பிடு பூச்சி;

ஆன்டனி கிளியோபாட்ராவுக்கு அளித்த முத்துபானம்;

சயாமிஸ் இரட்டையர்கள்;

ரஃபேஸியா அர்னால்டி எனும் உலகின் பெரிய பூ 

போன்ற ஏராளமான புதுப்புதுத் தகவல்களை காட்சிகளை நம் கண் முன்னே அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.


இவ்வளவு கேள்விகளுக்கும் பதில் சொல்கிற அதே நேரத்தில் அறிவியல் ஆக்கத்திற்கே மக்களின் சுயசார்புக்கே என்கிற அறிவியல் இயக்கத்தின் தாரக மந்திரத்தை ஒவ்வொரு பதிலிலும் கடைப் பிடித்திருக்கிறார் ஆசிரியர்.


காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டரால் வேலைக்காரத் தேனீக்கள் கூட்டில் சேராமல் போய்விட்டால் உலகம் என்னவாகும்? ஆறாவது சிற்றினப் போழிவு நிகழுமா? பரிணாமம் என்றால் என்ன? போன்ற கேள்விகள் மனிதம் சார்ந்த ஆழ்ந்த சிந்தனையை வாசிப்பவர்கள் மத்தியில் தூண்டிவிடுவன.  


சர்வதேச என்றோபி விதிகளின்படி ATP மூலக்கூறுகள் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு நகர்வதை நிறுத்திக் கொண்டால் அதற்கு பெயர் தான் மரணம் என்பதை விளக்க வந்த ஆசிரியர், "சமூக என்றோபி விதிகளின்படி செல்வமும் அதிக இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு செல்ல வேண்டும் தானே! என்றோபி விதிகள் செயல்படாததால் மனிதம் செத்து விட்டதோ?"  என்று அதனை மனிதத்தோடு பொருத்தி சமத்துவத்தை வலியுறுத்தும் போக்கு நின்று கவனிக்கத் தக்கது.


இன்றைய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆக்ஸிஜனுக்கு ஏற்பட்டுள்ள தேவையை, உலகில் அதிகமாக உள்ள ரூபிஸ்கா புரதத்தால் இயற்கையாக நமக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜனோடு ஒப்பிடும்போது மரம் நடவேண்டியதன் அவசியம் குறித்த அறிவியல் புரிகிறது.


ஆரியர்கள் யார்? எது தீட்டு? கதிர்வீச்சைத் தடுக்குமா மாட்டுச் சாணம்? இயற்கைத் தெரிவு இப்போதும் நடைபெறுகிறதா? போன்ற கேள்விகளில் நிகழ்கால அரசியல் ரீதியான மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் ரீதியான பதில்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


வரட்டுத்தனமாக தகவல்களை அடுக்கிக்கொண்டே செல்லாமல் சமூக சூழலியல் அரசியல் அக்கறையையும், சமத்துவத்தையும், மனிதநேயத்தையும் வலியுறுத்திச் செல்கிறார். பந்தி இலையில் உள்ள ஊறுகாய் போல பதில்கள்தோறும் அவற்றைத் தொட்டுச் செல்கிறார்.


எல்லாவற்றையும் விட நான் அதிகமாக நண்பர்களிடம் நகைச்சுவையாகப் பகிர்ந்து சிரித்தது குசு ஏன் நாறுகிறது என்கிற எட்டாவது கேள்விக்கான பதிலைத் தான். அம்மோனியாவும் ஹைட்ரஜன் சல்ஃபைடும் நமது வாழ்வில் எப்படி எல்லாம் விளையாடி வருகின்றன. 59% நைட்ரஜன், 21% ஹைட்ரஜன், 9% கார்பன்டைஆக்ஸைடு, 7% மீத்தேன், 4% ஆக்ஸிஜன் என்று அந்தப் பிரியற வாயுக் கலவையின் விகிதாச்சாரத்தைப் பட்டியலிட்டு, சராசரி அளவு 600 மிலி, வேகம் 10 அடி/விநாடி, வெப்பம் 98.6°C என்று ஆய்வு செய்து, பின்னால் வரும் போது பற்றவைத்தால் எரியும் என்பது வரையில் சொன்ன பேராசிரியர் இந்த ஆய்வைச் செய்தவர்கள் யார் என்ற தகவலை மட்டும் குட்டாக வெளிவிடவில்லை.


இந்தப் புத்தகத்தின் பெயரைச் சொன்னவுடன் பெரும்பான்மையான நண்பர்கள் கேட்ட முதல் கேள்வி அந்த 101வது கேள்விக்கு பதில் ஏன் இல்லை என்பதுதான். வழக்கமாக புத்தகத்தின் விலையைத் தான் கேட்பார்கள். ஆனால் புத்தகத்தின் தலைப்பே வாசகர்களை ஒரு கேள்வியைக் கேட்கவும், பதில் சொல்லப்படாத அந்த 101 ஆவது கேள்வி என்னவாக இருக்கும் என்ற ஆவலையும்  தூண்டி விட்டிருக்கிறது.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவரும் மதுரை கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவருமான  முனைவர் சு தினகரன் இந்தப் புத்தகத்தில்  100 கேள்விகளுக்கு பதில் சொல்லி அதன் வழியாக 1000 கேள்விகளை விதைத்திருக்கிறார். மேலும் மேலும் தேடிக் கற்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார். தேடலைத் தூண்டுவதை விட ஒரு புத்தகம் செய்யும் ஆகப்பெருஞ்செயல் என்னவாக இருந்து விட முடியும்?


புத்தகத்தின் பெயர்: 101கேள்விகள் 100 பதில்கள்

ஆசிரியர்: முனைவர் சு.தினகரன்

பதிப்பகம்: அறிவியல் வெளியீடு

பக்கங்கள்: 102

விலை: ₹80


- மாணிக்க முனிராஜ்


என் உயிரே விலை

காலைப் போதின் உன் இன்முகம் ஒன்று போதும் 

அந்நாளை நம்பிக்கையோடு நான் கடப்பதற்கு


நாற்காலி மேசை சகிதம் 

கோப்புகளில் ஒப்பமிடும் 

அரசு நிர்வாகப் பணியோ

நாலுகால் பாய்ச்சலில் 

மாத இலக்கை முடிக்க 

நாயாகவலையும் தனியார் நிறுவனப் பணியோ

வாய்க்காமல் நான் வணிகத்தை நோக்கி வந்தவனில்லை


வணிகமே என் புத்தியாகவும் 

எனை வளர்க்கும் சக்தியாகவும்

என் வாழ்வின் தொலைநோக்கு யுக்தியாகவும் 

என் நாடி நரம்புகளிலும் 

இண்டு இடுக்குகளிலும் 

உனைப் போலவே

நிலை கொண்டுள்ள

என் வாழ்வாசையின் 

ஆழ விழுதுகள்


வணிகப் பாதையில் 

புடம் போட்டு தடம் பதித்த 

ஆளுமைகளின் தழும்புகளை 

தினம்தினம் தேடிப் பார்க்கிறேன்.

உறவோடு வாங்கிய காயங்களின்

ஆறா வடுக்களை 

அவ்வப்போது தடவிப் பார்க்கிறேன்.


அன்பின் வழிப்பட்ட பாதையில்

எதிர்ப்படும் இன்னல்கள்

மரமுதிர்க்கும் இலை போன்று 

இயற்கையாய் உதிரும்.

வெறுப்பின்பாற்பட்ட பாதையில்

நகைப்புக்கான பகடியும்கூட

நன்கு திட்டமிடப்பட்ட

நயவஞ்சக சதியாகப் படும்.


நான் கற்பின் கரைகண்டவனல்ல

ஆனால்

கற்பின் கரை கடக்காதவன்.

நான் சொல்லில் சுகம் காட்டுபவனல்ல

ஆனால்

சொல்லிய சொல்லுக்காக 

என் உயிரையும் விலையாய்க் கொடுப்பவன்.


-மாணிக்க முனிராஜ்


உள் வலி மூட்டம்


அவசியமிலா தாமதங்கள்

அன்றாடம் நிகழ்ந்தாலும்

அணுவும் வினவல் கூடாது.


'காரணம் கூறுதல் ஆண்களுக்கும்

காரணம் கேட்டல் பெண்களுக்கும் அழகல்ல' என்பது ஒன்றே உன் தத்துவம்


கோவப்படுதலையும் கோவத்தில் சத்தமிடுதலையும்

சத்தத்தில் என் சங்கறுக்க சபதமிடுதலையும் முற்றுமுதலும் நான் பொறுத்தே ஆகவேண்டும்


எதிர்வினையாற்றுதல்

தேச துரோகம்

சாப்பிடக் கூப்பிடல்

சமூக விரோதம்


எத்தனை உதாசினங்கள்

எத்தனை அவமானங்கள்

எத்தனை கோபதாபங்கள்

எத்தனை தன்மானச் சீண்டல்களோடு

நான் சுணங்கிக் கிடந்தாலும் -உன்

ஒரே ஒரு தூண்டலுக்கு நான்

உடன் துலங்கிவிட வேண்டும்


துலங்காவிடில் நான் விளங்காதவள்

கணவன் இச்சைக்கு இணங்காதவள்


தேறலின் ஊட்டமும் 

பரத்தையர் நாட்டமும் வழக்கமில்லாமைதான் நீ எனக்களிக்கும் 

ஆகப் பெருங்கொடையென்றால்

உள் வலி மூட்டமும்

தற்கொலை நாட்டமும்

வழக்கமாக்கிக் கொண்டதுதான் உன் கொடைக்கு நானளிக்கும் விலை


- மாணிக்க முனிராஜ்

Friday, 28 May 2021

சமத்துவத் தண்ணீர்

யுகம் யுகமாய்த் தேக்கி வைத்த வரலாற்றை 

காலங்காலமாகக் கடத்தி வந்த வித்தை


ஆமீபா முதல் சமீபம் வரை முன்னோர்களின் அறிவும் அனுபவமும்

தொகைதொகையாய் சேகரமான 

காலப் பெருவெளியின் பெருந்தாழி


எண்ணிலா எண்ணங்கள் உட்கார்ந்துத் தேய்த்து  மொழுக்கடைந்து வழுக்கையான  திண்ணை


நல்லாரும் பொல்லாரும் 

உள்ளாரும் இல்லாரும்

வல்லாரும் எல்லாரும் - 

கல்லாராய் நில்லாராய் நகர்த்திய நிகரிலாத் தேர்


பள்ளத்தை நோக்கி மட்டுமல்ல

மேட்டை நோக்கியும் பாய்ந்து ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்தும் சமத்துவத் தண்ணீர்


சமூக ஊடகங்களில் களமாடுபவர்களின் கவனத்திற்கு...

சமூக ஊடகங்களில் களமாடுபவர்களின் கவனத்திற்கு...

- மாணிக்க முனிராஜ்

"அரசியல் ரீதியான பேச்சை விவாதத்தைத் தவிர்க்கவும்,

தேர்தல் வரை எவனுக்காகவோ நாம் சண்ட போட்டுக்கக் கூடாது" போன்ற வசனங்களைப் பேசி அரசியலிலிருந்து விலகி இருக்க வலியுறுத்தும் மேம்போக்குவாதிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக இன்றைக்கு பலர் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.


கருத்தியல் ரீதியான வாத எதிர்வாதங்கள் இன்று நேற்றல்ல, எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இனிமேலும் அது எப்போதும் இருக்கும் மற்றும் அது எப்போதும் தேவைதான். ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்க வாதிக்கும் இருபுறமும் கருத்து வளமும், சமூக அக்கறையும், சமூக பொருளாதார வரலாற்று அறிவியல் பார்வையும் அவசியம். 


இத்தகைய வளங்களில் பார்வைகளில் புரிதல்களில் குறைபாடு இருக்கும்போது, என்ன செய்வது என்ன பேசுவது என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது. அந்தத் தடுமாற்றம் ஏற்படுத்தும் ஆற்றாமை எப்படியாவது பொதுத் தளங்களில் வாதத்தில் நாம் வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியை ஏற்படுத்துகிறது. அந்த வெறியே அடுத்தகட்டமாகத் தனி மனிதத் தாக்குதலில் போய் முடிகிறது.


அதேநேரத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் பொது மனிதர்கள். அவர்கள் தனி மனிதர்கள் இல்லை என்கிற புரிதலும் இங்கு அவசியம். அவர்களைத் தோலுரித்துக் காட்டுகிற அவர்களின் அரசியலின் தன்மையை எடுத்துக்காட்டுகிற போக்கெல்லாம் தனிமனித தாக்குதலில் அடங்காது. அது வழியாகத்தான் அவர்களின் அரசியலை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நமது அரசியலின் திசை வழியைத் தேர்வு செய்ய இத்தகைய விவாதங்கள் மிகமிக அவசியமானவை ஆகின்றன.


ஆனால் அந்தப் பொது மனிதர்களுக்காகக் கொடுக்கும் முட்டு எந்த நிலையிலும் விவாதிக்கும் தனி மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே கூர் தீட்டிக் கொள்ளும் ஆப்பாக மாறிவிடக் கூடாது. இதனால் ஏற்படும் உறவுச் சிக்கலால் ஆகப் போவது என்ன? யாராவது யாரையாவது மாற்றிவிட முடிகிறதா என்ன? பெரும்பாலும் அவ்வாறு நிகழ்வதில்லை. 


மாறாக விவாதங்களும் கருத்து மோதல்களும் அவசியமாக நடக்க வேண்டும். அவை வலுவான கருத்தியல் தெளிவுடனும், ஆழமான தத்துவார்த்தப் புரிதலுடனும், அடுக்கடுக்கான சரியான தரவுகளுடனும், ஆக்கப்பூர்வமாகவும் கட்டுக்கோப்பாகவும், நிதானம் இழக்காமல் அறிவுப்பூர்வமாக நிகழ வேண்டும்.


எந்த ஆட்சியில் எந்தத் தவறு நடந்து இருந்தாலும் அந்தத் தவறு தவறுதான் என்கிற புரிதல் அனைவருக்கும் தேவையான ஒன்று. 


வெகு மக்களின் நலன்களுக்கு விரோதமாக நடக்கும் எந்தச் செயலையும் அது யார் செய்தாலும் அவர்களுக்காக முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து முட்டுக் கொடுக்கிறோமே அது எதனால் என்று சிந்தித்தாலே பாதிப் பிரச்சனை முடிந்துவிடும்.


ஆனால் அத்தகைய பொதுவான சிந்தனை இங்கு பொதுவாகவே பாதிக்கும் மேலானவர்களிடம் இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது. 


என்னுடைய கல்வியையும், சுகாதாரத்தையும், வேலைவாய்ப்பையும், என்னுடைய அமைதியான நலமான வாழ்வையும், என்னுடைய வளமான நிலத்தையும், நீரையும் எங்கோ இருந்து வருகிற ஒரு கூட்டம் பறிக்கிறது. என் மூதாதையர் காலங்காலமாக கட்டமைத்த அறிவுக் கருவூலத்தைத் தன்னுடையதுபோல கபட வேடம் போட்டு திரிக்கிறது. வடநாட்டோடு ஒப்பிடும்போது ஓரளவுக்காவது இங்குள்ள இணக்கமான உறவுகளை அது கெடுக்கிறது. அரும்பாடுபட்டு இங்கு உருவாக்கி நெறிப்படுத்திவைத்துள்ள சமூக நீதிக் கோட்பாட்டை அது தகர்க்கிறது. 


ஆனாலும் என்னுடைய மதத்திற்காகவும், என்னுடைய சாதிக்காகவும், அவற்றைக் தூக்கிப் பிடிக்கும் அல்லது அவற்றுக்கு சொம்பு தூக்கும் அரசியலுக்காகவும்தான் நான் குரல் கொடுப்பேன் என வரிந்துகட்டிக் கொண்டு நிற்கும் நபர்களிடம் முன் சொன்ன இழப்புகள் எவையும் காதில் விழுவதில்லை. அப்படியே இவை புரிந்தாலும் செலக்டிவ் அம்னீஷியா உள்ளவர்களைப்போல் இவற்றை அவர்கள் கண்டுகொள்வதில்லை. 


இந்த ஆட்டோ ஸ்டார்ட் ஆகாததற்கு பக்கத்து ஆட்டோவின் கண்ணாடி ஒழுங்காக இல்லாததுதான் என வரும் அஜித் படக் காமெடியைப் போல, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாதிய மத அமைப்புகள் வழியாக அவர்கள் கூட்டம் கூட்டமாக இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இதற்காகவே பயிற்சி எடுத்த நபர்கள் வழியாக பெரும்பாலும் மறைமுகமாகவும், சில போது நேரடியாகவும், வெறியேற்றவும், வெறியேற்றிக்கொள்ளவும் படிப்படியாகப் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.


மத ரீதியாகவோ சாதி ரீதியாகவோ பாழ் சிந்தனையால் பாதிக்கப்பட்டு இவ்வாறு பாகுபாட்டு உணர்வைப் பெறுவது சுலபம். மாறாக அவற்றை மாற்றிக்கொள்வது கடினம். சூது போலத்தான், பழகுவது சுலபம். மறப்பது கடினம். அதிலும் இத்தகைய பயிற்றுவிப்பு மிகத்தீவிரமடைந்துள்ள இன்றைய நாட்களில் அவற்றுக்கு எதிராகக் களமாடுவது எவ்வளவு சவாலானது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.


நம்முடன் பழகும், படிக்கும், வேலை செய்யும் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ தக்க சமயத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் நேரும் இத்தகைய விபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கிறோம் என்கிற கரிசன உணர்வுதான் நமக்கான முதல் தேவை. அவர்களுக்குள் புதிதாக செல்ல வாய்ப்புள்ளவர்களிடம் அறிவின்பாற்பட்ட புரிதலை அன்பாக ஏற்படுத்த முயற்சிப்பதுதான் அடுத்த முக்கிய செயல்.


நோயுற்றவர்களுக்கு மருந்து கொடுப்பது எப்படியோ அப்படித்தான் மெல்லமெல்ல மீட்க வேண்டும். இந்த நோயைப் பொறுத்தளவில் மருந்து கொடுப்பதைக் காட்டிலும் நோய் பாதிப்பு தென்படும் நபர்களுக்கு மருந்து கொடுப்பது முக்கியமாகக் கருதப்பட வேண்டும். எரிகிற புத்தகத்தில் எரியாத பக்கங்களைக் காப்பது அதிமுக்கியம் தானே.


அதேநேரத்தில் எதிர்ப்படும் எல்லாரிடமும் இவ்வாறு மோதிக்கொள்வது என்பது, மீன் மார்க்கெட்டுக்குப் போய் ஜாமீன் வாங்க முடியாமல் திரும்பியவர்களை முட்ட நினைத்து கம்பியில் முட்டிக்கொண்ட வடிவேலுவின் கதையாகவே போகும். கும்.

Wednesday, 13 January 2021

ரோஸ் - புத்தக மதிப்புரை



புத்தகத்தின் பெயர்: ரோஸ்

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

பக்கங்கள்: 64

விலை: ₹60


அவசர வாழ்க்கையின் அன்றாட நெருக்கடியில் எவ்வித அக்கறையும் இல்லாமல் ஒரு குழந்தையின் உள்ளம் எந்த அளவிற்கு அலட்சியப்படுத்தப்படுகிறது என்பதைத் தனது "ரோஸ்" என்கிற கதையின் மூலம் அழுத்தமாகப் பதிய வைக்கிறார் ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன்.


நிழல்கள் ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற சினிமா நடிகர்களின் பெயர்களை சிறுவயதில் கேள்விப்படும்போது ஒரு கிரக்கம் இருக்கும். பின்னாளில் ஜெயம் ரவி வந்தபின்பு தான் அந்தப் பெயர்களின் தேவையும் அழகும் புரிந்தது. இப்போக்கு சினிமா உலகில் அதிகம். ஆனால் எழுத்துலகில், தான் எழுதிய முதல் கதையான 'ஆயிஷா'-வின் பெயரையே தனது பெயரின் முன்னொட்டாக ஒட்டிக்கொண்ட ஆசிரியர் இரா.நடராசனைப் போல் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.


குழந்தைகளை மையப்படுத்தி எழுதும் இன்றைய எழுத்தாளுமைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான நடராசன் 2014-இல் தமது சிறுவர் இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்திய அகாடமி விருதைத் பெற்றவர்.


காலை தூங்கி எழுவதிலிருந்து அன்று இரவு தூங்காமல் அழுவது வரையிலான ஒருநாள் பொழுதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தேவா என்கிற குழந்தையின் எளிய ஆசையை நனவாக்க முடியாமல் போனது ஏன்? என்பதன் பாரத்தை வாசிப்பவர் மனதில் திருத்தமாக இறக்கி வைக்கிறது 'ரோஸ்'.


தேவாவின் வீட்டில் ஜன்னல் ஓரத்தில் ரோஜா செடி அழகாகப் பூத்திருக்கிறது. அதைக் கண்டு விட்டான் தேவா. ஆசையோடு அதைத் தொட்டுப்பார்க்க வேண்டும், பறிக்க வேண்டும் என்பது ஒன்று தான் அந்தக் குழந்தையின் அந்த நாளின் ஆசை. இந்தச் சின்ன ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவனுக்கு இடம் கொடுக்கவில்லை இந்த எந்திர உலகம்.


பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் தேவாவுக்கு அவன் வீட்டு ரோஜாவையே ஞாபகப்படுத்துகிறது. பேப்பர் கட்டிங் கலைஞர் வருகிறார். அவர் காகிதத்தில் ரோஜா எப்படி செய்வது என விளக்குகிறார். 


'லோட்டஸ்' பொயம் நடத்தும் இங்கிலீஷ் மிஸ், 

"....லவ் தான் பூக்களின் தோட்டத்துக்கு காவலாக இருந்தது. அது தாவரங்களின் கடவுளான ஃபுளோரா கிட்டவந்து ஒரு புது பூ வேணும்னு கேட்டது. ..... ரோஜா என்ன கலர்ல இருக்கும்?" என்று கேட்கிறார்.


"மிஸ்... மிஸ்... நான் சொல்றேன் மிஸ்.... எங்கள் வீட்டில் நிஜமாவே ரோஜா பூத்திருக்கு மிஸ்... நான் பாத்தேன் மிஸ்... ரெட் கலர் மிஸ்..." என்கிறான் தேவா.


"செடில ரோஸை பார்க்கிறது பெரிசில்ல.. ரோஸ்... ரோஸ்னு... எழுதிப் பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம... ஆர் ஓ எஸ் ஈ... ரோஸ் கரெக்ட்டா எழுதிப் பழகு.... புரியுதா.... உட்காரு..." என்று அந்த ரோஜாவை (தேவாவை) சூம்பிப் போகச் செய்கிறார் மிஸ்.


தமிழ் மிஸ், ரோஜாவை 'ரோசா' என அழைக்கச் சொல்கிறார். அது ஒரு வெளிநாட்டு செடி என்கிறார்.

பூக்கும், பூவா வகைத் தாவரங்களை விளக்க வரும் சயின்ஸ் மிஸ், தேவாவின் கேள்வியை அடக்க, "... அதெல்லாம் உனக்கு வேண்டாம்... புக்குல இருக்கறத படி.... போதும்...." என்கிறார்.


"ஆமா மிஸ்.... ரோஜா எதுக்கு பூக்குது..."

".... மிஸ்... மிஸ்....எங்கள் வீட்டில் நிஜமாவே ரோஜா பூத்திருக்கு மிஸ்... நான் பாத்தேன் மிஸ்..."

"கொஞ்சம் விட்டா.... ரொம்ப நான்சென்ஸா கேள்வி கேப்பீங்களே....எடு... புக்க... படி... ரோஸ் இஸ் எ பிளவரிங் பிளான்ட் ."


இதே போன்று பெரும்பாலான ஆசிரியர்களிடம் தேவா மொக்கை வாங்கினாலும் அவனது வாஞ்சையான வார்த்தைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. இறுதியாக திரும்பவும் வீடு சென்ற பின்பாக அவன் ரோஜாவைப் பார்க்கிறானா இல்லையா என்பதைக் கதையில் பார்த்துக்கொள்ளுங்கள்.


கால்களில் சக்கரம் கட்டாத குறையாக பொருளாதார காரணங்களுக்காக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர், சிலபஸ் முடிப்பதை மட்டுமே கல்வியின் ஆகச்சிறந்த பணியாக நினைத்து கடமையாற்றும் ஆசிரியர்கள், தன் வீட்டில் பூத்த ஒற்றை ரோஜாவின் அதிசயத்தை, அதன் அழகியலை ஸ்பரிசிக்கத் தவிக்கும் தேவா, அந்த ரோஜானுபவத்தை தங்களுக்குள்ளும் சாரமாக இறக்கிக் கொண்ட அவனது நண்பர்கள் என விறுவிறுவிறுவென ஓடுகிறது கதை.


குழந்தை உளவியலைப் புரிந்துகொள்ள முயலும் ஒவ்வொருவரும் உணர்ந்து படித்து, படித்து உணர வேண்டிய எளிய புத்தகம் 'ரோஸ்'.


- மாணிக்க முனிராஜ்

மார்க்கெட்டிங் மாயவலை - புத்தக மதிப்புரை

 

புத்தகத்தின் பெயர்: மார்க்கெட்டிங் மாயவலை

ஆசிரியர்: கார்த்திகேயன்

பதிப்பகம்: ரஞ்சிதா, 43, அங்குசாமி தெரு, மகாநகர், வண்டியூர், மதுரை - 20, 9036782332

பக்கங்கள்: 68

விலை: ₹120

"முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்" என்கிற இயற்பியல் நியதிக்கு ஏற்ப மார்க்கெட்டிங் மாயாஜாலங்களால் ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் கைப்பற்றும் கார்ப்பரேட் மயப்படுத்தப்பட்ட அரசியல் உலகை எதிர்கொள்ள ஒரே வழி, அதே மார்க்கெட்டிங் யுக்திகளைக் கைக்கொள்வது ஒன்றுதான் என்பதை அனைவருக்கும் குறிப்பாக இன்றைய அரசியல் பயில்வோர்க்கு தெளிவுற விளக்குகிறது இந்த நூல்.


தொடக்கத்தில் ஏதோ ஆங்கிலப்படத்தின் டப்பிங் போல ஒரு உணர்வு ஏற்பட்டாலும் கட்டுரையின் அடுத்தடுத்த கட்டங்களில் நிகழ் அரசியல் போக்கினை விவரிக்கும் யதார்த்தமான அனுகுமுறையால் மாயவலையில் வாசகர்களையும் சிக்கவைக்கிறார் நூலாசிரியர் கார்த்திகேயன்.


ஒரு நாட்டிலிருந்து பிறநாடுகளுக்குச் சென்று தங்கள் நாட்டின் பெருமைகளைப் பேசிய தூதுவர்களும், மதங்களை உருவாக்கிய மூலவர்களும் அவர்களது சீடர்களும்தான் உலகின் முதல் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள் என்கிறார்.


"மன்னர்களின் விருப்பமான மதமாக வேதிய மதம் இருந்தது. இதற்கு மூலவர்கள் இல்லை. இதை உருவாக்கிய தனி நபர் என்று எவரும் இல்லை. ஆனால் அந்த மதத்திற்கு ஒரு நோக்கம் இருந்தது. அதை உருவாக்கிய கூட்டம் மட்டுமே அனைத்து இடங்களிலும் அதிகார மையமாக செயல்பட வேண்டும் என்பது"


"அவர்கள் பரவிய அனைத்து இடங்களிலும் உள்ள சிறுதெய்வ வழிபாடு முன்னோர் வழிபாடு புகழ் வாய்ந்த அரசர்கள் என்று அனைத்தையும் உள்வாங்கி கதைகள் புனைந்து தனிநபர்களை கடவுளாகவும் வழிபாட்டு முறைகளை தங்கள் மதத்தின் ஒரு அங்கமாகவும் நிலைநாட்டினர்."


"இந்த மார்க்கெட்டிங் வெற்றிக்காக அவர்கள் உருவாக்கிய கதைகள் எத்தனை புராணங்கள் எத்தனை இதிகாசங்கள் எத்தனை .... உளவியல் உத்திகள் எத்தனை என்று அறியும்போது மிகப்பெரிய மலைப்பு ஏற்படுகிறது" என்று பிராமணியத்தின் தந்திரமான மார்க்கெட்டிங் உத்திகளை சிறப்பாக விளக்குகிறார் ஆசிரியர்.


ஷாட்கன் அப்ரோச், கொரில்லா மார்க்கெட்டிங், அஃபிலியேட் மார்க்கெட்டிங், இன்ஃபுளூயன்ஸ் மார்க்கெட்டிங் என்று எத்தனையோ வகை மார்க்கெட்டிங் இருந்தாலும் "கூட்டைவிட குருவி தான் முக்கியம்" என்று கன்டென்ட்டின் முக்கியத்துவத்தைத் தெளிவாக்குகிறார். 


"..... எப்பப்பாரு பிரச்சாரம் செய்யக் கூடாது. விவாதம் தான் செய்ய வேண்டும். சண்டை செய்யவேண்டும். சேட்டைகள் செய்ய வேண்டும். மக்களோட பல்ஸ் உணர்ந்தவராகப் பேச வேண்டும். இது உருவாக்கும் சாவோஸ் மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும். நேரடி பிரச்சாரம் இறுதியில் தான் செய்ய வேண்டும்" என்று இன்பௌண்ட் மார்க்கெட்டிங்கைவிட அவுட்பௌண்ட் மார்க்கெட்டிங்கே வீரியம் மிக்கது என்று விளக்குகிறார்.


தேர்தல் வெற்றிக்கு நம் அணி உருவாக்கும் கூட்டணியை விட எதிரி உருவாக்க முயலும் கூட்டணியை உடைக்க வேண்டிய அவசியம் குறித்து உளவியல் கூட்டணி என்ற கட்டுரையில் விளக்குகிறார். மேலும் உளவியல் பகுப்பாய்வு அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.


"நம்பகத்தன்மை, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், 

பொய் பேசாமல் இருத்தல், ஒப்புவித்தலாக இல்லாமல் இயல்பாகப் பேசுவது‍, அழுத்தம் திருத்தமாக 2, 3 பாய்ண்ட்களைப் பேசுவது, தவறுகளை ஒப்புக் கொள்வது" உள்ளிட்ட

மனதைத் தூண்டும் பேச்சு வன்மைக்குரிய 10 கட்டளைகளைப் பரிந்துரைக்கிறார்.  


மொத்தத்தில் ஏவாளை ஃபர்பிடண்ட் ட்ரீயின் ஆப்பிள் பழத்தைத் திண்ண வைத்த செற்பெண்ட்டும் (பாம்பும்), ஹாலோ எஃபக்ட் தந்திரத்தால் மோடி, டிரம்ப் வகையறாக்களை தேசத்தின் உச்சத்தில் அமர்த்திய ஊடகங்களும் பின்பற்றிய சித்து வேலை ஒன்று தான். அது தான் மார்க்கெட்டிங்.


இந்த மார்க்கெட்டிங் கலையை சமத்துவத்தையும் சமூகநீதியையும் காக்க களத்தில் நிற்கும் தம்பிகளும், தொண்டர்களும், தோழர்களும், அண்ணன்களும், தலைவர்களும் அறிந்து புரிந்து செயலாற்ற பயன்படுத்திக் கொள்ள இப்புத்தகம் பயன்படும்.


- மாணிக்க முனிராஜ்

02:07, 12.1.2021

Tuesday, 5 January 2021

சிலேட்டுக்குச்சி - நூல் மதிப்புரை


 *புத்தக மதிப்புரை*

----------------------------------------

புத்தகத்தின் பெயர்: சிலேட்டுக்குச்சி

ஆசிரியர்: சக.முத்துக்கண்ணன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

பக்கங்கள்: 112

விலை: ₹110


"நீரைத் தேடி ஓடும் வேரைப் போல தன்னை ஒத்த மனவயது கொண்ட ஆசிரியர்களை, பெற்றோர்களைத் தேடி அலைகிறார்கள் குழந்தைகள்" என முன்னுரையில் தன்முகம் காட்டும் முத்துக்கண்ணன், தன் பெயருக்குப் பிறப்பால் வந்த (சக) முன்னெழுத்துகளின் இயல்பைப் போலவே நூல் முழுதும் குழந்தைகளின் பிரியமான ஒரு சகாவாகவே திரிகிறார்.

குழந்தைகளைப் பொறுத்தவரை "சும்மா சொல்வது" வேறு "பொய் சொல்வது" வேறு. அப்படி சும்மா சொன்ன மனோஜால் ஆசிரியர் படும் பாடு, 

ஆசிரியர்களுக்கு விதவிதமாக மாணவர்கள் சூட்டும் 'பட்டப்பெயர்கள்',

"பெய்யெனப் பெய்து தீர்த்த" 200 மில்லி லிட்டர் நியாயம் கொண்ட ஒண்ணுக்கு சம்பவம்,

சட்டையின் உள்பக்கம் எழுதிய பிட்டு போன்றவையெல்லாம் சிரிப்பால் ஒரு புறம் சிந்திக்க வைக்கின்றன.


மறுபுறம், வகுப்பில் கடைசி மாணவனான அன்சாரியின் கைகளில் கலர் சாக்பீஸ் கொடுத்து பின்னர் அவனிடம் வாங்கி எழுதி அவனைப் பெருமைப்படுத்திய பன்னீர் சாரும், 

"எல்லாஞ் சாப்டிங்களா?" எனக் கேட்டு விட்டு அட்டன்டன்ஸ் எடுக்கும் ராமரய்யாவும், 

கண்பார்வைக்கு இணையாக காதுகளிலேயே பார்க்கும் திறம் படைத்த முருகன் சாரும், 

பெண் குழந்தைகளின் மானம் காத்த சுந்தர் சாரும், கதைகளின் வாசற்கதவைத் திறந்தவிட்ட மாதவன் ஐயாவும்,

குழந்தைகளுக்கான பிரச்சனைகளைச் சொல்ல வாய்ப்பு தந்து அவர்களுக்காக பிரே பண்ணும் அற்புதம்மேரி டீச்சரும்,

எப்போதும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியராக விளங்கும் பஞ்சம்மா டீச்சரும் குழந்தைகளைக் கையாளும் விதமும், அவர்களின் மீது அன்பைச் சொரியும் விதமும் கண்களைக் குளமாக்குகின்றன.


'தொக்குச்சிய்யம்', 'தொண்ணச் சோறு' போன்ற வெவ்வேறு பதங்களின் விளக்கமும், அவற்றின் மூலம் வெளிப்படும் ஆழமும் அழுத்தமுமான உணர்வுகளும் சொற்களுக்கு உயிருள்ளதை உரக்கச் சொல்கின்றன.


"ஆசிரியரின் அர்ப்பணிப்பு மிக்க எந்தவொரு வகுப்பிலும் மாணவர்கள் பொய் பேசுவதில்லை. இது கட்டுப்பாடின்றி தானே நிகழும். கட்டுப்படுத்தி எதைத்தான் நிரந்தரமாக சாதித்து விட முடிகிறது?" என்கிறார். எவ்வளவு பெரிய உண்மை. இன்றைக்கு கட்டுப்பாடு மிகுந்ததாகச் சொல்லப்படும் பள்ளிக்கூடத்தை நோக்கி ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது.


'ஆணுக்குள் ஒரு எக்ஸ்' என்ற 10 ஆவது கட்டுரையில், அரசு சீருடை அணிந்த மாணவர்களைத் தனது காரில் சுற்றுலா அழைத்து வந்த அந்தப் பெயர் தெரியாத ஆசிரியர், ஏழெட்டு வயது பெண் குழந்தை வயிற்றால் கழிந்ததால் கேன் வாட்டரைக் கொண்டு சுத்தம் செய்ததைச் சொல்லும் இறுதி வரிகளில் இப்படி முடிக்கிறார், "அந்தப் பொண்ணு மட்டும் யூனிஃபார்ம்ல இல்லாட்டி அவங்கப்பான்னு நெனச்சிருப்பேங்க"... "அவரு பிள்ளெங்களுக்கு செஞ்சா அப்பான்னு சொல்லலாம். அடுத்தவங்க பிள்ளெங்களுக்கு செஞ்சா அம்மான்னுதானே சொல்லணும்"


இந்நூலின் வகைமை பெயரளவிற்கு கட்டுரைத் தொகுப்பு என்று இருந்தாலும் 17 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பைப் போலவே வாசிப்பவர்களுக்கான அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். ஒவ்வொரு கதையின் முடிவிலும் மனதில் தைப்பதைப் போன்ற ஒரு கிளைமாக்ஸில் முடிக்கிறார் ஆசிரியர்.


குடிக்கும் அப்பாக்களைக் கண்டறிய கண்ணை மூடி கையுயர்த்தச் சொல்கிறார். வகுப்பில் ஒரே ஒரு மாணவனைத் தவிர எல்லோரும் கையை உயர்த்துகின்றனர். அந்த ஒரு மாணவனை மட்டும் தனியே அழைத்து கேட்கிறார். "அவனுக்கு அப்பா இல்லை"! இன்றைய அப்பாக்களின் குடிநோயால் நாளைய சமூகமே அழுகிப் பாழாகும் அவலநிலையை எதிர்நோக்கி உள்ளதை 'மணல் கடிகாரம்' என்ற அத்தியாயயம் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது.


"விட்டு விடுங்கள் வீதிகள் பார்த்துக்கொள்ளும்" என்று கோடைவிடுமுறையில் குழந்தைகளின் சுதந்திரத்திற்காக அரை கூவல் விடுக்கிறார். எத்தனைப் பெற்றோர் காதுகளில் இது சென்று சேரும் என்பது தெரியவில்லை.


தான் குழந்தையாக இருந்தபோது தனக்கு நேர்ந்ததையும், தன்னிடம் தன் வகுப்பில் உள்ள குழந்தைகள் வழியாகத் தான் உணர்ந்ததையும் மிகுந்த நகைச்சுவையோடும், குழந்தைகள் மீது சமூகம் காட்டவேண்டிய அலாதியான அக்கரையோடும் எழுதப்பட்டுள்ள நூல் இது.


குழந்தைகளின் குழந்தைமையை மேலும் புரிந்துகொள்ளவும், அவர்களின் சுற்றமறிந்து, சூழலறிந்து அவர்களுக்குத் தேவையானதை, தேவையான அளவில், தேவையான நேரத்தில் ஊட்டக் கூடிய பக்குவத்தை மேம்படுத்திக் கொள்ளவும், தாங்கள் நழுவவிட்ட இடங்களில் தங்களை சரிப்படுத்தி நிலைநிறுத்திக்கொள்ளவும் ஆசிரியராகப் பணிபுரிகிற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் 'சிலேட்டுக்குச்சி'.


- மாணிக்க முனிராஜ்

அறுபடாத தொடர் சங்கிலி

மாற்றத்தின் மணற்கேணியில் தொட்டனைத்து ஊறிப் பரவிய உலகின் பல படைப்புகளை உளமாற நுகர்வது  வாசிப்பு வாசிப்பின் பகிர்மாணத்தில் உழைப்பின் துளிகளில்...